இசைவாது வென்ற படலம் இறைவனான சொக்கநாதர் இசைப்போட்டி நடைபெற்றபோது ராசராச பாண்டியனின் மனதில் நடுநிலைமையைத் தோற்றுவித்து பாணபத்திரரின் மனைவியை வெற்றி பெற்றதாக அறிவிக்கச் செய்ததைப் பற்றி கூறுகிறது.
பாணபத்திரரின் மனைவிக்கும், ஈழத்து பாடினிக்கும் இடையே ஏற்பட்ட இசைப்போடி, ராசராசபாண்டியன் நடுநிலைமை தவறியது, இறைவனார் திருமுன்னர் இசைபோட்டி நடைபெற்றது, இராசராசபாண்டியன் நடுநிலைமையுடன் தீர்ப்பு கூறியது ஆகியவை இதில் விளக்கப்பட்டுள்ளன.
இசைவாது வென்ற படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் நாற்பத்தி நான்காவது படலமாக அமைந்துள்ளது.
இசைப்போட்டி
வரகுண பாண்டியனின் மகன் இராசராசபாண்டியன் மதுரையை ஆட்சி செய்தபோது பாணபத்திரரின் மனைவி இறைவனின் புகழினைப் பாடி வந்தாள்.
இராசராசனின் ஆசைநாயகிகளில் ஒருத்தி இசைபாடுவதில் வல்லவள். அவளின் இசையில் இராசராசபாண்டியன் மயங்கிப் போயிருந்தான்.
ஒரு சமயம் இராராசபாண்டியனின் ஆசை நாயகிக்கு பாணபத்திரரின் மனைவி மீது இசைபாடுவதில் பொறாமை ஏற்பட்டது.
எப்படியாவது பாணபத்திரரின் மனைவி இசைபாடாமல் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தாள். தன்னுடைய மனக்கருத்தை இராசராசபாண்டியனிடம் தெரிவித்தாள்.
பாண்டியனும் தன்னுடைய ஆசைநாயகியின் விருப்பதை நிறைவேற்ற திட்டம் ஒன்றை வகுத்தான்.
அதன்படி இலங்கையிலிருந்து இசைபாடினி ஒருத்தியை பாண்டிய நாட்டிற்கு வரவழைத்தான்.
பின் பாணபத்திரரின் மனைவியிடம் இராராசபாண்டியன் “ஈழத்திலிருந்து இசைபாடினி ஒருத்தி வந்துள்ளாள். அவள் தன்னை இசையில் வெல்ல உங்கள் நாட்டில் யாரும் இருக்கின்றனரா?. என்று கேலியாகவும் ஆணவமாகவும் பேசுகிறாள்.
ஆதலால் நாளை நடைபெறும் இசைப்போட்டியில் நீ கலந்து கொண்டு அவளை வெல்ல வேண்டும்” என்று கூறினான்.
இதனைக் கேட்டதும் பாணபத்திரரின் மனைவி “அரசே, சொக்கநாதரின் திருவருளால், நான் நாளை நடைபெறும் இசைப்போட்டியில் வெல்லுவேன்” என்று கூறினாள்.
பின்னர் இராசராசபாண்டியன் ஈழத்து பாடினியிடம் “நீ நாளை நடைபெறும் இசைப்போட்டியில் பாணபத்திரரின் மனைவியை எதிர்த்து பாடு. நீ எவ்வாறு பாடினாலும் நீயே வெற்றி பெற்றதாக நான் அறிவிப்பேன்.” என்று கூறினான்.
பாண்டியன் நடுநிலைமை தவறுதல்
மறுநாள் காலையில் அரசவையில் இசைப்போட்டி ஆரம்பமானது. ஈழத்து பாடினி மிகுந்த இறுமாப்புடன் ஆரவாரத்துடனும் அரசவைக்கு வந்தாள்.
பாணபத்திரரின் மனைவி அமைதியாக இசைபோட்டி நடைபெறும் இடத்திற்கு வந்தாள். ஈழத்து பாடினி அரசன் கொடுத்த தைரியத்தில் பாணபத்திரரின் மனைவியிடம் வம்பிழுத்தாள்.
பாணபத்திரரின் மனைவி “நான் உன்னிடம் இசைவாது செய்ய வந்தனே ஒழிய சண்டையிட வரவில்லை” என்று கூறினாள்.
உடனே இராசராசபாண்டியன் “பெண்களே, நீங்கள் இருவரும் சண்டையிடுவதை விட்டுவிட்டு பாடல்களைப் பாடுங்கள்” என்று கூறி இசைப்போட்டியைத் தொடங்கி வைத்தான்.
இருவரும் இசைப்பாடல்களை தனித்தனியே பாடினார்கள். இருவரின் பாடல்களையும் கேட்ட அவையோர் பாணபத்திரரின் மனைவியின் பாடல்கள் நன்றாக இருந்ததாகக் கூறினர்.
ஆனால் இராசராசபாண்டியன் ஈழத்துப் பாடினி வென்றாள் என்று கூறினான்.
இருவேறு கருத்து வந்ததால் பாண்டியன் மற்றொரு நாளுக்கு இசைப்போட்டியை ஒத்தி வைத்தான்.
இறைவனார் திருமுன்னர் இசைவாது நடைபெறுதல்
பாண்டியன் தன்னைப் புகழ்ந்து பேசியதால் ஈழப்பாடினி இறுமாப்புடன் தன்னிடத்திற்குச் சென்றாள். பாணபத்திரரின் மனைவி சொக்கநாதரைச் சரணடைந்தாள்.
“மதுரையின் மண்ணினை சுந்தர பாண்டியனராக ஆட்சி செய்த பெருமானே, இராசராசபாண்டியன் நடுநிலைமை தவறிப் பேசுகிறான். தேவரீர் திருவருள் புரிந்து என்னுடைய துன்பத்தைப் போக்கியருள வேண்டும்” என்று மனமுருகி வழிபட்டாள்.
அப்போது ஆகாயத்தினின்று “பெண்ணே, அஞ்சற்க. நீயே வெல்லும்படி அருளுவோம்” என்று திருவாக்கு கேட்டது.
மறுநாள் பாண்டியன் அவ்விருவரையும் அவைக்கு அழைத்துப் போட்டியிட்டுப் பாடும்படி கூறினான். இருவரும் பாடினர்.
முதல்நாள் சொல்லியது போலவே ஈழத்துப்பாடினி வென்றாள் என்று பாண்டியன் கூறினான். அவையோரும் பாண்டியன் கூறியதை ஆமோதித்தனர்.
உடனே பாணபத்திரரின் மனைவி “அரசே, உன்னுடைய சொல்லையே அவையோரும் எதிரொலிக்கின்றனர். ஆதலால் நாளை இடம் மாறி ஆடிய ஆடலரசனின் முன்னர் நாங்கள் பாடுகின்றோம். அங்கு வந்து யார் இசைவாதில் வென்றது என்று கூறுங்கள்” என்று கூறினாள்.
அதற்கு அரசன் உட்பட எல்லோரும் உடன்பட்டனர்.
இறைவனாரின் திருவாக்கு
மறுநாள் திருகோவிலில் இசைப்போட்டி ஆரம்பமானது. அங்கே சொக்கநாதர் இசைப்புலவராய் அங்கு வந்தார். அரசன் உட்பட எல்லோரும் அவரை வரவேற்றனர்.
ஈழப்பாடினி முதலில் பாடினாள். பின்னர் பாணபத்திரரின் மனைவி பாடினாள்.
இறைவனாரின் திருவருளினால் இராசராசபாண்டியன் நடுநிலைமையில் இருந்து பாணபத்திரரின் மனைவி வென்றதாக அறிவித்தான்.
அவையோரும் அதனை ஆமோதித்தனர். உடனே அங்கிருந்த இசைப்புலவரான சொக்கநாதர் எழுந்து “இது அற்புதம், இது அற்புதம்” என்று கூறி மறைந்தார்.
இராசராசபாண்டியன் தன்னிடம் ஏற்பட்ட மனமாற்றம் மற்றும் இசைப்புலவராய் வந்தது சொக்கநாதர் என்பதை உணர்ந்தான்.
பின்னர் ஈழப்பாடினியின் தோளில் பாணபத்திரரின் மனைவியை அமரச் செய்து பாணபத்திரரின் மனைவியின் வெற்றியை உறுதி செய்தான்.
பாணபத்திரரின் மனைவிக்கும், ஈழப்பாடினிக்கும் பரிசுகள் பல வழங்கினான்.
அதன்பின் இராசராசபாண்டியன், சுகுண பாண்டியன் என்ற மகனைப் பெற்று இனிது வாழ்ந்திருந்தான்.
இசைவாது வென்ற படலம் கூறும் கருத்து
எவரின் சூழ்ச்சியும் இறைபக்தர்கள் முன்னால் எடுபடாது என்பதே இசைவாது வென்ற படலம் கூறும் கருத்தாகும்.
முந்தைய படலம் பலகை இட்ட படலம்
அடுத்த படலம் பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்
Comments
“இசைவாது வென்ற படலம்” அதற்கு 4 மறுமொழிகள்