இந்தியப் பெரு நதிகள்

20000 சதுர கிலோ மீட்டருக்கு மேல் வடிநிலப்பரப்பை கொண்ட இந்தியப் பெரு நதிகள் 14 உள்ளன. இந்தியப் பெரு நதிகள் பற்றிய‌ முக்கிய அம்சங்கள் ஆறுவாரியாக கீழே கூறப்பட்டுள்ளன‌.


சிந்து நதி

வடக்கே இமயமலைத் தொடரில் சைனாவின் ஆதிக்கத்திலுள்ள திபெத் நாட்டில் மானசரோவர் என்ற பிரசித்தி பெற்ற தடாகத்தின் அருகில் 5180 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகிறது.

இந்த ஆறு ஜீலம், ஜீனாப், ரவி, பியாஸ், சட்லெஜ் என்ற 5 முக்கிய உபநதிகளைக் கொண்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர், ஹிமாலயப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களின் வடிநிலங்களில் முறையே 60, 16, 16, 3, 5 சதவீதம் வியாபிக்கிறது. சுமார் 7339 டி.எம்.சி. நீர் வளத்தை இந்திய நாட்டிற்குச் சேர்க்கிறது. பின் பாகிஸ்தான் வழியாக அரபிக்கடலில் சேருகிறது.

 

கங்கை நதி

இந்திய மக்களின் கலாச்சாரத்தையும் ஆழ்ந்த பக்தி மார்க்கத்தையும் ஒருங்கே வளர்த்து, அனைவராலும் போற்றி வழிபடப்படும் ஆறு கங்கை.

வடக்கே இமயமலையையும் தெற்கே விந்திய மலைத் தொடரையும் தொட்டு வியாபித்திருக்கும் இந்த ஆற்றின் வடிநிலமோ இந்திய நாட்டின் நிலப்பரப்பில் 26.3 சதவீதம் ஆகும்.

இவற்றின் உபநதிகள் நேபாள நாட்டிலும், தெற்கே பங்களாதேஷ் நாட்டிலும் வியாபித்திருக்கின்றன. பெரும்பகுதி கங்கை இந்தியாவிலே இருந்தாலும் அண்டை நாடுகளும் அதனைச் சொந்தம் கொண்டாடுகின்றன.

இமயமலைத் தொடர்களில் ஹரித்துவார், பத்ரிநாத், ரிஷிகேஷ் முதலியப் புனித யாத்திரைப் படிகளைத் தாண்டி கங்கோத்ரி என்ற இடத்தில் 7010 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகி, கடைசியில் பங்களாதேஷ் நாட்டில் புகுந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.

 

பிரம்மபுத்திரா

இந்திய நாட்டில் உள்ள ஆறுகளில் ஆண் பெயர் கொண்ட ஒரே நதி இது. இதுவும் இமயலமலைத் தொடர்களில் கைலாய மலைச்சாரலில் 5150 மீட்டர் உயரத்தில் திபெத் நாட்டில் உற்பத்தியாகிறது.

இமயமலையின் வடக்குப் பிரதேசங்களில் 1700 கிலோமீட்டருக்கு மேல் ஓடி, வடகிழக்குப் பகுதியில் அஸ்ஸாம் மாநிலத்தில் நுழைகிறது. பின் கங்கையிலேயே கலந்து விடுகிறது.

இது ஒரு முரட்டு ஆறு. திடீரென்று பெரு வெள்ளம் பெருகும். அழிவு ஏற்படும், ஆற்றின் போக்கே மாறிவிடும். மலை உயரத்திலிருந்து கங்கை சமவெளியை அடையும் முன் பல மீட்டர் அளவில் நீர் வீழ்ச்சிகளை ஏற்படுத்தி பாயும் வேகம் அதிகமாகி அழிவுக்குக் காரணமாகிறது.

 

சபர்மதி

மத்திய இந்தியாவின் ஆரவல்லி மலைத் தொடர்களில் உற்பத்தியாகி ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் வழியாக ஓடி மேற்கே அரபிக் கடலில் கலக்கிறது. மகாத்மா காந்தி தன்னுடைய ஆசிரமத்தை இதன் கரையில் நிறுவிப் பல ஆண்டுகள் அமைதியான சூழ்நிலையில் வாழ்ந்தார்.

 

மாஹி

இந்த ஆறு விந்திய மலைத் தொடரில் 500 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் வழியாக ஓடி அரபிக் கடலில் கலக்கிறது.

 

நர்மதா

இந்த ஆறு மத்தியப் பிரதேசத்தில் 900 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகி மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் வழியாக ஓடி, அரபிக் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் கரையில்தான் ஆதி சங்கரர் அவர் குருவைத் சந்தித்து உபதேசம் பெற்றார் என்று சொல்லப்படுகிறது. காடு, மலைகளில் பள்ளத் தாக்குகளில் ஆறு ஓடுகிறது. ஓங்காரேஸ்வரர் புனிதத் தலம் இந்த ஆற்றின் கரையில் இருக்கிறது.

 

தபதி

இதுவும் மேற்கே பாயும் ஆறு. மத்தியப் பிரதேசத்தில் 730 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகி 724 கிலோமீட்டர் மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் வழியாக ஓடி, அரபிக் கடலில் கலக்கிறது.

இந்த ஆற்றுப் படுகையில் இதுவரை நீர் வளத்தைப் பயன்படுத்தப் பெரிய திட்டங்கள் செயலாக்கப்படவில்லை. யுகை என்ற இடத்தில் ஒரு பெரிய நீர்த் தேக்கம் கட்டியதில், அது நீர்ப் பாசனத்திற்கும் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கும் பயனுள்ளதாகச் செயல்பட்டு வருகிறது.

 

சுபர்ணரேகா

இந்த ஆறு 600 மீட்டர் உயரத்தில் பீகார் மாநிலத்தில் உற்பத்தியாகி ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய இரு மாநிலங்களுக்கு எல்லையாக ஓடிப் பின் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.

பருவகாலத்தில் வெள்ளம் பெருகினும் கோடையில் மிகவும் குறைந்த நீர் வளமே இருக்கும். நீர்ப்பாசனம் ஓரளவுக்குக் கிடைக்கிறது. ஜாம்ஷெட்பூர் என்ற தொழில் வளர்ந்த நகரம் இதன் கரையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரஹ்மணி

இந்த ஆறு பீகார் மாநிலத்தில் ராஞ்சி என்ற மாவட்டத்தில் 600 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகி மத்தியப் பிரதேசம், ஒரிசா மாநிலங்களில் பாய்ந்து, வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. மூன்று உபநதிகளைக் கொண்டது. நீர்ப் பாசனமும் அதிகமாக வளரவில்லை.

 

மகாநதி

இந்த ஆறு மத்தியப் பிரதேசத்தில், ராய்ப்பூர் மாவட்டத்தில் ஒரு சிறு ஓடையாகத் தோன்றி மலைகளுக்கிடையே பள்ளத் தாக்குகளில் பாய்ந்து, ஒரிசா மாநிலத்தில் பரந்த டெல்டாவை உண்டாக்கி, வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

மத்தியப் பிரதேசத்திலும் ஒரிசா மாநிலத்திலும் விரிந்த வடிநிலம் கொண்டுள்ளதால் பருவமழைக் காலத்தில் பெரு வெள்ளம் பெருகி, ஒரிசா டெல்டா பகுதியில் அடிக்கடி பெருத்த சேதம் உண்டாக்கி வந்தது.

வெள்ளக் கட்டுப்பாட்டிற்கென்றே மத்திய அரசால் 1951-ஆம் வருடம் துவங்கி கட்டுவிக்கப்பட்ட ஹிராகுட் என்ற அணை உலகத்திலேயே மிக நீளமான மண் அணை என்ற சிறப்புப் பெற்றது. இந்த ஆறு பல இலட்சக்கணக்கான ஏக்கர்களுக்கு பாசனம் செய்யக்கூடிய நீர் வளத்தைக் கொண்டது.

 

கோதாவரி

தென்னிந்தியாவில் பாயும் ஆறுகளில் பெரிய ஆறு தென்னிந்திய கங்கை என்று குறிப்பிடப்படுவதும் உண்டு. இந்த ஆறு மஹராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் என்ற மாவட்டத்தில் உற்பத்தியாகி மஹாராஷ்டிராவிலும், மத்தியப் பிரதேசத்திலும், கர்நாடகா மாநிலத்திலும், ஒரிசா மாநிலத்திலும், ஆந்திரா மாநிலத்திலும் பல கிளை நதிகளுடன் வளர்கிறது.

கடைப் பாகத்தில் ஒரு பெரிய டெல்டா பிரதேசத்தையும் உண்டாக்கி வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. முக்கிய உபநதிகள் 10. நாசிக் என்ற ஊரும், பத்ராச்சலம் என்ற ஊரும் இந்நதிக்கரையில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஆன்மீகத் தலங்களாகும்.

 

கிருஷ்ணா நதி

கிருஷ்ணா நதி மஹாராஷ்டிரா மாநிலத்தில் மஹாபலேஷ்வர் என்ற இடத்தில் 1360 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென்மேற்குப் பருவக் காற்றினால் பெய்யும் மழையினால் நீர் வளம் பெருகி, பின் கர்நாடக மாநிலம் வழியே ஆந்திரப் பிரதேசத்தில் நுழைந்து, வங்காள விரிகுடா கடலில் விழுகிறது.

இந்த ஆற்றின் மேல் ஆந்திரப் பிரதேசத்தில் கட்டப் பட்டிருக்கும் ஸ்ரீசைலம், நாகார்ஜுனா சாகர் நீர்த்தேக்கங்கள் புகழ்பெற்றவை. இதன் உபநதிகளில் கட்டப் பட்டிருக்கும் கடப்பிரபா, மலப்பிரபா, துங்கப்பத்திரா நீர்த்தேக்கங்களும் நீர்ப்பாசனத்தை விரிவுபடுத்த மேற்கொண்டவை.

இந்த ஆற்றின் கடைப் பகுதியிலும் சுமார் 10 இலட்சம் ஏக்கர் பயிராகும் டெல்டா பகுதி செழிப்பானதும் வளமானதுமாகும். இந்த ஆறு காவேரிக்கு அடுத்தபடி, பாயும் மாநிலங்களில் அதன் நீர் வளத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சனைகள் மிகுந்த ஒன்று.

ஆற்றின் நீர் எல்லாப் பகுதிகளுக்கும் போதியதாக இல்லையாதலால் பற்றாக்குறையும் அதனால் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. கிருஷ்ணா நதி நீர் ஸ்ரீசைலம் அணையிலிருந்து சோமசீலா வழியாக வெட்டப்பட்ட கால்வாய்கள் வழிப் பாய்ந்து ஆந்திர மாநிலத்தில் 5 இலட்சம் ஏக்கர் பாசனம் பெறுவதோடு, சென்னை குடிநீருக்காக 12 டி.எம்.சி நீர் தமிழ்நாடு எல்லையில் சேரும்படி திட்டமிடப்பட்டு, செயலாக்கப்பட்டுள்ளது.

 

வடபெண்ணையாறு

கர்நாடக மாநிலத்தில் சென்னகேசவ மலைத் தொடர்களில், நந்தி குன்றில் தோன்றி, ஆந்திரப் பிரதேசம் வழியாக வங்காள விரிகுடாக் கடலில் சேருகிறது.

ஆறு உபநதிகளையும் 55213 சதுர கிலோமீட்டர் பரப்பளவு வடிநிலமுமாகக் கொண்டிருப்பினும் இந்த ஆற்றின் நீர் வளம் குறைந்ததே. காரணம் தென்மேற்குப் பருவக் காற்றினால் மழை அதிகம் பெறாத பாகமாதலால் வடகிழக்குப் பருவக் காற்றினால் ஓரளவு கடைப் பகுதியில் நீர் பெருகி நெல்லூர் (1875), சங்கம் (1886) என்ற இரண்டு அணைக்கட்டுகளினால் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது.

 

காவிரி

தமிழ்நாட்டின் உயிர் நாடி. கர்நாடகா மாநிலத்தில், குடகு மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இடையே, பிரம்மகிரி மலையில் 1340 மீட்டர் உயரத்தில் தலைக்காவிரி என்ற இடத்தில் உற்பத்தியாகிறது.

கர்நாடகா மாநிலத்தில் பாய்ந்து, கேரள நாட்டில் உற்பத்தியாகும் கபினி, பவானி, அமராவதி என்ற உபநதிகளும் மற்ற உபநதிகளும் சேர்ந்து நீர்வளத்தைப் பெருக்க, தமிழ்நாட்டிலும் ஓடிப் பின் கடைப் பகுதியில் பல கிளைகளாகப் பிரிகிறது.

ஒரு பரந்த டெல்டா பகுதியை வளர்த்துச் சிறு ஆறாக காவிரிப் பூம்பட்டினத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. இதன் போக்கில் ஆங்காங்கு கிளைவிடுவதும் மறுபடியும் சேர்ந்து பாய்வதும் சிறப்பு. இதன் நீர் வளம் பாசனத்திற்கும் மற்ற உபயோகங்களுக்கும் பற்றாமையால் மாநிலங்களுக்கிடையே பிரச்சினைகள் உண்டாகி வருகின்றன.

Comments are closed.