என்ன சார், நீங்க படிக்க ஆரம்பிக்கச் சொன்னீங்க!
எதையெதையோ தள்ளுபடி பண்ணச் சொன்னீங்க!
படி அப்படின்னு சொன்னீங்க!
அப்புறம் மறுபடியும் படியென்று சொன்னீங்க!
இப்ப என்னன்னா இன்னும் கொஞ்சம் படி எனத் தலைப்பு போடுறீங்க!
இப்படி படி! படி! என்று சொல்லிச் சொல்லி, திரும்பத் திரும்ப நீங்கள் ஆசிரியர் என்பதனை எங்களுக்கு நிரூபித்துக் கொண்டு இருக்கின்றீர்கள் என நீங்கள் நினைப்பது எனக்குத் தெரியும்.
படிங்க அய்யா
ஏற்கனவே நான் ‘கற்கை நன்றே‘ எனும் கட்டுரையில் திரிசிபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணவர்தான் தமிழ்த் தாத்தா உ.வே.சா என்பதனை எழுதியிருந்தேன்.
தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சாமிநாதையர் அவர்கள் அழியும் நிலையில் இருந்த தமிழ் நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் பலவற்றை ஊர் ஊராகச் சென்று சேகரித்தார். அவற்றை எளிதில் மற்றவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் எழுதி வெளியிட்டார்.
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி உள்ளிட்ட பல நூல்களை அவர் வெளியிட்டதால்தான் இன்று நாம் பழந்தமிழர் வாழ்வை அறிகிறோம்; தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்று நம்மால் பெருமிதத்துடன் சொல்ல முடிகிறது.
அவர் வயது முதிர்ந்த காலத்தில் திருநெல்வேலிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். அவருக்கு படிகளில் ஏறி இறங்க சிரமாக இருக்கும் என்று உதவிக்காக இளைஞன் ஒருவன் அவரோடேயே இருந்தான்.
அந்த ஒரு இலக்கியக் கூட்டத்தில் உ.வே.சா உரை நிகழ்த்தினார்.
அந்த உரையில் அவர் பேசியதனை அவரது நடையில் அப்படியே தருகிறேன்.
“என்னைப் பலகாலமாக வற்புறுத்தி நீ வாழ்வில் மேலேற வேண்டும். எனவே படி, படி என்று என்னைத் தூண்டி உற்சாகப்படுத்தி வந்தவர் எனது ஆசிரியர் திரிசிபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள்.
இப்பொழுது என்னை அப்படி ஊக்குவிப்பவர்கள் ஒருவரையும் காணேன். நான் நிரம்பக் கற்றவன் என்று நீங்களெல்லாம் என்னை மதித்து மரியாதை செய்யத் தொடங்கி விட்டீர்கள்.
இன்று நெல்லைக்கு வந்தபின் நான் கற்க வேண்டியவை இன்னும் பல உள்ளன. அவற்றையெல்லாம் கற்றுத்தான் மேனிலை எய்த வேண்டும் என்பதனையும் நான் உணர்ந்தேன்.
என்னைப் படி! படி! என்று சொல்ல எனது ஆசிரியப் பெருமானாகிய பிள்ளையவர்கள் இல்லாத குறையும் இன்று தீர்ந்தது. என்னை அழைத்து வந்தானே! ஒரு பிள்ளையாண்டான்! அவன் வயதிலும் உயரத்திலும் சிறியவன்தான்.
ஆனால் அவன்தான் இன்று என் ஆசிரியப் பெருமானின் இடத்தில் இருந்து, ரெயிலியில் நான் வந்து இறங்கியது முதல் இந்த மேடையில் நான் வந்து அமரும் வரை என் கூடவே துணையாக வந்து, ‘அய்யா படிங்க அய்யா! அய்யா பார்த்து படிங்க அய்யா! அய்யா மீண்டும் படிங்க அய்யா! அய்யா மேலும் படிங்க அய்யா’ என்று கூறி எனக்கு வழியும் காட்டி மேடைக்கு மேலேற வேண்டும் என்று சொன்னதுடன் அமையாது, மேலே கொண்டு வந்து உங்கள் முன்னிலையில் என்னை இந்த விழாவின் தலைமை பீடத்திலும் அமர்த்திச் சென்று விட்டான்” என்று சிரித்துக் கொண்டே, “படி! படி! படித்தால்தான் மேலே வரமுடியும்” என்றாராம்.
தமிழ் தாத்தாவே! தள்ளாடும் வயதான காலத்திலும், இன்னும் படிக்க வேண்டும் என்று எண்ணும் போது நாம் இன்னும் நிறையப் படிக்க வேண்டும் என்பது உண்மைதானே!
இன்னும் கொஞ்சம்
“ஆயிரம் விதமான உதைகளைக் கற்றவனைப் பார்த்து நான் பயப்படுவதில்லை. ஆனால் ஒரே மாதிரியான உதையினை ஆயிரம் முறை பயிற்சி செய்தவனைப் பார்த்தே நான் பயப்படுவேன்” என்று கராத்தே கலந்த தற்காப்புக் கலைகளின் மேதை மாவீரன் புருஸ்லி அவர்கள் சொன்னதாகக் கூறுவார்கள்.
எனவே எந்த ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டாலும் அதனை ஆழ்ந்த நுணுக்கங்களுடன் கற்றுக் கொள்ள வேண்டும். திரும்பத் திரும்ப அதில் நாம் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அது மட்டுமல்லாதது அதற்குத் தேவையான மற்றுமொரு உபாயம் நமக்கு சிறுவயது முதலே நம் தாயிடம் இருந்து ஊட்டப்படுகிறது.
சிறு குழந்தைகளுக்கு அம்மா நிலாச்சோறு ஊட்டுவதைப் பார்த்திருப்போம்.
குழந்தை நன்றாகச் சாப்பிட்டு அதன் பசி அடங்கிய நேரம், அது அடுத்த வாய் சாதத்தினை அன்னையிடம் இருந்து வாங்க மறுக்கும்.
அப்போது அம்மா என்ன சொல்லுவாங்க!
“என் தங்கம்! இன்னும் கொஞ்சம் சாப்பிடு! இன்னும் ஒரு வாய் மட்டும்!” என்று அந்தத் தாய் தன் குழந்தையைத் தாங்குவாள்.
இறுதியாக அந்தக் குழந்தை இன்னும் கொஞ்சம் உணவு பெற்றுக் கொள்ளும். அப்பொழுதுதான் அந்தத்தாயும் திருப்தி அடைவாள்.
அதைப் போலவே நீயும் இன்னும் கொஞ்சம் படி; நான் மகிழ்ச்சி அடைவேன் ஓர் ஆசிரியராக.
‘இன்னும் கொஞ்சம்’ அப்படிங்கிற வார்த்தை சாதாரண வார்த்தையல்ல, அது ஒரு மந்திரம். அந்த மந்திரத்தின் மகத்துவத்தை அடுத்தவாரம் இன்னும் கொஞ்சம் அலசுவோம்.
( படிப்பது எப்படி என்று படிப் படியாய்ப் படிப்போம்)
முனைவர் பொ.சாமி
வேதியியல் இணைப் பேராசிரியர்
வி.இ.நா. செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர்-626 001
கைபேசி: 9443613294
அடுத்தது உருப்படியாய் உயர – படிப்பது எப்படி?- பாகம் 7
முந்தையது மறுபடி – படிப்பது எப்படி?- பாகம் 5
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!