இன்றைய சமூக நிலை!

சூழ்நிலை, அரசியல், உழைப்பின்மை, பேராசை மற்றும் போலி நாகரீகம் இவைகளால் நமது சிறந்த வாழ்க்கை முறை சிதறடிக்கப்பட்டது.

இலவசமாகக் கொடுக்க வேண்டிய கல்வியையும் மருத்துவத்தையும் ஆட்சியாளர்கள் வியாபாரமாக ஆக்கினர்.

இவற்றிற்கெல்லாம் என்ன காரணம்?

நாம் சுய சார்புடைய மக்களாக இருக்க மறந்து, பிறரைச் சார்ந்திருக்கப் பழகி விட்டோம். இவற்றால் பொருளாதாரம் சீர் குலைந்தது.

ஒரு காலத்தில் எனக்கு தெரிந்து சில கிராமங்களில் மண்ணெண்ணெய் மற்றும் உப்பு இவ்விரண்டு பொருட்களை மட்டும் கடையில் வாங்குவார்கள்.

இன்றைய நிலை கடையை நோக்கிய வாழ்க்கையாகி விட்டது. கிராமத்தின் சுய சார்பினை அழித்துவிட்டோம். போலி நாகரீகம் என்ற போர்வையால் நாசமாகிப் போனோம்.

யுத்த காலங்களிலும் பஞ்சம் வந்த காலங்களிலும் அத்யாவசிய பொருட்கள் வழங்க ரேஷன் வழங்கப்பட்டது. இன்று ரேஷன் நித்தமும் கொடுக்கப்படுகின்றது.

வசதி படைத்தோரும் வசதி குறைந்தோரும் ரேஷன் கடை வாசலில் காத்திருக்கின்றனர். அங்கே சமூக நீதி பார்க்க முடிகின்றது. (காரணம் மலிவும் இலவசமும்)

நாம் போலி ஊடகங்களால் அறிவிழந்தோம்; உறவை இழந்தோம்; பழமையை துறந்தோம்; தாய்மொழியை மறந்தோம்.

அரசியல்வாதிகளால் மொழிப்பற்றில் அரசியல் புகுத்தப்படுகின்றது.

நாம் மனித நேயத்தை விட்டோம்; மொத்தமாக தேசத்தையேகூட மதிக்க மறக்கின்றோம். அந்நியரைப் போற்றுதல் என்பதை நாம் நாகரீகமாக நினைக்கின்றோம்.

நம்மை நாம் தாழ்த்திக் கொள்கின்றோம். ஆரசு பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளில் தமிழைத் தேட வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம்.

நகரமும் நரகமாகிவிட்டது. கிராமங்களில் வசிப்பதும் சிரமமாக உணர்கின்றோம்.

நம் தேவைக்கு நமக்கென இருந்ததை இழந்து விட்டோம்.

இன்றைக்கு உணவு, நீர் போன்ற அவசியத் தேவைகளுக்கு அண்ணாந்து பார்க்கும் நிலைக்கு நம்மை நம் எண்ணங்கள் கொண்டுவந்துவிட்டன.

பருவ காலங்கள் பற்றி இன்றைக்கு அறிபவர் யார்?

அதிகமான வெப்பம் மற்றும் அதிகமான மழை இவற்றிற்கு காரணம் சமநிலையை இழந்ததே ஆகும்.

நாம் சுய சார்பு இழந்து விட்டோம்; குடிக்க, உடுக்க, உண்ண என யாவற்றிற்கும் அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.

இயற்கையாக அவசியமானதை செய்ய வேண்டிய முறைகளை மாற்றி, விளம்பரத்திற்கும் ஓட்டுக்கும் செயல்பாடுகளை மாற்றியுள்ளனர்.

இப்போதாவது விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம்!

இல்லை என்றால்?

இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்
திருநின்றவூர் – 602024
கைபேசி: 9444410450

இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன் அவர்களின் படைப்புகள்