இயற்கையின் பரிசு வானவில் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வானவில்லானது எல்லா வயதினரையும் தன் அழகால் கவர்ந்து இழுக்கும்.
இதனுடைய அழகு கவிஞர்களையும், பாடல் ஆசிரியர்களையும், ஓவியர்களையும் கவர்ந்திழுத்து கவிதைகள், பாடல்கள் மற்றும் ஓவியங்கள் வடிவில் வெளிவந்திருக்கின்றது.
வானவில் பற்றி இக்கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
வானவில் என்பது ஒளியானது வானில் பல்வேறு வண்ணங்களாக வில் வடிவில் பிரிகை அடைவது ஆகும்.
வானவில் ஏற்படும்போது ஒளியில் எதிரொளிப்பு, ஒளி விலகல் மற்றும் ஒளிச்சிதறல் ஆகிய இயற்பியல் மாற்றங்கள் நிகழ்கின்றன.
சூரிய ஒளியானது காற்றில் உள்ள மழைத்துளிகளில் பட்டு ஒளிவிலகல், எதிரொளிப்பு மற்றும் ஒளிச்சிதறல் ஆகிய இயற்பியல் மாற்றங்களுக்கு உள்ளாகி ஏழு வண்ணங்களாக பிரிவடைகின்றது. இதனையே நாம் வானவில்லாகக் காண்கிறோம்.
வானவிலானது காலையிலும் மாலையிலும் சூரியனின் எதிர்திசையில் தோன்றும். அதாவது காலையில் மேற்கிலும், மாலையில் கிழக்கிலும் இது தோன்றும். நண்பகலில் வானவில் தோன்றாது.
வானவில்லானது மழைக்கு முன்னும், பின்னும் தோன்றும். வானத்தில் தோன்றும் வில்போன்ற அமைப்பினைக் கொண்டுள்ளதால் இது வானவில் என்று அழைப்படுகிறது.
வானவில்லில் காணப்படும் வண்ணங்கள்
வானவில்லில் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என கண்ணைக் கவரும் ஏழு வண்ணங்கள் காணப்படுகின்றன.
வானவில் உண்டாக இருக்க வேண்டியவை
வானில் எப்போதும் வானவில் தோன்றுவது இல்லை. வானில் வானவில் தோன்ற கீழே உள்ள காரணிகள் அவசியமானவை. அவை
காற்றில் மழைத்துளிகளும், வானின் ஒரு பகுதியில் சூரிய ஒளியும் தேவை. காற்றில் உள்ள மழைத்துளியானது முப்பட்டகமாகச் செயல்பட்டு சூரிய ஒளியை நிறப்பிரிகை அடையச் செய்து வானவில்லைத் தோற்றுவிக்கின்றது.
சூரியன் அடிவானிலிருந்து 40 டிகிரிக்கும் குறைவான கோணத்தில் இருக்க வேண்டும்.
மழைத்துளி ஓரிடத்தில் இருக்கும்போது அதனைக் காண்பவருக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட கோணம் 40 டிகிரி முதல் 42 டிகிரி வரை இருந்தால் வானவில்லை தெளிவாகப் பார்க்கலாம்.
வானவில்லை தெளிவாகப் பார்க்கலாம்.
17-ம் நூற்றாண்டு வரை வானவில் உருவாகும் விதம் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.
சர் ஐசக் நியூட்டன் வானவில் உருவாகும் விதம் மற்றும் அதில் உள்ள நிறங்கள் பற்றி முதலில் விளக்கினார். நியூட்டன் அறியும் முன்பு வரை வானவில்லில் ஐந்து நிறங்கள் இருந்ததாக கருதப்பட்டது.
ஒருவர் பார்க்கும் வானவில்லும் அருகில் இருப்பவர் பார்க்கும் வானவில்லும் வேறு வேறானவை ஆகும்.
ஏனெனில் ஒவ்வொரு மழைத்துளியும் சூரிய ஒளியைச் சிதறச் செய்து வானவில்லை உண்டாக்கக் கூடியவை.
எனவே நாம் பார்க்கும் மழைத்துளியால் சிதறடிக்கப்பட்ட வானவில் வேறு. அருகில் இருப்பவர் பார்க்கும் மழைத்துளியால் சிறதறடிக்கப்பட்ட வானவில் வேறு.
சூரியன் அடிவானில் இருந்து மழைத்துளி காற்றில் இருந்தால் வானில் உயரத்தில் வானவில் தோன்றும். சூரியன் உயரத்தில் இருந்து மழைத்துளி காற்றில் இருக்கும்போது வானவில் அடிவானில் தோன்றும்.
வானவில்லானது உண்மையில் வட்ட வடிமானது. ஆனால் புவியின் மேற்பரப்பில் இருந்து பார்க்கும் நம் கண்ணிற்கு அது அரைவட்டமாகத் தெரிகிறது.
நம்மால் வானவில்லை தொட முடியாது. ஏனெனில் அது பிரதி பிம்பம். ஆகவே அதனைக் காணத்தான் முடியும்.
வெப்பமண்டலங்களில் நீர்நிலைகளின் அருகில் வானவில்லை அடிக்கடிக் காணலாம்.
சூரிய குடும்பத்தில் புவியில் மட்டுமே வானவில்லானது தோன்றுகிறது.
கிரேக்க நாகரிகத்தில் வானவில்லானது சொர்க்கத்திற்கும், பூமிக்கும் இடையிலான பாலமாகக் கருதப்பட்டது.
செர்பியாவில் வானவில்லானது மழைக்கடவுளின் வில்லாகக் குறிப்பிடப்படுகிறது.
வானவில்லானது மூடுபனி, சாரல், பனி போன்ற நிகழ்வுகளின்போதும் உண்டாகும்.
ஒளியானது மழைதுளியினுள் நுழைந்து வெளியேறும் முன்பு இரண்டு முறை பிரதிபலிப்படையும் போது இரட்டை வானவில்லானது உண்டாகிறது.
இரட்டை வானவில்லில் இரண்டாவதாக உருவாகிய வானவில்லில் ஊதா நிறம் வெளியேயும், சிவப்பு நிறம் உட்புறமும் இருக்கிறது.
ஹவாய் தீவுகளே உலகில் அதிக வானவில் தோன்றும் இடமாகும்.
இயற்கையின் பரிசான வானவில் உண்மையில் ஓர் அற்புதம்.