பகவான் இராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்

இராமகிருஷ்ணரின் சிந்தனை பற்றி அறிந்து கொள்வோம்.

“என் செயலாவது யாதொன்றுமில்லை” என்னும் கொள்கை மனதில் உறுதியாக நிலைக்குமானால் மனிதனுக்கு இந்தப் பிறவிலேயே முக்தி உண்டாகும். அதன் பிறகு அவனுக்கு வேறொரு பயமும் இல்லை.

இரவில் வானில் பல விண்மீன்களைக் காண்கிறாய். ஆனால் சூரியன் உதித்ததும் அவை தென்படுவதில்லை. ஆதலால் பகற்பொழுதில் ஆகாயத்தில் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லலாமா?. மனிதனே உனது அஞ்ஞான காலத்தில் நீ இறைவனைக் காண முடியாததால் இறைவனே இல்லை என்று சாதிக்காதே.

பெறுவதற்கரிய இந்த மானிடப் பிறவியைப் பெற்றவன் இப்பிறவியிலேயே இறைவனை அறிய முயலாது போனால் அவன் வீணில் பிறந்தவனே ஆவான்.

எண்ணெய் இல்லாது போனால் விளக்கு எரியாது. அதுபோல் இறைவன் இல்லாமல் போனால் மனிதன் உயிர் வாழ இயலாது.

வேக வைத்த நெல்லை பூமியில் விதைத்தால் அது மறுபடியும் முளைக்காது. வேக வைக்காத நெல்தான் முளைவிடும். அதுபோல உண்மை ஞானமாகிய தீயால் வெந்த ஒருவன் பரிபூரணமாக இறப்பானானால் அவனுக்கு மறுபிறவி கிடையாது. அஞ்ஞானத்துடன் மரணமடைந்தால் மீண்டும் பிறக்க வேண்டியது தான்.

தராசுத் தட்டின் கனமான பக்கத்தில் தராசு முள் மையத்தை விட்டு சாய்ந்து விலகி இருக்கும். அதுபோல் பெண்ணாசை பொன்னாசைகளில் கனத்த மனம் இறைவனை விட்டு விலகித் தடுமாறுகிறது.

இறைவன் திருநாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் எவனுக்கு மயிர்க் கூச்செடுத்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுமோ அவனுக்கு அதுதான் கடைசிப் பிறவி.

படகு தண்ணீரில் இருக்கலாம். ஆனால் தண்ணீர் படகினுள் நுழையக் கூடாது. மனிதன் உலகத்தில் வாழலாம். ஆனால் உலக ஆசை அவனிடத்தில் இருக்கக் கூடாது.

சம்சார வாழ்க்கையில் இருந்தால் என்ன? அனைத்தையும் அவனுக்கே அர்பணம் செய்து அவனிடம் சரணமடைந்து விடு. அதன் பிறகு உனக்கு எவ்விதக் கஷ்டமும் இராது. யாவும் அவனது அருளாலே நடைபெறுகின்றன என்பதை அறிவாய்.

காந்த ஊசி எப்போதும் வடக்குத் திசையையே காட்டுமாதலால் கடலில் செல்லும் கப்பல்கள் திசை தவறிப் போவதில்லை. மனிதனுடைய மனம் இறைவனை நாடியிக்கும் வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய கடலில் திசை தப்பிப் போகமாட்டான்.

ஒருவன் பன்றி இறைச்சியைத் தின்பவனாயினும் இறைவனிடம் அன்பு கொண்டவனாக இருந்தால் அவன் உயர்ந்தவனே. பால் கலந்த அன்னம் சாப்பிட்டுக் கொண்டியிருப்பவனாயினும் பெண்ணாசை, பொன்னாசை கொண்டவனாக இருந்தால் மிகவும் இழிந்தவனாகிறான்.

வாய்விட்டு உரக்கத்தான் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டுமா? உனக்கு எப்படி விருப்பமோ அப்படி பிரார்த்தனை செய்யலாம். அவன் எப்பொழும் உன் பிரார்த்தனையை நிச்சயமாகக் கேட்பான். எறும்பின் காலடியோசை கூட அவனுடைய காதுகளில் கேட்கும்.

இராமபிரான் இலங்கைக்குப் போய்ச் சேர கடலில் அணை போட வேண்டியிருந்தது. ஆனால் அவருடைய பரம பக்தனான அனுமான் இராமபிரானிடம் வைத்திருந்த திடபக்தியினால் ராமநாமம் சொல்லி கடலை ஒரே தாண்டாய்த் தாண்டிவிட்டார். காரணம் நம்பிக்கை.

கங்கைநீர், பிருந்தாவனத்து மண், பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் பிரசாதம் இவை மூன்றையும் சாதரணமாகக் கருதாதே. இந்த மூன்றும் பரப்ரமத்தின் சொரூபங்களாகும்.

கடவுள் உனக்கு என்ன கொடுத்திருக்கிறார் என்று ஒரு காகிதத்தில் எழுது. அந்தப் பக்கம் நிரம்பி வழியும். மறுபக்கத்தில் உனக்கு என்ன கொடுக்கவில்லை என்று எழுது. இரண்டு வரிக்கு மேல் வராது.

என்ன, பகவானது திருநாமம் சாமான்யமானது என்றா நினைக்கிறாய்? பகவானுக்கும் அவனது திருநாமத்திற்கும் வித்தியாசமே கிடையாது. சத்திய பாமா பொன்னையும், ஆபரணங்களையும் வைத்து கிருஷ்ண பகவானது எடைக்கு ஈடுகட்ட முயன்று தோல்வியுற்றாள். ஆனால் ருக்குமணியோ கிருஷ்ணனுடைய நாமத்தை ஒரு துளசி இலையில் எழுதித் தராசின் மற்ற தட்டில் வைத்தாள். என்ன ஆச்சரியம். அது கிருஷ்ணனுடைய எடைக்கு சரி சமமாக நின்றது.

என் அருமைக் குழந்தைகளே உண்மையாகவே இறைவனைக் காண முடியும். நாம் எப்படி உட்கார்ந்து பேசி கொண்டியிருக்கிறோமோ, அதுபோலவே கடவுளைக் கண்டு அவரோடு பேச முடியும். நான் சொல்வது வெறும் வார்த்தைகளல்ல. சத்தியமான வார்த்தைகள்.

– பகவான் இராமகிருஷ்ணர்

 

பகவான் இராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகளை நம்மால் முடிந்த அளவு பின்பற்றி நாமும் இறையருள் பெறுவோம்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.