உலகின் பச்சை நுரையீரல் ஈரநிலம்

நீரால் சூழப்பட்ட நிலப்பகுதி அல்லது நீரில் மூழ்கிய நிலப்பகுதி ஈரநிலம் என்று அழைக்கப்படுகிறது.

ஈரநிலத்திற்கான நீரானது நிலத்தடியிலிருக்கும் ஊற்றிலிருந்தோ, மழைநீரிலிருந்தோ, கடல்நீரிலிருந்தோ பெறப்படுகிறது. ஈரநிலம் நில வாழிடத்தின் முக்கியமான ஒன்றாகும்.

ஈரநிலங்கள் உலகின் இயற்கை நீர்வடிகட்டிகளாகும். ஈரநிலத்தில் உள்ள தாவரங்கள் தண்ணீரை வடிகட்டி சுத்தமாக்குகின்றன. எனவே இவை உலகின் பச்சை நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன.

ஈரநிலமானது ஆண்டு முழுவதும் தண்ணீரைக் கொண்டோ அல்லது ஆண்டின் சிலபருவங்களில் தண்ணீரைக் கொண்டோ இருக்கிறது. ஈரநிலத்தில் உள்ள நீரின் அளவும், காலமும் இடத்திற்கு இடம், பருவத்திற்கு பருவம் வேறுபடும்.

பொதுவாக ஈரநிலமானது நிலவாழிடம் மற்றும் நீர்வாழிடம் ஆகியவற்றின் பண்புகளைக் கொண்டுள்ளது. ஈரநிலமானது நிலத்தினையும், நீரினையும் இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறது.

அளவுக்கு அதிகமாக மழை பெய்யும்போது மழைநீரினை சேகரித்து வைத்துக் கொண்டு தேவையான நேரத்தில் பயன்படுத்த ஈரநிலங்கள் உதவுகின்றன.

ஈரநிலங்கள் உலகில் அன்டார்டிக்காவைத் தவிர ஏனைய இடங்களில் காணப்படுகின்றன. பொதுவாக இவ்வாழிடமானது மற்ற வாழிடத்தினுள் அமைந்து இருக்கும்.

பொதுவாக இவை நிலம் மற்றும் நீர் வாழிடத்திற்கு இடைப்பகுதியில் அமைந்துள்ளது. ஈரநிலத்தில் இருக்கும் சேறுகலந்த மண்ணில் வாழும் தன்மையை இங்குள்ள உயிரினங்கள் கொண்டுள்ளன.

ஈரப்பதம் மிகுந்த இவ்வாழிடமானது வேறுபாடுகளைக் கொண்ட பல்வேறு உயிரினங்களுக்கு வசிப்பிடமாக விளங்குகிறது. உலகில் உள்ள ஏனைய வாழிடங்களைவிட ஈரநிலமானது பல்வேறு வகையான உயிரினங்களைக் கொண்டுள்ளது.

மரங்கள் நிறைந்த அமேசான் சதுப்புநிலங்கள், சைபீரியாவின் பீட்லேண்டுகள் ஆகியவை உலகில் உள்ள பெரிய ஈரநிலத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

ஈரநிலங்களின் வகைகள்

ஈரநிலமானது மரங்களைக் கொண்ட சதுப்புநிலங்கள் (ஸ்வாம்ப்), புதர்களைக் கொண்ட சதுப்புநிலங்கள் (மார்ஸ்), சேறுநிறைந்த சதுப்புநிலங்கள் (பாக்) என்ற மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

மரங்களைக் கொண்ட சதுப்புநிலங்கள் (ஸ்வாம்ப்)

ஸ்வாம்ப் ஸ்வாம்ப்

இப்பகுதியானது மரங்கள் அடர்ந்து நிரந்தரமாக தண்ணீரினைக் கொண்டிருக்கின்றது. இது நன்னீர் ஸ்வாம்ப், உப்புநீர் ஸ்வாம்ப் என்ற இருபிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

நன்னீர் ஸ்வாம்ப்கள் நிலத்தின் உட்பகுதிகளில் காணப்படுகின்றன. உப்புநீர் ஸ்வாம்ப்கள் கடலை ஒட்டி அமைந்து கடலில் இருந்து கடற்கரையைப் பாதுகாக்கின்றன.

நன்னீர் ஸ்வாம்ப்கள்

நன்னீர் ஸ்வாம்ப்நன்னீர் ஸ்வாம்ப்

நன்னீர் ஸ்வாம்ப்கள் ஏரிகள் மற்றும் நீரோடைகளை ஒட்டிய சமதளப்பகுதியில் அமைந்துள்ளன. இங்கு நிலத்தடிநீரானது உயர்ந்தும், மழைநீர்ப்பிடிப்பு குறைந்தும் காணப்படுகிறது.

பருவகாலத்தில் ஏற்படும் மழைப்பொழிவு மற்றும் வெள்ளம் நன்னீர் ஸ்வாம்புகளின் நீர்மட்டம் மாறுவது அல்லது மாற்றுவதற்கு காரணமாகிறது.

இவை பொதுவாக நிலநடுக்கோட்டுப்பகுதியை ஒட்டிய வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவ்விடத்தில் ஆண்டுமுழுவதும் வெப்பமும், ஈரப்பதமும் மிகுந்து காணப்படுகிறது.

காங்கோ ஆற்றினைச் சுற்றிய கிழக்கு மற்றும் மேற்கு ஸ்வாம்ப் காடுகள் நன்னீர் ஸ்வாம்ப்களுக்கு எடுத்துக்காட்டாகும். இவ்விடத்தில் உயர்ந்த பசுமைமாறா மரங்கள் மிகுந்து காணப்படுகின்றன.

இவ்விடத்தில் காணப்படும் புபிங்கா, ஓவாங்கால் போன்ற மரங்கள் வயலின், புல்லாங்குழல், மரச்சாமான்கள் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.

கலங்கலான நீரினைக் கொண்டுள்ள இவ்வாழிடம் ஏராளமான உயிரினங்களுக்கு வசிப்பிடமாக உள்ளது. நீர்எருமைகள், யானைகள், தாழ்நில கொரிலாக்கள், இருவாழ்விகள், ஊர்வன, பூச்சிகள், மீன்கள் ஆகியவை இங்கு காணப்படுகின்றன.

தாழ்நில கொரிலாக்கள்
தாழ்நில கொரிலாக்கள்

மிதவெப்பமண்டலத்தில் காணப்படும் நன்னீர் ஸ்வாம்பில் சைப்பிரஸ் மரங்கள் காணப்படுகின்றன.

சைப்பிரஸ் மரங்கள்சைப்பிரஸ் மரங்கள்

 

உப்புநீர் ஸ்வாம்ப்கள்

உப்புநீர் ஸ்வாம்ப்உப்புநீர் ஸ்வாம்ப்

பொதுவாக இவை வெப்பமண்டல கடலை ஒட்டிய பகுதிகளில் காணப்படுகின்றன. கடலில் உருவாகும் உயர்ந்த அலைகள் மண்ணுடன் சேர்ந்து உப்புநீர் ஸ்வாம்ப்புகளை உருவாக்குகின்றன.

இவ்விடத்தில் காணப்படும் தண்ணீரானது முழுவதும் கடல்நீராகவோ, முழுவதும் நன்னீராகவோ இருப்பதில்லை. இங்கு காணப்படும் காடுகள் அலையாத்திக் காடுகள் அல்லது மாங்குரோவ் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

இக்காடுகள் மிகவும் உயரமாக பொய்க்கால்கள் கொண்ட வேர்களையும், கிளைகள் மற்றும் தண்டுகளையும் தண்ணீருக்கு மேலே கொண்டுள்ளன.

இத்தாவர வேர்கள் நிலத்தில் பதிந்து நங்கூரம் போல் செயல்பட்டு அவற்றின் மேல் மண்ணினை விழச்செய்கின்றன.

மாங்குரோவ்மாங்குரோவ்

இம்மரங்களின் வேர்களில் நண்டுகள், சங்குகள், நத்தைகள் ஆகியவை வாழ்கின்றன.

நாரைகள், வாத்துகள், கொக்குகள், மீன்கொத்திகள் உள்ளிட்ட நீர்வாழ் பறவைகளின் வாழிடமாகவும் இவை உள்ளன. இந்தியா மற்றும் வங்காள தேசத்தின் காணப்படும் சுந்தரவனக் காடுகள் உலகின் பெரிய மாங்குரோவ் காடுகள் ஆகும்.

பல்வேறு வகையான மீன்கள், பூச்சியினங்கள், பறவைகள், தவளைகள், பாம்புகள், மான்கள், காட்டுப்பன்றிகள், குரங்குகள், புலிகள் ஆகியவையும் இங்கு காணப்படுகின்றன.

சுந்தரவன புலிசுந்தரவன புலி

 

புதர்களைக் கொண்ட சதுப்புநிலங்கள் (மார்ஸ்)

மார்ஸ்மார்ஸ்

இப்பகுதியில் புற்கள் தண்ணீருடன் இணைந்து காணப்படுகிறது. பெரும்பாலும் இவை வெப்பமண்டலத்திற்கு தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் காணப்படுகின்றன.

இவை ஆற்றின் கரையோரம், கடற்கரையோரம் அமைந்துள்ளன. இது நன்னீர் மார்ஸ், உப்புநீர் மார்ஸ் என இருபிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

நன்னீர் மார்ஸ்

ப்ரைரி பத்தோல்ப்ரைரி பத்தோல்

இவை கடலிருந்து பலகிமீ உள்ளே உட்புறத்தில் ஆறு, ஏரி, நீரோடைகளை ஒட்டி காணப்படுகின்றன. இவை புற்கள், நீர்வாழ்தாவரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

வடஅமெரிக்கக் கண்டத்தில் காணப்படும் ப்ரைரி பத்தோல் நன்னீர் மார்ஸ்க்கு எடுத்துக்காட்டாகும். இது மத்திய கனடாவிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்கு மத்தியபகுதி வரை இதயவடிவில் பரந்து காணப்படுகிறது.

கிண்ணவடிவ குழிகளாகக் காணப்படும் இப்பகுதி வளமிக்க மண்ணினைக் கொண்டும், கலங்கிய நீரினைக் கொண்டும் இருக்கிறது.

இப்பகுதியானது ஏராளமான உயிரினங்களுக்கு வாழிடமாக உள்ளது. பூச்சிகள், மீன்கள், கிளாம்கள், இறால், எலிகள், கொறியுண்ணிகள், மான்கள், சிறுத்தை, கடல் பசுக்கள், முதலைகள், டால்பின்கள், இடம்பெயரும் பறவைகள் இங்கு காணப்படுகின்றன.

கடல் பசுகடல் பசு

 

உப்புநீர் மார்ஸ்

உப்புநீர் மார்ஸ்உப்புநீர் மார்ஸ்

கடலினை ஒட்டிய பகுதிகளில் உப்புநீர் மார்ஸ் காணப்படுகிறது. இவை பல்வேறு வகையான உயிரினங்களுக்கு வசிப்பிடமாக உள்ளது.

புற்கள் நிறைந்த இவ்விடமானது ஆல்காக்கள், பூஞ்சைகள், மீன்கள், இருவாழ்விகள், ஊர்வன, மட்டிகள் ஆகியவற்றிற்கு உணவினையும், உறைவிடத்தையும் வழங்குகின்றன.

இங்கு உப்புநீர் முதலைகள், காட்டுப்பன்றிகள், பறவைகள் போன்றவையும் இங்கு காணப்படுகின்றன.

உப்புநீர் முதலைஉப்புநீர் முதலை

வடக்குஆஸ்திரேலியாவில் காணப்படும் மார்ஸ் உப்புநீர் மார்ஸ்க்கு எடுத்துக்காட்டாகும்.

சேறுநிறைந்த சதுப்புநிலங்கள் (பாக்)

பாக்பாக்

பாக் எனப்படும் சேறு நிறைந்த சதுப்புநிலங்கள் குளிர்வெப்பநிலையைக் கொண்டிருக்கும் ஆர்டிக் பகுதிகளைக் கொண்டுள்ள அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியப்பகுதிகளில் காணப்படுகின்றன.

வெப்பமண்டலப் பகுதிகளில் உயரமான பகுதிகளில் பாக் காணப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சியரா நெவாடா வெப்பமண்டல பாக்கிற்கு உதாரணம் ஆகும்.

மலையில் உள்ள பாக்மலையில் உள்ள பாக்

இது மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் அதிகம் உள்ள இடங்களில் காணப்படுகிறது. பாக்குகள் உறைபனி தாழ்வாரங்கள் என்று அழைக்கப்படும் கெண்டி ஏரிகளிலிருந்து உருவாகின்றன.

இவை ப்ரைரி பத்தோல்களைவிட ஆழமானவை. கெண்டி ஏரிகள் தாவரக்குப்பைகளால் நிரப்பப்படும்போது பாக்குகள் உருவாகின்றன.

பெரிய தாவரங்களின் இலைகள், வேர்கள், தண்டுகள் பாக்குகளின் அடியில் சேகரமாகின்றன. இவ்வாறு தாவரக்குப்பைகளால் பாக்குகள் ஆழம் குறைந்து காணப்படுகின்றன.

பாக்குகளின் மேற்பரப்பில் மிதவை தாவரங்களும், ஓரங்களில் மோஸஸ் உள்ளிட்டவைகளும் காணப்படுகின்றன. பாக்குகளின் அடிப்பகுதியில் காணப்படும் நாள்பட்ட தாவரகுப்பை பாதி அழுகிய நிலையில் பஞ்சு விரிப்பு போன்று காணப்படுகிறது. இப்பஞ்சுவிரிப்பு பீட் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பீட் மதிப்பு மிக்க எரிபொருளாக உள்ளது. நிலக்கரி, பெட்ரோலியப்பொருட்களுக்கும் இது ஆதாரமாக ஆரம்பகாலத்தில் இருந்திருந்ததாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

பாக்குகளின் மண்ணானது அமிலத்தன்மை அதிகம் கொண்டு மற்றைய ஈரநிலங்களைப் போல் வளமானதாக இருப்பதில்லை. எனவே இந்தஅமிலத்தன்மையை தாங்கி வளரக்கூடிய தாவரங்கள் மட்டுமே இங்கு வாழுகின்றன.

பூச்சிகளை உண்ணும் தாவரங்களும் இங்கு காணப்படுகின்றன. பூச்சிகள், பறவைகள், எல்க் மான்கள் ஆகியவை இங்கு காணப்படுகின்றன.

எல்க் மான்எல்க் மான்

ஈரநிலத்தின் முக்கியத்துவம்

ஈரநிலங்கள் பஞ்சினைப் போன்று வெள்ளப்பெருக்கு காலத்தில் நீரினை ஊறிஞ்சி தேவையான நேரத்தில் நமக்கு திருப்பி அளிக்கின்றன. இதனால் வெள்ளதால் நாம் பெரிய அளவில் பாதிப்படைவதில்லை.

கடலில் ஏற்படும் பெரிய அலைகளின் தாக்கத்திலிருந்து கடற்கரையை ஈரநிலங்கள் பாதுகாக்கின்றன. மேலும் புயல்கள் ஏற்படும்போது ஈரநிலங்கள் அவ்விடத்தில் உள்ள மண், மணலிற்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

ஈரநிலங்கள் உலகின் இயற்கை நீர்வடிகட்டிகளாகச் செயல்படுகின்றன. ஈரநிலத்தில் உள்ள தாவரங்கள் தண்ணீரை வடிகட்டி சுத்தமானதாக்குகின்றன.  இவை பாஸ்பரஸ் உள்ளிட்ட கனஉலோகங்களை வடிகட்டி வேளாண்மையைப் பாதுகாக்கின்றன.

மேலும் கரையாத நைட்ரஜனை நைட்ரஜன் வாயுவாக மாற்றிவிடுகின்றன. மேலும் இவை தீங்குவிளைவிக்கும் பாக்டீரியாவை நடுநிலையாக்குகின்றன.

இவை புயல், வெள்ளக்கட்டுப்பாடு, பொழுதுபோக்கு போன்றவற்றிற்கும் உதவுகின்றன.

ஈரநிலம் நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்குவதோடு நல்ல நீர் கிடைக்கவும் வழிவகை செய்கிறது.

ஈரநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

ஈரநிலங்களில் பெரும்பாலான பகுதி இன்றைக்கு அழிக்கப்பட்டு மனிதர்களின் வசிப்பிடமாகவும், பயிர் செய்யும் இடமாகவும், தொழிற்சாலைகளாகவும் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஈரநிலங்களின் சுருக்கம் மற்றும் அவை இல்லாமல் போவது ஆகியவற்றால் வெள்ளப்பெருக்கு, நிலத்தடி நீராதாரப் பாதிப்பு, புயலினால் பாதிப்பு ஆகியவை உண்டாகின்றன.

ஈரநிலம் அழிக்கப்படும்போது அதில் உயிரினங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதோடு மக்களின் நலமும் பாதிப்படைகிறது.

இயற்கையின் பச்சை நுரையீரலான ஈரநிலங்களை பாதுகாத்து நம்முடைய வருங்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவது நம் ஒவ்வொருடைய கடமை ஆகும். ஈரநிலங்களைப் பாதுகாப்போம். வளமான வாழ்வு வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.