உன்னதம் – சிறுகதை

ராகவனுக்கு வெறுப்பு வந்தது.

‘சே! என்ன வாழ்க்கை இது? ஆபீஸ் பைல்களுடன் பைல்களாய் கிடந்து போராடி வருகிற ஆயிரத்து சொச்ச ரூபாயில் இழுத்துப் பிடித்து செலவு செய்து, பட்ஜெட் போட்டு ஒவ்வொரு நாளும் பிரம்ம பிரயத்தனமாய்…

தவணை முறை டி.வி. வாங்க கூட வக்கற்றுப் போய்விட்டது. மனைவியுடன் ஆசையாய் ஒரு சினிமா? குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த தினத்திற்காவது நல்லதாய் துணிமணிகள்? ஒரு மாற்றத்திற்காகவாயினும் எங்காவது கோவில், குளம், சேஷத்திராடனம்?…

ராகவன் விரக்தியின் உச்ச கட்டத்தில் இருந்தான்.

திரும்ப திரும்ப மளிகை, பால், ரேஷன் அரிசி, குழந்தைகளுக்கு ஃபீஸ் மாத கடைசியில் யாரையாவது பிடித்து தொங்கி கைமாற்று வாங்குவதும், சம்பளத்தன்று திருப்பிக் கொடுப்பதும்… மறுபடி… மறுபடி…

இப்படியேதான் காலச்சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது.

ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்து தன்னை கட்டிக் கொண்ட மனைவிக்கு இதுவரை என்ன சுகத்தை கொடுத்திருக்கிறான்?

குழந்தைகள் என்ன பாவம் செய்தன? ஓடியாடி விளையாட வேண்டிய வயதில், குடும்ப நிலை பார்த்து ‘கொட்டு கொட்டு’ என்று விழித்துக் கொண்டிருக்கின்றன.

இரண்டரை வயது குழந்தையை நினைத்தால்… நினைக்க, நினைக்க வாழ்க்கை வேப்பங்காயாய் கசந்து போனது.

இன்று மாலை அவனது அலுவலக அதிகாரி ஒருவரின் திருமண வரவேற்பு இருந்தது. அனைவரையும் கண்டிப்பாய் டின்னருக்கு அழைத்திருந்தார்.

இந்த இக்கட்டான வரும்படி நிலையிலும் அவன் அதில் கலந்து கொண்டுதான் ஆக வேண்டும்.

சாதாரணமாக அவனது அலுவலக ஊழியர்கள் இப்படிப்பட்ட விசேஷங்கள் வரும்போது ஐந்து, பத்து என்று எல்லோரிடமும் வசூலித்து மொத்தமாய் அன்பளிப்பு செய்துவிடுவது வழக்கம்.

இந்த முறையும் அப்படி ஏதோ ஐந்து, பத்து மொய் எழுதிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த ராகவனின் நினைப்பில் மண் விழுந்தது.

எவரும் பணம் வசூலிக்க விரும்பவில்லை. அவரவர் சவுகரியபடி பரிசுப் பொருட்களை கொடுத்து விடலாம் என்ற தீர்மானத்திற்கு வந்திருந்தனர்.

ஸ்டீபன் சிறிய மில்க் குக்கர் ஒன்றை வழங்கப் போவதாக சொல்லிக் கொண்டிருக்க, டேபிள் பேன், குவார்ட்ஸ் கடிகாரம், மேஜை விளக்கு, கிஃப்ட் பென் செட் என்று தாராளமாய் பரிசளிக்கப் போவதாக பேசிக் கொண்டார்கள்.

அதிகாரியின் கவனத்தை கவர்வதற்காக அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஏற்பட்டப் போட்டியில் ராகவன் திக்கு முக்காடிப் போனான்.

அவன் கையில் இப்போதைக்கு பத்தே ரூபாய்தான் இருந்தது.

திருமண மண்டபம் போவதானால்கூட யார் ஸ்கூட்டரிலாவது ஓசியில்தான் போக வேண்டிய நிலைமை. அந்த பத்து ரூபாய்கூட பத்து நாள் ஆபீஸ்க்கு நடந்து வந்து மிச்சம் பிடித்த பணம்தான்.

‘போகாமலேயே இருந்து விடலாமா? உடம்பு சரியில்லை… பாட்டிக்கு சீரியஸ் என்று சாக்கு சொல்லி சமாளித்து விட்டால்?…’ யோசித்தான்.

‘சே!சே! அது சரியில்லை அதிகாரி தன் கௌரவம் பாராது அவன் இருக்கைக்கே வந்து உரிமையுடன் அழைத்திருக்கிறார்… போகாமல் இருப்பதாவது…?’

பாக்கெட்டில் இருந்த பத்து ரூபாய் மனதை உறுத்தியது. சக நண்பர்களின் பரிசுப் பொருள்களுக்கு முன்னால் எவ்வளவு துச்சம்? தெரிந்தால் எவ்வளவு கேவலமாய் நினைத்துக் கொள்வார்கள்?’

‘நோ!… நோ…! யார் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். அவசியம் திருமண வரவேற்புக்கு போயே தீர வேண்டும். தலையை மட்டும் காட்டிவிட்டு ‘கவரை’ கொடுத்துவிட்டு சாப்பிடாமல் நழுவி விடவேண்டியதுதான்..’ என்று ராகவன் ஒருவழியாய் முடிவுக்கு வந்தான்.

ஒருமஞ்சள் நிற கவரை எடுத்து உள்ளே ரூபாயை வைத்து கவரை ஒட்டி, அதன்மீது சிறிய கவிதை எழுதி, பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு கிளம்பினான்.

திருமண மண்டபம்.

ஜரிகை புடவை, பாலியெஸ்டர் பட்டு வேஷ்டிகளில் ஜவ்வாது, சென்ட் மணத்துடன் கும்பல் அலைமோதிக் கொண்டிருக்க…

சஃபாரி சூட்டில் மிடுக்காக மாலையுடன் அதிகாரி, தன் புதுஇளம் மனைவியிடம் (கழுத்தில் கிலோ கணக்கில் தங்கம், காதில் வைர பேசரி மின்னியது) தன் ஊழியர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார்.

கூடவே அவர்கள் வழங்கும் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு கை குலுக்கி கண்டிப்பாக சாப்பிட்டபின்தான் செல்லவேண்டுமென்று அன்புடன் வற்புறுத்திக் கொண்டிருந்தார்.

ராகவனை உள்ளுர பயம், வெட்கம், பிடுங்கித் தின்றது. தயங்கியவாறே அவரிடம் சென்று உதறலுடன் கைகுலுக்கி, புன்னகைத்து, மெள்ள பையிலிருந்து கவரை எடுத்து அவரிடம் நீட்டினான்.

“என்ன மிஸ்டர் ராகவன்! ஏன் நெர்வஸ்ஸா இருக்கீங்க… உடம்பு கிடம்பு சரியில்லையா?” என்று அவர் அவன் தோள் தட்டி விசாரிக்க,

ராகவன் ‘இல்லை’யென்று தலையசைத்தான்.

“ஏன் இந்த பார்மாலிட்டீஸ் எல்லாம். உங்கள் வருகை ஒன்றே போதும். அன்புக்கு மிஞ்சின அன்பளிப்பு எதுவும் இல்லை தெரியுமா… போங்க… போய் சாப்பிடுங்க ப்ளீஸ்…” என்றார் அன்புடன்.

டைனிங் ஹால் நிரம்பி வழிந்தது. அவன் அலுவலக நண்பர்கள் சேர்ந்தாற்போல் ஒருவரிசையில் அமர்ந்திருக்க, இவனும் அவர்களுக்கிடையே காலியாய் கிடந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

விதவிதமான இனிப்புகள், பதார்த்தங்கள், பழங்கள் என விருந்து ஏகமாய் அமர்க்களப்பட்டது.

தன் முன் பரிமாறப்பட்டவைகளை ரசித்து ருசித்து சாப்பிட்டத் துவங்கிய ராகவன், தன் நண்பர்கள் ஒவ்வொரு பதார்த்தம் பரிமாறப்படும்போதும் ‘வேண்டாம் போதும்…’ என நாசூக்காய் மறுத்து, சாப்பிடுவதாய் பேர் பண்ணிக் கொண்டிருந்ததை கவனித்தான்.

அவர்கள் போலி கௌரவம் பார்த்து நடிப்பதாய் தோன்றியது.

கொஞ்ச நேரம் கழித்து கேட்டும் விட்டான்.

“என்னப்பா சாப்பிடறீங்க?… எது கொண்டு வந்தாலும் வேண்டாம் வேண்டாம்னு மறுத்துக் கொண்டு கல்யாண வீட்டில் முக்கியமே விருந்துதான். சாப்பிடுங்கப்பா வயிராற சாப்பிடுங்க… சாப்பிடறதுல ஒண்ணும் கௌரவம் பார்க்க வேண்டியதில்லை…”

“உனக்கென்னப்பா? சுலபமா சொல்லிட்டே, நல்லா சாப்பிடுங்கன்னு… சாப்பிட்ட பின் அவஸ்தை படறது யாராம்?…” பக்கத்திலிருந்த மோகன் இப்படிச் சொன்னதும், ராகவன் குழப்பமாய் அவர்களை ஏறிட்டு,

“அவஸ்தையா?… சாப்பிடறதுல என்னப்பா அவஸ்தை…”

“எனக்கு ஷூகர் கம்ப்ளெண்ட். ஸ்வீட்டையே நினைச்சியும் பார்க்க கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கிறார். எனக்கு மட்டும் ஜாங்கிரி மேல் ஆசையில்லையா என்ன?…ம்” வினோதன் வருத்தப்பட,

“எனக்கு கொலஸ்டிரால்… பி.பி, நெய், பால், தயிர், உப்பு, ஊறுகாய் எல்லாவற்றையும் விட்டு வருஷம் இரண்டாச்சு…” கௌதம் அழாதக் குறைதான்.

“நான் ஹார்ட் பேஷண்ட்ப்பா. எண்ணெய் சமாச்சாரமே ஆகாது”

“நான் டயட் கன்ட்ரோல்ல இருக்கேன்… டாக்டர் சொல்லியிருக்கிறதத் தவிர வேற எதையும் தொடக் கூடாது…

போன மாசம் இப்படித்தான் ஒரு கல்யாணத்தில் கொஞ்சமாய் கேக் சாப்பிட்டுத் தொலைச்சுட்டேன். அன்னைக்கு நான் பட்ட அவஸ்தை இருக்கே…” ரகுராமன் ஏக்கத்துடன் புலம்பினான்.

ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலம் பற்றி இப்படி விவரிக்கவும் ராகவனுக்கு அவர்களைப் பார்க்கவே பரிதாபமாய் இருந்தது.

தன்னைவிட அதிக சம்பளம், சொந்த வீடு, ஸ்கூட்டர், ஃப்ரிஜ், கலர் டிவி, வீடியோ, வாஷிங் மெஷின்… கணிசமாய் பாங்க் பாலன்ஸ்.

இவர்களுக்கெல்லாம் என்ன விதத்தில் குறைச்சல் இருக்கிறது? ராஜபோக வசதிகளுடன் இருக்கிறார்கள். விதவிதமாக உடுத்துகிறார்கள். குழந்தைகளை கான்வெட்டில் சேர்த்துவிட்டு மனைவியுடன் பிக்னிக் போகிறார்கள்.

அவர்கள் ஒவ்வொரு ஸ்டேட்டஸ்ஸூம் அவன் அறிந்தவன் தான். ஆனால் அவ்வளவும் வெளிப்பார்வைக்குத்தான் என்பது இப்போது புரிந்தது.

கஷ்டப்பட்டு சம்பாதிப்பது ஒரு சாண் வயிற்றுக்குத்தான். ஒரு தெருப் பிச்சைக்காரன்கூட இஷ்டத்துக்கு சாப்பிடும்போது நினைத்ததை உண்ண முடியாமல் நிம்மதி, திருப்தி, மகிழ்ச்சி எதுவுமில்லாமல் உதட்டில் புன்னகை, உள்ளுக்குள்ளே வேதனை என வளைய வரும் இவர்கள் எவ்வளவு பெரிய அபாக்கியசாலிகள்.

கொஞ்ச நேரத்துக்கு முன் பிறர் வாழ்க்கை வசதிகளுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டு வேதனைப்பட்டவனுக்கு, அவனுடைய ஆரோக்கியம் ஒன்றே இறைவன் தனக்கு ஸ்பெஷலாக அளித்திருக்கும் வரப்பிரசாதமாக அழியாத சொத்தாகப்பட்டது.

பட்டும் படாமலும் வாழும் இவர்களிடத்து, தான் மட்டும் முற்றிலும் மாறுபட்டவனாய் இருப்பதை உணர்ந்தான்.

தன்னால் நன்றாகச் சாப்பிட முடியும், எதையும் சாப்பிடலாம் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி சாப்பிடலாம் என்று அவன் ஆரோக்கியத்தை நினைத்து அவனுக்கே பெருமையாக இருந்தது.

தாம்பூல பையுடன் இனிப்புகள் அடங்கிய பாக்கெட் ஒன்றைப் பெற்றுக் கொண்டு திருமண மண்டபத்தைவிட்டு வெளியேறும்போது, முன்பு தன் வாழ்க்கை நிலைமையை தரித்திரமாக நினைத்து புலம்பிக் கொண்டிருந்த ராகவனுக்கு இப்போது அதுவே ‘உன்னதமான‘ ஒன்றாகத் தோன்ற அவனையறியாமல் அவன் மனம் இறைவனுக்கு நன்றி செலுத்தியது.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

ஆசிரியரின் பிற படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.