உயிரின் விலை ஐந்து லட்சம்!

உயிரின் விலை ஐந்துலட்சம்

காலையிலிருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது.

டிவியில் காற்று, மழை, புயல் என்று அனைத்து செய்திச் சேனல்களும் பீதியைக் கிளப்பிக் கொண்டிருந்தன.

வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அடிக்கடி மீட்டிங் போட்டு செய்தியாளர்களுக்கு வரைபடம் வைத்து புயலின் கண், உடம்பு, வால்பகுதி என்று விளக்கிக் கொண்டிருந்தனர்.

மழையும் புயலும் உறுதியாய் வந்து மிரட்டி உருட்டப்போவது நிச்சயம் என்பதை இருட்டைப் பரப்பிக் கொண்டிருந்த சூல்கொண்ட மேகங்கள் கட்டியம் கூறிச் சத்தியம் செய்து கொண்டிருந்தன.

சிங்கிள் பெட்ரூம் கொண்ட அந்த சின்ன சைஸ் வீட்டின் சின்ன ஹாலின் ஜன்னலோரம் மேற்புறம் மைக்கா முழுவதுமாய் மறைந்து கருப்பும் வெள்ளையுமாய் திட்டுத்திட்டாய் ஆகிப் போயிருந்த மேஜையின் இருபுறமும் ப்ளாஸ்டிக் நாற்காலிகள் கிடந்தன.

மேஜையின் வலப்புறம் கிடந்த நாற்காலிக்கு அருகில் மூன்றடி இடைவெளியில் பழசாய்த் தெரிந்த ஸ்டாண்ட் மீது அமர்ந்திருந்த சின்ன சைஸ் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த மழை, புயல் பற்றிய செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்ததார் அறுபத்தைந்து வயது பவுனம்மா.

ஏற்கனவே கடும் பல்வலியால் தவித்துக் கொண்டிருந்த அவருக்கு, மழையும் புயலும் வரப்போகும் செய்தி நெஞ்சுக்குள் கவலையையும் பீதியையும் உண்டாக்கியது.

வலப்புறச் சேரில் அமர்ந்து வலதுகை முழங்கையைச் சேரை ஒட்டிக்கிடந்த மேஜையின் விளிம்பில் ஊன்றி உள்ளங்கையையும் விரல்களையும் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டிருந்திருந்தவரின் முகம் வீங்கிப் போயிருந்தது.

கடுமையான பல் வலி இரண்டு நாட்களாய். கீழ்வரிசைக் கடைவாய்ப்பல் கடும்வலியைத் தந்து உயிரை எடுக்கிறது.

வலியால் கன்னம், கண், நெற்றி, தலை என்று வலி ‘விண்விண்’ணென்று தெறித்தது. கண்ணிலிருந்து கண்ணீர் தண்ணீராய் வடிந்தது.

‘கடைவாய்ப்பல் ஒன்றுமட்டும்தான் வலிக்கிறதா? ஏற்கனவே விழுந்தது போக மீதமிருக்கும் பத்தொன்பது பல்லுமே வலிக்கிறதா?’ என்று நினைக்கும் அளவுக்கு வலி பின்னி எடுத்தது.

பசி வயிற்றைப் பிடுங்கித் தின்றது. ஆனாலும் வாயில் திடப் பொருளாகவோ திரவ நிலையிலோ ஆகாரத்தைப் போடவே முடியவில்லை.

‘பல்லன்னா டாக்டர்கிட்டப் போயி புடிங்கிக் ட்டுன்னா வந்துடலாமா?’ என்று தோன்றியது.

‘ம்..ம்..போவ போவ. காசு..காசுக்கு எங்கிட்டுப் போறது?’ மனம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை பவுனம்மாவால்.

‘கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வரலாம்னா ஆஸ்பத்திரி நடந்துபோகும் தூரத்தில் இல்லை. ஷேர் ஆட்டோல போய்ட்டு வரலாம்னா போக, வர நாப்பது ரூவா ஆகும்’

“ப்ச்!” என்றபடி நாற்காலியை விட்டு எழுந்த பவுனம்மாவுக்கு லேசாய்த் தலையைச் சுற்ற மேஜையின் விளிம்பைப் பிடித்துக் கொண்டு சில வினாடிகள் நின்றுவிட்டு சமையலறையை நோக்கி மெல்ல நடந்தார்.

‘டீயாவது போட்டு ஆற்றி வெது வெதுப்பாகவாவது குடித்து பசிக்கும் வயிற்றைச் சமாதானம் செய்யலா’மென்று நினைத்து கொஞ்சம்போல் இருந்த பாலை அடுப்பில் வைத்துவிட்டு டீத்தூள் இருந்த டப்பாவை எடுத்துத் திறந்தபோது டப்பாவில் அரை ஸ்பூன் டீத்தூளுக்கு மேல் தேறாதுபோல் இருந்தது.

‘டீத்தூள் மட்டுமல்ல மளிகைப் பொருட்கள் அனைத்துக்குமே இந்த நிலைமைதான்’ என்று காலியாக அலமாரியில் வீற்றிருந்த பாட்டில்களும் டப்பாக்களும் சொல்லிக் கொண்டிருந்தன.

‘இருக்கும் முப்பது ரூபாயில் பல்வலிக்கு மாத்திரை வாங்குவதா?

படுத்த படுக்கையாய்க் கிடக்கும் கணவருக்கு மருந்து வாங்குவதா?

மளிகை சாமான்கள் வாங்குவதா?’ என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தது நெஞ்சு.

பல்வலியும் பசியும் வறுமையும் வயதான பவுனம்மாவின் ஆற்றாமையும் சுயபச்சாதாபமும் சேர்ந்து வாய்விட்டு அழுது புலம்ப வைத்தது.

“நானும் ஆச ஆசயா ரெண்டு புள்ளையப் பெத்தேன். அதும் ரெட்ட புள்ளையா பொறக்கவும், ஆகா ஒன்னுக்கு ரெண்டா ஆம்பள புள்ளைங்க பொறந்திருக்குன்னு எம்மாம் சந்தோசப்பட்டு பாத்துப் பாத்து தொட்டுத் தொட்டு வளத்தேன்.

இவுரு என்ன கவுருமென்ட் ஆபீஸ்ல ஆபீஸராவா இருந்தாரு. ப்ரைவேட்டு கம்பனீல லாரி டிரைவராதானே இருந்தாரு. கொண்டு வர்ர காசுல குடும்பத்த நடத்தி நல்லது கெட்டது செஞ்சி ரெண்டு புள்ளைங்களையும் பன்னண்டாவது வரையில படிக்க வெச்சு..

படிக்கதா வெச்சோமு, ஆனா எங்க படிச்சிச்சிங்க! பரிச்சைக்கு பணம் கட்ட குடுத்த காச சேக்காளிங்களோட சேந்து செலவு பண்ணிப்பிட்டு பரிச்சயே எழுதப் போவுல.

இவுருந்தா பாவம் ஆந்ரா, பம்பாயின்னு லாரீல சரக்கு ஏத்திக்கிட்டு தூர ப்ரதேசத்துக்கெல்லாம் லாரி ஓட்டிக்கிட்டுப் போரது வரதுன்னுன்னு ராவுல்ல பகலில்லன்னு ஒழைக்கதானே செஞ்சாரு..

பொண்டாட்டி புள்ளைங்களுக்காக என்னா ஒழைப்பு ஒழச்சி என்னா ப்ரயோசனம்? புள்ளைங்க ரெண்டும் பள்ளிக்கூடத்துக்கு போயி படிப்பக் கத்துக்கிட்டுதுங்களோ இல்லையோ!

கூடாத சேக்காளிங்களோட சேந்துக்கிட்டு தண்ணி, கஞ்சா, திருட்டு பொது எடங்கள்ள வம்பு சண்டைன்னு அடிக்கடி போலீஸு ஜெயிலுன்னு ஊரறிஞ்ச கேடிங்களா, ரவுடிங்களான்னா ஆயிட்டாங்க.

பெத்த ரெண்டு மவனுங்களும் கெட்டழியுறத பாத்துப் பாத்து மனசொடிஞ்சி போனவரு ஒருநா லாரி ஓட்டிக்கிட்டு கன்யாகுமரி போகயிலே விபத்துல வலதுகாலு மொழங்காலு வரயிலயும் எடக்கையி வெரலுங்களும் போயிட படுத்த படுக்கையா ஆயிட்டாரு.

வேல பாத்த கம்பெனி மொதலாளி நல்லவரா இருக்கக் கொள்ள, இவர கைகழுவி விடாம இந்த வீட்டுல வாடக வாங்காம, இவுரு உசிரோட இருக்குறவர இருக்கச் சொல்லிருக்காரு.

ஏதோ கொஞ்சம் காசு குடுத்தாரு. அந்த காசு எத்தினி நாளு வரும்? இதோ கடேசியா அந்தத் தொக முப்பது ரூவாயில வந்து நிக்கிது. இந்த வயசுல நா என்னா வேலைக்குப் போயி என்னாத்த சம்பாரிக்கிறது?

பெத்த அப்பன் காலு,கைய எழந்து படுத்த படுக்கேல கெடக்குராறே ஆம்புள புள்ளைங்களா பொறந்த நாமதானே சம்பாரிச்சு குடும்பத்தக் காப்பாதனும்னு ரெண்டு நாதாரி புள்ளைகள்ள, ஒருபுள்ளைக்குக்கூட தோணலியே!

ஊர் பொறுக்கி நாய்ங்க வீட்டுக்கே என்னிக்காச்சும் திடீர்னு வர்ரது. அதும் தண்ணிய போட்டுட்டு வந்து சோத்தப் போடு சோத்தப் போடுங்கறது. காசுகுடு காசுகுடுன்னு மெரட்டுறது.

கைல கெடச்ச பாத்திரங்கள எடுத்து சொவத்துல அடிக்கிறது. வெளிய போகும்போது சொவத்துல அடிச்ச பாத்திரத்தை கையில எடுத்துக்கிட்டு போயிடறதுன்னு அடாவடீல்ல பண்ணுவானுங்க.

வூட்டுல ஒரு பித்தள பாத்ரம் இப்ப கெடையாது. வித்து தண்ணியடிக்க தூக்கிக்கிட்டுல்ல போயிட்டானுக. புள்ளைங்களா இவுனுக? பாவிங்க. பொட்டப் புள்ளைய பெத்துருந்தாகூட ஆயி அப்பனுக்கு வவுறு பாத்து கஞ்சி ஊத்துமோ என்னமோ!

இந்த நாதாரி நாய்ங்கள பெத்தப்ப ஆம்பள புள்ளைங்கள பெத்ருக்கோம்னு அம்புட்டு பெருமயால பீத்திக்கிட்டோம். ஆனா இப்ப பாரு, ஆயி அப்பன் உசிரோட இருக்கமா செத்துட்டமானுகூட வந்து எட்டிப் பாக்கல.

காத்தாயி சொன்னதக் கேட்டதுமே ‘திக்’குன்னு ஆகிப் போச்சு. நெஞ்சு வெடிச்சுடும் போல அழுவ முட்டிக்கிட்டு வந்துச்சு. கதறிக் கதறி அழுதுட்டேன்ல.

காத்தாயி ‘வுடு பவுனு, ஆயி அப்பன் உசிரோட இருக்கையில பெத்த மவனுங்க அவுகளுக்கு சொல்லாம கல்யாணம் கட்றது கொடுமதா. நீ வவுறு தொறந்தவேள, இப்பேர்ப்பட்ட மவனுங்க. விட்டுத் தள்ளு, அழுவாதன்னு’ சமாதானம் சொல்லிட்டுப் போச்சு.

படுக்கேல கெடக்குற இவருகிட்ட சொல்லாம மறைக்கக் கூடாதுன்னு அழுதுகிட்டே சொன்னப்ப அப்டியே அதிர்ச்சியால்ல ஆகிட்டாரு.

ஆனாலும் சமாளிச்சிகிட்டு ‘பவுனு அழுவாத. நாம காசு, பணம் இல்லாதவுங்க. ஒழச்சு சம்பாதிக்கவும் முடியாதவுங்க. நாம அவுங்களுக்கு சொமையாதா இருப்போம்.

தென்னையப் பெத்தா இளநீீரு, பிள்ளையப் பெத்தா கண்ணீருன்னு சொல்லி எனக்கு சமாதானம் சொல்லிட்டிருந்தவரு தீீடீருனு ‘விம்மி விம்மி’ அழ ஆரம்பிக்கவும் நானும் சேந்துல்ல அழுதுட்டேன்.

அப்பரமேட்டுக்கு ரொம்ப ஒடம்புக்கு முடியாம போய்ட்டாருல்ல” எதிரில் நிற்கும் யாரிடமோ தன் ஆற்றாமையையயும் உள்ளக் குமுறலையும் கொட்டித் தீர்ப்பதாய் நினைப்பவரைப் போல் வாய்விட்டுச் சப்தமாய் புலம்பிக் கொண்டிருந்தவரின் காதில் ஒற்றை அறையிலிருந்து படுக்கையில் கிடக்கும் கணவரின் இருமல் சப்தம் கேட்டது.

சட்டென புலம்பலை நிறுத்திவிட்டு கணவர் இருந்த அறையை நோக்கி நடந்த நேரம் ஹாலின் ஜன்னல் கதவு காற்றில் ‘படீரெ’ன ஜன்னல் பிரேமில் வந்து அடித்து மோதிக் கொண்டது.

‘சடசட’வென வேகமாய் தூரல் போட ஆரம்பித்து கண்ணிமைக்கும் நேரத்தில் பேரிரைச்சலோடு பெருமழை பெய்ய ஆரம்பித்தது.

சட்டெனக் கரன்ட் போனதால் டிவி நின்று போனது. வீடே அந்த மதிய நேரத்திலும் இருண்டு போனது.

‘ஐயோ! இவுரு முழுச்சிக்கிட்டா சாப்பாடு குடுக்கனுமே. அரிசிய களஞ்சி போட்டு கஞ்சியாவது காச்சுவம்’ என்று நினைத்தபடி கணவரின் அறைக்குள் கட்டிலில் படுத்திருக்கும் கணவரை எட்டிப் பார்த்து விட்டுச் சமையலறைக்குள் நுழைந்தவரை இருட்டு தடுமாற வைத்தது.

‘அடதெய்வமே! ஏகத்துக்கும் இருட்டால்ல இருக்கு. கொளுத்தி வெக்க மெழுகுவத்தியும் இல்ல. அடிச்சி ஊத்துற மழையில எப்பிடி கடைக்குப் போவுறது? என்னாத்த வாங்குறது?

‘அட! அடீல கொஞ்சமாத்தான் அரிசி கெடக்கு. இன்னும் மூணு நாளுக்குன்னா கஞ்சிக்கு வரும். இன்னும் ரேஷனுக்குப் போவல. மழ வுட்டதும் ரேஷன் கடைக்குப் போவனும். காசு குடுக்காத அரிசியாச்சும் வாங்கலாமில்ல’ மனசைத் தேற்றிக் கொண்டார்.

இரவு பத்துமணி வரை மழை நிற்கவே இல்லை. கண்ணு மண்ணு தெரியாமல் பிரளயமே வந்ததுபோல் இடைவெளியே விடாமல் ஊற்றிக் கொண்டே இருந்தது.

கரன்ட் வந்தபாடில்லை. லேசாக வாசல் கதவைத் திறந்து பார்த்தார் பவுனம்மா. அந்தகார இருட்டு.

“ஊ..ஊ..” என்று சப்தத்தோடு சுழன்றடிக்கும் சூரைக் காற்றின் வேகத்தோடு சேர்ந்து பேய்மழையின் ருத்ர தாண்டவம். பயந்து போனார் பவுனம்மா.

கதவின் அடிப்பகுதியில் இருந்த ஓட்டை வழியாக வாசலில் தேங்கி நின்ற மழைநீர் உள்ளே நுழைந்து கால்களை நனைக்க, “அடகண்ராவியே! மழத்தண்ணி உள்ளன்னா வருவுது” என்றபடி,

‘கோணிச் சாக்க கீக்கக் கொணாந்து கதவு ஓட்டய அடைக்கணும்’ என்று நினைத்தவராய் சாக்கைத் தேடி கணவர் படுத்திருக்கும் அறையிலிருக்கும் அலமாரியை நோக்கி இருட்டில் நிதானாமாய் நடந்தவர் காலில் வழுவழுப்பாய் ஏதோ ஒன்று பட காலை ஓர் உதறு உதற, நிதானம் தவறித் தள்ளாடி சுவற்றில் ‘மடேர்’ எனத் தலைமோத ‘ஐயோ!’ என்று கத்தக்கூடத் திராணியற்று குப்புற விழுந்து மூர்ச்சையாகிப் போனார்.

மிகுதித் தண்ணீர் வெகு வேகத்தோடு சீறிப் பாய்ந்து தேங்கி நிற்கும் மழைநீரோடு தானும் சங்கமமாகி அந்த குடியிருப்புப் பகுதியைச் சூழ்ந்து சிறியவீடு, பெரியவீடு, பங்களா, அடுக்குமாடி, குடிசை என்ற எந்த பாகுபாடும் பார்க்காமல் எல்லா வீட்டுக்குள்ளும் அழையா விருந்தாளியாய் சாத்தியிருக்கும் கதவையும் தாண்டி நுழைந்து பத்து நிமிட நேரத்துக்குள் வீடுகளின் அனைத்துப் பகுதியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

பவுனாம்மாவின் வீட்டுக்குள்ளும் நுழைந்த தண்ணீர் மூர்ச்சையாகிக் கிடக்கும் பவுனம்மாவின் உடலை நனைத்து பின் தனக்குள் அவரை மூழ்கடித்து மேலும் ஐந்தடி உயர்ந்து கட்டிலில் வாடி வதங்கிப் போய் மெலிந்து வற்றிப் போய் தூக்கத்தில் கிடந்த பவுனம்மாவின் கணவரையும் தனக்குள் அடக்கிக்கொண்டு வீட்டின் கூரை வரை நிரம்பி நின்றது.

மணி பனிரெண்டு.

காற்று மற்றும் தண்ணீரின் வேகத்தால் வாசல்கதவு திறந்து கிடக்க, உணர்வற்ற நிலையில் தண்ணீருக்குள் மூழ்கி மாய்ந்து போன பவுனம்மாவின் சடலமும் அவரின் கணவரின் சடலமும் நிரம்பி நின்ற நீரின் மேலே வந்து மிதக்க ஆரம்பித்து வாசலை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வீட்டுக்கு வெளியே வந்து தெருவில் நெஞ்சுவரை ஓடும் நீரில் பயணித்து நீரில் மூழ்கிக் கிடந்த மரக்கிளையில் முட்டி நின்றன.

வெள்ள நிவாராண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி.

முதலமைச்சரும் மற்றும் சில மந்திரிப் பிரதானிகளும் அப்பகுதி எம்எல்ஏவும், அதிகாரிகளும் மேடையில் நிரம்பியிருந்தனர்.

மழை வெள்ளத்தால் உடமைகள் அனைத்தையும் இழந்த பாவப்பட்ட மக்கள் வெட்ட வெளியில் நிவாரண உதவிக்காக கையேந்தியபடி நிற்க, மேடைக்கு அழைக்கப்பட்ட அந்த இரு ஆண்களும் முதல்வருக்கு நேரில் வந்து நின்று அவரைக் கையெடுத்துக் கும்பிட்டனர்.

அதிகாரியோ உதவியாளரோ யாரோ ஒருவர் ஒவ்வொரு கவரிலும் ஐந்து லட்சம் இருக்கும் இரண்டு காகிக்கலர் கவர்களைத் தட்டில் வைத்து முதல்வரிடம் நீட்டினார்.

முதல்வர் அவ்விரு கவர்களையும் எடுத்து தனக்கு முன்னே நின்று கொண்டிருந்த அந்த இரு ஆண்களிடமும் அளிக்க, கவர்களின் இரு முனைகளையும் ஆண்களிருவரும் ஆளுக்கு ஒன்றாய் பிடித்துக் கொள்ள கவரின் நடுப்பகுதியின் உச்சியை முதல்வர் பிடித்துக் கொள்ள நாலாபுறத்திலிருந்தும் கேமராக்கள் நிகழ்வினைப் படம்பிடித்தன.

வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் மகன்கள் நாங்கள். எனவே பத்து லட்சத்தைப் பெறத்தகுதி பெற்றவர்கள்; உரிமையானவர்கள்; இந்த ஒரு தகுதியே போதும் எங்களுக்கு என்பதுபோல் ஃபோட்டோக்களுக்கு ஃபோஸ் கொடுத்தனர்.

வெள்ள நிவாரணப் பொருட்களை வாங்கக் கூடியிருந்த கூட்டத்தினர் நடுவே
நின்று கொண்டிருந்த காத்தாயி கிழவிக்கு மேடையில் முதல்வரின் கையால் பெற்றோர்கள் வெள்ளத்தில் உயிரிழந்தால் கொடுக்கப்படும் இழப்பீட்டுத் தொகையான பத்துலட்சத்தைக் கைநீட்டி வாங்கும் பவுனம்மாளின் உதவாக்கரை மகன்களைப் பார்த்து அடிவயிற்றிலிருந்து ஆத்திரம் பற்றியது.

‘இவுனுகளுக்கு, பணத்த குடுக்காதீங்க குடுக்காதீங்க’ என்று கத்த வேண்டும்போல் இருந்தது.

“நாசமா போறவனுங்களா. இந்த காசு ஒங்குளுக்கு ஒட்டுமா? செரிக்குமா? நீங்க நல்லாவே இருக்கமாட்டீங்கடா பாவிங்களா!

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்