உயிர்க்கோளம் ஒன்றே ஒன்றுதான்!

உயிர்க்கோளம் என்பது உயிரினங்கள் வாழும் புவி ஆகும். இந்த பேரண்டத்தில் உள்ள கோள்களில் புவியில் மட்டுமே உயிரினங்கள் வாழ ஏதுவான சூழ்நிலைகளான காற்று, தட்பவெப்பம், நீர், உணவு போன்றவை காணப்படுகின்றன.

உயிர்க்கோளம் உருவான விதம்

புவியானது சூரியனிடமிருந்து சிதறி வந்த ஒரு பகுதி ஆகும். சிதறிய சூரியப் பகுதியானது பின் உருண்டை வடிவத்துடன் சுழல ஆரம்பித்தது.

முதலில் நெருப்புக்கோளமாக இருந்த இப்புவியானது நாளடைவில் குளிர்ந்தது. பின் அதில் நீரும், நிலப்பகுதியும் தோன்றின.

உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற உயிர்கோளமாக அது மாறுவதற்கு சுமார் நூற்றைம்பது கோடி ஆண்டுகளுக்கும் மேலானது.

புவியின் மையக்கோட்டுப் பகுயிலிருந்து துருவப் பகுதி வரை புவியின் எல்லா இடங்களிலும் உயிரினங்கள் காணப்படுகின்றன.
இந்த உயிர் கோளத்தில் உயிரிகள் முதலில் நீரில் தோன்றின. அவை நாளடைவில் நிலத்திலும் பரவின. பின்னர் அவை படிப்படியாக நிற்பன, ஊர்வன, பறப்பன, நடப்பன என உருவாகி பின் மனிதன் என்ற உயர்நிலையை அடைந்தன.

அண்டத்தில் உயிர்க்கோளம் என்று சொல்லப்படும் பூமியைத் தவிர‌ வேறு எந்த கிரகத்திலும் உயிரினங்கள் வாழ இயலாது.

இந்த உயிர்கோளத்தில் ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிர்கள் காணப்படுகின்றன. இன்றைக்கு மனிதனே இந்த உயிர் கோளத்தின் மையமாகச் செயல்படுகின்றான். உயிர்கோளத்தின் வாழும் உயிர்களுக்கும், அங்குள்ள இயற்கைச் சுழலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

உயிர்கோளமானது நிலக்கோளம், நீர்கோளம், வளிக்கோளம் என்ற மூன்று பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

 

நிலக்கோளம்

நிலக்கோளம்
நிலக்கோளம்

நிலக்கோளத்தில் உயர்ந்த மலைகளும், அழகிய பள்ளத்தாக்குகளும், வளமான சமவெளிப்பகுதிகளும், வற்றாமல் வளம் பரப்பும் ஆறுகளும், மலைவீழ் அருவிகளும், கனிதரும் மரங்களும், மழை தரும் காடுகளும் காணப்படுகின்றன. ஆனால் நிலக்கோளத்தில் உள்ள இவையாவும் மாற்றத்திற்கு உட்பட்டவையே.

எரிமலைகள், நிலநடுக்கங்கள், ஆழிப்பேரலைகள் ஆகியவற்றால் நிலக்கோளத்தின் பகுதிகள் கடலில் மூழ்கிவிடுவதும், புதிய நிலத்தோற்றங்கள் உருவாவதும் உண்டு.

எடுத்துக்காட்டாக பூம்புகாரும், தனுஷ்கோடியும் ஆழிப்பேரலையால் கடலுக்குள் மூழ்கிவிட்டன. கடற்கரைக் கோவில்களுள் மாமல்லபுரம் மட்டுமே எஞ்சியுள்ளது.

 

நீர்க்கோளம்

நீர்க்கோளம்
நீர்க்கோளம்

புவியின் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டுள்ளது. இதுவே நீர்க்கோளம் என்றழைக்கப்படுகிறது. நீர்கோளமே புவியின் தனித்தன்மையாகும். இதனாலே புவி அண்டத்தின் ஏனைய கிரகங்களிலிருந்து வேறுபடுகிறது.

நீர்க்கோளத்தினைப் பெற்றுள்ளதால் புவி நீலகிரகம் என்றும் அழைக்கப்படுகிறது.

கடல் என்பது வற்றாத நீர்நிலையாகும். கடல்தான் புவியின் தட்பவெப்ப நிலையை ஒழுங்குபடுத்துகிறது. கடலில் உள்ள நீரானது ஆவியாக மாறி மேகங்களாகத் திரண்டு மழையாகப் பெய்கிறது.

கடல் மீன்கள், உப்புகள், தாதுஉப்புக்கள், பவளம், முத்து, கிளிஞ்சல், சங்கு முதலியவற்றை நமக்கு வழங்குகிறது. மேலும் எண்ணற்ற உயிரிகளுக்கு வாழிடமாகவும் உள்ளது.

 

வளிக்கோளம்

வளிக்கோளம்
வளிக்கோளம்

நிலப்பரப்பின் மேற்புறத்தில் வளி எனப்படும் காற்று மண்டலம் பரவியுள்ளது. இந்த காற்று மண்டலமே வளிக்கோளம் என்றழைக்கப்படுகிறது.

காற்று மண்டலம் ஒரு கலவை. அதில் நைட்ரஜன் 78 சதவீதமும், ஆக்ஸிஜன் 21 சதவீதமும், மற்ற வாயுக்கள் 1 சதவீதமும் கலந்துள்ளன.

உலக வளிக்கோளமானது உயரத்தையும், வெப்பநிலையும் அடிப்படையாகக் கொண்டு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அப்பிரிவுகளில் குறிப்பிடத்தக்கவை அடிவளி மண்டலம் (ட்ரோபோஸ்பியர்), மேல்வளி மண்டலம் (எக்ஸோஸ்பியர்) ஆகியவை.

அடிவளிமண்டலம் நிலக்கோளத்தின் வெப்பநிலையை ஒரே சீராக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. புவிக்கு வரும் வெப்பத்தினைச் சீர்செய்து அனுப்பப் பசுமைக் கூண்டு போல இம்மண்டலம் செயல்படுகிறது.

மேல்வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் உயிர்கள் செழிக்க இயற்கை அளித்திருக்கும் பாதுகாப்பு அரணாகும். கதிரவனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள் நிலப்பரப்பைத் தாக்காத வண்ணம் இப்படலம் தடுக்கிறது.

 

சுற்றுச்சூழல் மற்றும் அதன் மாசுபாடு

உயிரினங்கள் வாழும் பகுதியில் உள்ள நிலக்கோளம், நீர்கோளம், வளிக்கோளம் போன்றவற்றை உள்ளடக்கிய பகுதியே சுற்றுச்சூழல் எனப்படுகிறது.இந்த சுற்றுச்சூழலானது திண்ம, நீர்ம, வாயுப்பொருட்களால் மாசடைகின்றன.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களிலிருந்து வெளியேறும் கழிவுகள், விவசாயக்கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் முதலியவற்றால் நிலக்கோளம் மாசடைகின்றது.

வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், ஆலைகள் வெளியேற்றும் வேதியியல் கழிவுகள் இவற்றால் நீர்க்கோளம் மாசடைகிறது.

போக்குவரத்து ஊர்திகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை, அணுமின்நிலையங்கள் வெளியேற்றும் கதிரியக்கமாசு முதலியவை வளிக்கோளம் மாசடையக் காரணமாகின்றன.

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் இக்காரணிகளை உரிய முறையில் சீர்செய்வது இன்றியமையாதது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. உயிரினங்களைக் காக்க வனங்களைப் பாதுகாப்பது இன்றியமையாதது.

விண்ணை வெற்றி கொள்ளும் முனைப்பில் இருக்கும் நாம் சுற்றுச்சூழலையும் காக்க வேண்டும். சுற்றுசூழல் மாசுபாட்டை தவிர்த்து உயிர்க்கோளம் காத்து வருங்கால சந்ததியினருக்கு பரிசளிப்பதை நாம் ஒவ்வொருவரும் கடமையாகக் கொள்ள வேண்டும்.

வ.முனீஸ்வரன்

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.