உறவுகள் உதறித் தள்ளிய ஒரு துளியே!
உயிர்வலியால் தினம்துடிக்கும் மைவிழியே!
மழைத்துளியால் துளிர்விட்டு
மண்முழுதும் படர்வதற்கு
மகிழ்ச்சியோடு புறப்பட்ட இளந்தளிரே
உன் மழலைத் தளிரின் மேல்
வெந்நீரை ஊற்றும் வெந்தனல் உறவுகள்!
அதைக் கண்டு மடியாதே!
நான் சொல்லும் கவி கேட்டு
உன் வலிக்கு போடுப் பூட்டு
பணத்தை பார்க்கும் பார்வையற்ற பைத்தியக்காரர்க்கு
உன் மனத்தைக் காட்டினால் ஒளி தெரியுமோ?
உயர்ந்தால் உலகம் உன்னை நாடும்
தாழ்ந்தால் உறவுகள் குற்றம் சாடும்
இதுவே நியதி தெரியாதா?
உன்னால் உயர முடியாதா?
பணமில்லா மனிதரெல்லாம்
பிணமாகிப் போவதில்லை
சேர்பட்டுக் கிடந்தாலும்
வைரம் என்றும் தாழ்ந்ததில்லை
உறவால் ஒதுக்கப்பட்டோர்கள்
உயிரை இழப்பது சரிதானா?
கஷ்டத்தில் உதவாதோர் தனைக் கண்டு
கலங்கி நிற்பது முறைதானா?
ஏழை என்பது நிரந்தரம் அல்ல
நாளைய வாழ்வின் மந்திரம் அது
முடங்கிக் கிடந்தால் உறவெனும் சிலந்தி
உனை சிறைபிடித்து ஒதுக்கிவிடும்
வெற்றிக்கனியை நீ எட்டிப்பிடித்தால்
கம்பளிப்பூச்சி உறவுகள் தானாய்வந்து ஒட்டிக் கொள்ளும்
பச்சோந்தியின் நிறம் கண்டு
பரிதாபமாய் ஏன் நிற்கிறாய்?
காலம்போல் அதன் நிறம் மாறும்
ஒருநாள் உருமாறும்
இன்று கருப்பாக இருக்கும் உறவின் நிறம்
நாளை வெண்மையாக மாறி
உன் பசுமை வாழ்வில் பங்கேற்க வரும்
தடுப்புச் சுவர் ஒன்று தரைவழிக்கு இருந்தால் தான்
வானம் தேடி நீ பறப்பாய்
வாழ்வினில் என்றும் சிறகடிப்பாய்
மதியாதோர் தனைக் கண்டு
மனதில் நித்தம் கவலை கொண்டு
மகிழ்ச்சியை ஏன் தொலைக்கின்றாய்?
மதியார் வாசல் மிதிக்காதே
மதிக்கும் வரைக்கும் தோற்காதே
ஏச்சும் பேச்சும் கேட்காதே
எடுத்தெறிவோரை எண்ணாதே
எதையும் நெஞ்சில் போடாதே
வஞ்சனை எண்ணத்தை வளர்க்காதே
வாடிக்கை இதுவென நினைக்காதே
ஒருநாள் வாழ்க்கை மாறிவரும்
உதயம் உன்னைத் தேடிவரும்
தயக்கம் சிறிதும் கொள்ளாமல்
துணிந்து நீயும் நடைபோடு
தூய வாழ்வுனை நாடிவரும்
துள்ளி அதனில் விளையாடு !!!
-சி.பபினா B.Sc
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!