ஊதாக்கலர் சுருக்குப்பை - 1

ஊதாக்கலர் சுருக்குப்பை – 1

வேணியம்மா திரிசூலம் ரெயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்து டிக்கெட் வாங்கிக் கொண்டு அவசர அவசரமாய் நடைமேடைக்கு வந்தார்.

ஆனாலும் அவர் ஏறவேண்டிய திருமால்பூர் செல்லும் மின்சார ரயில் வண்டி கிளம்பி சற்றுதூரத்தில் சென்று கொண்டிருப்பது கண்ணில்பட்டது.

‘அடக்கடவுளே! ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி வந்திருக்கலாம்! இத்தனைக்கும் ஆட்டோவுலதான் வந்தோம். டிராஃபிக்கு கொஞ்சமாவா இருக்கு.

அங்கங்க ஆட்டோ நின்னு நின்னுதானே வரவேண்டிருக்கு. என்னா கூட்டம், என்னா கூட்டம் கசகசன்னு அப்பிடி எங்கதான் போகுமோ ஜனங்க!

ம்! நீ வல்லியா காஞ்சி பொரத்துலேந்து திரிசூலத்துக்கு ஒறவுக்காரவுங்க வீட்டுல சாவுன்னு. அதுபோலத்தானே அவுங்கவுங்களுக்கு ஆயிரம் வேலை’ மனசு இடித்தது.

‘ஆமா! ஆமா! சரிதான், சரிதான். கரெக்டுதா’ மனம் சொல்லும் நியாயத்தை ஏற்றுக் கொண்டார் வேணியம்மா.

பயணிகள் அமர்வதற்காக ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த நீண்ட சிமென்ட் பெஞ்ச்கள் பெரும்பாலும் நிரம்பியிருக்க, ‘எங்காவது உட்கார இடம் கிடைக்குமா?’ என்று பார்வையை ஓடவிட்டார்.

அதென்னவோ ஒரே ஒரு பெஞ்சில் ஒருகோடியில் நடுத்தர வயதுடைய கணவன் மனைவி இருவர் அருகருகே அமர்ந்து யூஸ்&த்ரோ கப்பில் டீயோ காபியோ அருந்திக் கொண்டிருக்க மீதியிடம் காலியாகக் கிடந்தது. பெஞ்சின் அடியில் நாயொன்று சுருண்டு படுத்துக் கொண்டிருந்தது.

வேணியம்மாவின் கண்ணில் அந்த பெஞ்ச் பட்டதும் ‘எங்கே வேறு யாராவது அந்த பெஞ்ச்சில் வந்து அமர்ந்துவிட்டால் என்ன செய்வது?’ என்று நினைத்தாரோ என்னவோ நடையில் கொஞ்சம் வேகம்காட்டி நடந்து வந்து அந்த பெஞ்சில் அமர்ந்தார்.

முதுகைச் சாய்த்து அமர்ந்து கொள்ளும் வசதி இல்லாத பெஞ்ச் என்பதால் ஏற்கனவே முதுகு வலியால் அவதிப்படும் வேணியம்மாவுக்கு முதுகைச் சாய்க்காமல் நெட்டுக் குத்தாய் அமர்ந்து கொள்ளவேண்டியிருந்தது அவஸ்தயாய் இருந்தது.

‘இந்த மட்டும் ஒக்காரவாவது எடம் கெடுச்சுதே! அதுவே பெரிசு!’ மனதை சமாதானம் செய்து கொண்டார்.

இடது முழங்கையில் மாட்டியிருந்த மஞ்சப்பைக்குள் வலது கையைவிட்டு சின்ன சைஸ் பர்ஸ் ஒன்றை வெளியில் எடுத்து அதற்குள்ளிருந்த பட்டன்ஃபோனை எடுத்து உயிரூட்டி மணி பார்க்க, நேரம் பனிரெண்டு முப்பத்தாறு என்று காட்டியது செல்திரை.

‘ப்ச்! இப்பதான் மணி ஒன்னே ஆகப் போவுது. இனிமே நாலே கால் மணிக்குதா திருமால்பூருக்கு ரெயில். மூணு மணி நேரத்துக்கு மேலல்ல காத்துகிட்டு ஒக்காந்திருக்கனும். அதெல்லாம் சரியா வராது. செங்கல்பட்டு வரைக்கும் போகும் ரெயில்ல போயி அங்கேந்து காஞ்சிபுரம் போகும் பஸ்ஸுல போயிட வேண்டீதுதான்’ என்று தீர்மானித்துக் கொண்டார்.

‘எப்படியும் செங்கல்பட்டு வரை செல்லும் வண்டி வர குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும்’ என நினைத்துக் கொண்டே பார்வையை இங்குமங்கும் சுழல விட்டார்.

வருவோரும் போவோருமாய் கூட்டம் அதிகமாகவே இருந்தது. அவ்வப்போது மின்சார ரயில்களின் வருகை மற்றும் புறப்படும் நேரமும் அவை வந்து நிற்கக்கூடிய ஃப்ளாட் ஃபார நம்பரும் இனிமை வழியும் பெண் குரலால் அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

இரண்டு மூன்று நாய்கள் ‘கர்..கர்..’ என்று உறுமியபடி ஒன்றை ஒன்று துரத்தியபடி செல்ல, பெஞ்சுக்கு அடியில் படுத்திருந்த நாய் “வள் வள்” என்று தன் பங்குக்கு குரைத்தபடி ‘சரேல்’ என எழுந்து மற்ற நாய்களை நோக்கி ஓடியது.

சாவு வீட்டுக்குச் சென்று விட்டு தலைக்குக் குளிக்காமல் சாப்பிடப் பிடிக்கவில்லை என்பதால் காலையிலிருந்து ஒன்றும் வயிற்றுக்குப் போடாததால் ‘டர்.. புர்..’ என்று வெற்று வயிறு சப்தம் எழுப்பி தன் எதிர்ப்பைக் காட்டியது.

‘கான்டீனில் டீயாவது வாங்கிக் குடிக்கலாமா?’ என்று நினைத்தபோதுதான் தலையில் கூடையைச் சுமந்தபடி வயதான கிழவி ஒருத்தி, வேணியம்மாவுக்கு வெகு அருகாமையில் வந்து தரையில் கூடையை வைத்துவிட்டு தானும் தரையிலேயே அமர்ந்தாள்.

ஒட்டி உலர்ந்த தேகம். முகத்தில் வரிவரியாய்க் கோடுகள். ‘பஞ்சு’போல் வெளுத்த தலைமுடி. கீழ் வரிசைப் பற்கள் சிலவற்றைக் காணவில்லை. லேசாய்க் கூன் விழுந்த முதுகு.

கிழவியின் தேய்ந்து போன உடலும் கட்டியிருந்த சேலையும் அவளின் ஏழ்மையைப் பறைசாற்றப் போதுமானதாய் இருந்தன.

சட்டென வேணியம்மாவின் பார்வை கிழவியின் மீது படிந்தது. கூடையிலிருந்து வீசிய பழங்களின் வாசம், அது ‘பழக்கூடை’ என்பதையும், கிழவி ‘பழம் விற்பவள்’ என்பதும் புரிந்தது அவருக்கு.

“உஸ்.. அப்பாடா! என்னமா வெய்ய கொளுத்துது. ஒடம்பே பத்திக்கிட்டு எரியிற மாரில்ல இருக்கு!” சொல்லிக் கொண்டே தலையிலிருக்கும் சும்மாட்டை எடுத்து கூடைமீது போர்த்தியிருந்த துணி மீது வைத்து விட்டு பொங்கலுக்கு அரசாங்கம் இலவச மளிகைப் பொருட்களைப் போட்டுத் தந்திருந்த பையிலிருந்து, தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டாள்.

நடைமேடையின் முனைக்குப் போய் தண்ணீர் பாட்டிலைத் திறந்து இடதுகையில் வைத்துக் கொண்டு வலதுகையில் தண்ணீரைச் சரித்து முகத்தில் ‘பளீர்ப் பளீரெ’ன இரண்டு மூன்றுமுறை அடித்துக் கொண்டாள். பின்கழுத்தில் தண்ணீரால் துடைத்துக் கொண்டாள். வாயில் ஊற்றிக் கொப்பளித்தாள்.

கிழவி வெய்யிலின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ள செய்து கொண்டிருந்த முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் கிழவியின் கூடைக்கருகே வந்து உட்கார்ந்தான் நாற்பது, நாற்பத்தைந்து வயது இருக்கும் ஆண் ஒருவன்.

வெகு சுவாதீனமாய் கூடைமீது போர்த்தியிருந்த துணியை விலக்கி கேரிபேக்குகளில் தனித்தனியாய் வைத்திருந்த கொய்யாப்பழம், கமலா ஆரஞ்சு, கொடுக்காப்புளி பழங்களிலிருந்து கொய்யாப்பழம் ஒன்றை எடுத்துக் கடித்தபடி இடது கையால் ஆரஞ்சுப்பழம் ஒன்றை எடுத்தான்.

அப்போது ‘குடிநீர்’ என்று எழுதப்பட்டிருந்த போர்டின் கீழிருந்த குழாயிலிருந்து காலிபாட்டிலில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு கூடை வைத்த இடத்தை நோக்கி வரத் திரும்பிய கிழவி, “டேய்.. டேய்.. தொடாத! கூடையத் தொடாத! எடு கைய! எடு கைய!” கத்திக் கொண்டே கூடையருகே ஓடி வந்தவள், ‘சரேலெ’னக் குனிந்து கூடையை பற்றியிருந்த அவனின் கைகளைப் பிடித்துத் தள்ளினாள்.

தள்ளிய வேகத்தில் கிழவியின் தேகம் பேலன்ஸ் இழந்து தடுமாற அப்படியே கீழே விழப் போனவள் வேணியம்மா அமர்ந்திருந்த பென்ஞ்சின் விளிம்பைப் பிடித்துக் கொண்டாள்.

(தொடரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்