வானவில்லே எங்கிருந்து
வண்ணம் கொண்டு வந்தாய்?
தேனடையே எங்கிருந்து
தித்திப்பினைப் பெற்றாய்?
நாணலே நீ எங்கிருந்து
நல்ல உடல் பெற்றாய்?
கானக்குயிலே எங்கிருந்து
கானம் பாடக் கற்றாய்?
நுணலே உன் ராகம் தன்னில்
நுண்மை எங்கு கற்றாய்?
வேணுகானம் எங்கிருந்து
வெற்று மூங்கில் பெற்றாய்?
மோன நிலை தியானம் செய்ய
கொக்கு எங்கு கற்றாய்?
கெண்டை மீனைக் கண்டவுடன்
கிளம்பும் வீரம் எங்கு பெற்றாய்?
நாமும் பல வித்தைகளை
நாளும் கற்றுக்கொள்ள
வாழும் வரை இயற்கையின்
வளம் காக்க வேண்டுமே!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!