என்னுள் என்னைத் தேடி – கவிதை

என் மரணங்கள்
தோற்றுப் போய்க் கொண்டிருக்கின்றன‌
தொடர் வெற்றிகளை வசமாக்கிக் கொள்ளும் மனதுள்
உன் மனதின் அரவணைப்பின் காரணங்களால்

சருகாகி உதிர்ந்து கிளைகள்
பல முறிந்தபோதும்
வேர்களுக்குண்டான
நீர் நிரப்பி துளிர்த்து
நிமிரச் செய்கிறாய்
அங்குசம் வைத்திராது அன்பால்
வழிநடத்தியபடி

உன் கோபங்களும் நியாயமானதாகவே இருக்கலாம்
என் கோபங்கள் போலவே
இருந்தும் எப்போதும்
கோபப்படுவது இல்லை
என் போல் நீயும்
தணிந்து விடும் கோபத்தின் மறு நொடிகளில்
தவமிருந்து தலைகோதி விடுகிறது காதல்

வரவேண்டிய நேரத்தில் வந்த
வான் மழை போலவே
என் நிலங்கள் யாவற்றையும்
பாலைத் திணையிலிருந்து
பக்குவமாய் மாற்றிய மருதம் நீ!

உன்னுள் என்னைக் கரைத்து
என்னுள் என்னைத் தேடி
எனக்கே என்னைத் தந்தவள் நீ!

வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது
எனக்காக நீ வாழ்ந்து கொண்டிருக்கையில்!

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250