எல் நினோ பற்றி தெரிந்து கொள்வோம்.

எல் நினோ இன்றைக்கு அதிக மழை மற்றும் அதிக வெயில் உள்ளிட்ட தட்பவெப்ப மாறுதல்கள் மற்றும் பேரழிவுக்கு முக்கிய காரணியாக கூறப்படுகிறது. இக்கட்டுரையில் எல் நினோ பற்றி தெரிந்து கொள்வோம்.

இது இயற்கையில் நிகழக்கூடிய எதிர்பாராத நிகழ்வாகும். பசிபிக் பெருங்கடல் பகுதியின் மேற்பரப்பில் நடைபெறும் வெப்பநிலை ஏற்றதாழ்வு எல் நினோ உண்டாக முக்கிய காரணம் ஆகும்.

எல் நினோவானது உலகின் தட்பவெப்ப நிலைகளை தற்காலிகமாக மாற்றிவிடக் கூடியது.

எல் நினோ என்றால் என்ன?

எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடல் மேற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தைக் குறிக்கிறது.

அதாவது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையானது வழக்கத்திற்கு மாறாக சற்று கூடுதலாக இருக்கும்.

பசிபிக் பெருங்கடல் மேற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை உயர்வே எல் நினோ என்று அழைக்கப்படுகிறது.

இந்நிகழ்வு பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகள் இடைவெளியில் நடைபெறுகிறது.

எல் நினோவானது 12 முதல் 18 மாதங்கள் வரை நீடிக்கும். இந்நிகழ்வு பொதுவாக டிசம்பர் மாதத்தில் தோன்றுகிறது.

கிருஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ஏற்படுவதால் இது (குழந்தை ஏசு) சிறுவன் என்னும் பொருள்படும் படி ஸ்பானிய மொழியில் எல் நினோ என்று அழைக்கப்படுகிறது.

எல் நினோ செயல்பாடு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கலாம்.

இதனைப் பற்றி 15-ம் நூற்றாண்டில் தென் அமெரிக்க மீனவர்களின் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது.

எல் நினோ ஏற்படும்போது தென் அமெரிக்க மேற்கு கரையோர நாடுகளான பெரு, ஈகுவடார், சிலி ஆகிய நாடுகளின் அருகில் உள்ள பசிபிக் மேற்பரப்பு நீரானது வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பத்துடன் இருக்கும்.

எல் நினோ தோன்றும் விதம்

சாதாரணமாக வியாபாரக் காற்றானது பசிபிக் கடலின் நிலநடுக்கோட்டுப்பகுதியில் கிழக்கு திசையிலிருந்து மேற்கு திசை நோக்கி வீசுகிறது.

இக்காற்று பசிபிக் கடலின் மேற்பரப்பு வெப்பநீரினை கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிக்கு கொண்டு செல்கிறது.

அதாவது இக்காற்றானது பசிபிக்கின் மேற்குப் பகுதியில் (ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய கண்டங்களை ஒட்டிய பகுதிகள்) 18 சென்டி மீட்டர் உயரத்தில் கடல் மேற்பரப்பு வெப்பநீரைக் குவிக்கும்.

அப்போது பசிபிக்கின் மேற்கே தள்ளிய நீருக்குப் பதிலாக கிழக்குப் பகுதியில் (மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளை ஒட்டிய பகுதிகள்) ஆழத்தில் உள்ள குளிர்ந்த நீரானது மேலே இழுக்கப்பட்டுகிறது.

இதனால் பசிபிக்கின் மேற்குப்பகுதி கடற்பரப்பு வெப்பநிலை அதிகரித்தும் (30 டிகிரி செல்சியஸ்), கிழக்குப்பகுதி வெப்பநிலை குறைந்தும் (22 டிகிரி செல்சியஸ்) காணப்படுகிறது.

பசிபிக்கின் மேற்குப்பகுதியில் உள்ள வெப்பமான கடல்நீரால் மேற்பரப்பில் உள்ள காற்று வெப்பமாகி தாழ்வழுத்த நிலையை உருவாக்கி மழைப்பொழிவைத் தோற்றுவிக்கிறது.

பசிபிக்கின் மேற்குப்பகுதியில் வெப்பமான காற்று ஈரப்பதத்தை உறிஞ்சி மேலெழுந்து மேற்குப் பகுதியில் மழைப்பொழிவை தந்து கிழக்குப் பகுதியில் குளிர்ந்த வறண்ட காற்றாக இறங்குகிறது.

இந்த இயற்கையான நிகழ்வுகள் அனைத்தும் வியாபார காற்றின் வலுவூட்டலுக்கு வழிவகுக்கின்றன. மேலும் பசிபிக் கடலில் ஒரு சுய-நீடித்த இயக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இதனால் பசிபிக் பெருங்கடலின் மேற்குப்பகுதியானது (ஆசிய மற்றும் ஆஸ்திரேலியப் பகுதிகள்) மிதமான வெப்பத்தையும், ஈரப்பதத்தையும், அதிகமழைப்பொழிவையும் கொண்டிருக்கும்.

கிழக்குப்பகுதி (பெரு, சிலி, ஈகுவடார்) குளிரான, வறண்ட, குறைந்த மழைப்பொழிவைக் கொண்டிருக்கும்.

எல் நினோ
எல் நினோ

 

சிலநேரங்களில் வியாபாரக் காற்றானது பலவீனமடைந்து விடுகிறது. இதனால் பசிபிக்கின் மேற்குப் பகுதியில் வெப்பநீரானது தள்ளப்படுவது குறைந்துவிடுவதுடன் கிழக்குப் பகுதியில் குளிர்ந்த நீர் மேலிழுக்கப்படுவதும் குறைகிறது.

வழக்கமான சுய-நீடித்த சுழற்சியில் குளிரான கடல் பகுதி வெப்பமானதாக மாறும்.

கடல் வெப்பநீரானது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியில் அதிகரிக்கத் தொடங்குகிறது.

இந்நிலையில் காற்றானது மேற்கிலிருந்து கிழக்காக வீசத் தொடங்குகிறது.

இவ்வாறு திசைமாறி வீசும் காற்றினால் உலகின் வெப்பநிலை மற்றும் காலநிலையில் பெரும் மாற்றம் நிகழத் தொடங்குகிறது.

பசிபிக் பெருங்கடலின் மேற்குப்பகுதியானது (ஆசிய மற்றும் ஆஸ்திரேலியப் பகுதிகள்) குளிரான, வறண்ட, குறைந்த மழைப்பொழிவை பெறுகிறன்றன.

கிழக்குப்பகுதி (பெரு, சிலி, ஈகுவடார்) வெப்பத்தையும், அதிகமழைப்பொழிவையும் பெறகின்றன.

எல் நினோவினால் காலநிலையில் ஏற்படும் விளைவுகள்

எல் நினோவின் முக்கிய தாக்கங்கள் வெப்பமண்டலங்களிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஏற்படுகின்றன.

எல் நினோ உலகில் சில பகுதிகளின் வானிலை மீது அதன் தாக்கத்தை அதிகமாக வெளிப்படுத்துகிறது.

எல் நினோவானது தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோர நாடுகளில் அதிக வெள்ளத்தையும் கிழக்கு கரையோர நாடுகளில் வறட்சி ஏற்படுவதற்கான ஆபத்தினையும் உண்டாக்குகிறது.

இந்தியா, இந்தோனேசியா நாடுகள் உள்ளிட்ட ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய கண்டங்களில் வறட்சியை உண்டாக்குகிறது.

பொதுவாக எல் நினோ நிகழும்போது பசிபிக்கின் கிழக்கு பகுதியில் (தென் அமெரிக்க மேற்கு கடற்கரை நாடுகளான பெரு, ஈகுவடார், சிலி) அதிக மழைப்பொழிவும், மேற்கு பகுதியில் (ஆசிய, ஆஸ்திரேலிய கண்டங்கள்) மிகவும் வறண்ட வானிலையையும் ஏற்படுகிறது.

எல் நினோ ஏற்படும்போது உண்டாகும் பசிபிக் கடலின் மேற்பரப்பு வெப்பமானது வளிமண்டலத்தில் வெளியிடப்படுகிறது. இதனால் உலகின் காலநிலை பொதுவாக வெப்பமடைகிறது.

எல் நினோ நிகழும் ஆண்டுகளில் உலகெங்கும் அதிக வெப்பநிலை நிலவுகிறது.

எல் நினோவின் விளைவானது டிசம்பர் மாதத்தில் உச்சநிலை அடைந்து அதன் பிறகு சில மாதங்களில் மறைந்து விடுகிறது.

எல் நினோவைத் தொடர்ந்து வியாபாரக் காற்றானது தனது இயல்புக்குத் திரும்பி கிழக்கிலிருந்து மேற்காக வீசுகிறது.

இது வியாபாரக் காற்றினை வலுவடையச் செய்து வழக்கமான சுய-நீடித்த சுழற்சியை உண்டாக்குகிறது. இந்நிகழ்வு லா நினோ என்று அழைக்கப்படுகிறது.

எல் நினோவினால் உலகப்பொருளாதாரத்தில் ஏற்படும் விளைவுகள்

எல் நினோவினால் ஏற்படும் வறட்சியின் காரணமாக ஆசிய நாடுகளில் உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

அரிசி உற்பத்தி என்பது பல ஆசிய நாடுகளின் முக்கிய வேளாண் தொழிலாக உள்ளது.

வறட்சியால் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் நலிவடைகிறது.

ஆஸ்திரேலியா போன்ற ஆசிய அல்லாத பகுதிகளில் வறட்சியால் கோதுமை உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.

தென் அமெரிக்க நாடுகளில் ஏற்படும் வெள்ளத்தால் மக்கள் தங்கள் வீடுகள், உடைமைகள் ஆகியவற்றை இழந்து பெரும் பொருளாதார இழப்பினைச் சந்திக்கின்றனர்.

வெள்ளத்தால் வேளாண்பயிர்கள் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்திற்கு சேதம் உண்டாகிறது.

பெருநாடானது உலகில் உள்ள ஐந்து முக்கிய மீன்பிடி தளங்களில் ஒன்றாகும். எல் நினோவினால் பெரு, ஈகுவடார், சிலி நாடுகளின் கடல்நீரின் வெப்பம் அதிகரிக்கிறது.

வெப்பத்தினால் மீன் உணவான பிளாங்டனுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் அழிந்து விடுகின்றன.

இதனால் மீன்களுக்கான உணவு கிடைக்காமல் மீன்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயரவோ, இறக்கவோ நேரிடுகிறது.

இதனால் இந்நாடுகளில் மீன்பிடித்தொழில் பாதிப்படைந்து பொருளாதார சரிவை உண்டாக்குகிறது.

மீன்களின் இறப்பு மற்றும் இடம் பெயர்தல் காரணமாக சீல், பென்குவின், பனிக்கரடி, கடல்பறவைகள் போன்றவை பெரும் பாதிப்பினைச் சந்திக்கின்றன. இதனால் உணவுச் சங்கிலியில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது.

எல் நினோ உலகின் பல நாடுகளில் பெரும் சூறாவளிகள், புயல்கள் ஆகியவற்றை உண்டாக்கி பொருளாதர பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தற்காலத்தில் ஏற்படும் பசுமை இல்ல வாயுக்கள், காற்று மாசுபடுத்திகள் கடல் மேற்பரப்பினை வெப்பமுறச் செய்து அடிக்கடி எல் நினோ ஏற்பட காரணமாக அமைவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2015-ல் சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்கு எல் நினோவே காரணம் என கருதப்படுகிறது.

-வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.