எழில் பிளாக் – சிறுகதை

“எழிலரசியோட,  அட்டெண்டர் யாரு?” ஹாஸ்பிடல் நர்ஸ், சத்தமாக இரண்டு, மூன்று முறை கூப்பிட்டு விட்டாள்.

வெயிட்டிங் ரூமில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“வலிப்பு கம்ப்ளைன்ட் எழிலரசி, அட்டெண்டர் யார் ?”

‘அவள் பெயர் எழிலரசியா?’, கார்வேந்தன் சட்டென்று சுதாரித்துக் கொண்டான்.

“நான்தான் சிஸ்டர்” என்று எழுந்து ஓடினான்.

“நீங்கள் என்ன செவிடா? “நீங்கள் அந்தப் பெண்ணுக்கு என்ன வேணும்?”

“அண்ணன்”

“பேரு?”

“கார்வேந்தன்”

“பேர பாரு, கார்வேந்தன், பஸ் வேந்தன்னு….
அவங்க இப்ப நல்ல ஆயிட்டாங்க. கூட்டிகிட்டு போலாம்.”

எழிலரசி கண் மூடி படுத்திருந்தாள். 30 வயது இருக்கலாம். நோயில் படுத்திருப்பவள் பற்றி என்ன வர்ணனை வேண்டி கிடக்கு.

கார்வேந்தன் மெதுவாக அவளை எழுப்பினான். “உன்னை வீட்டில் கொண்டு விட்டு விடுகிறேன். விலாசம் சொல்” என்றான்.

“அது வீடல்ல, ஹாஸ்டல். இரவு 12 ஆகிவிட்டது. இனி உள்ளே போக முடியாது, காலையில் தான் போக முடியும்” என்றாள்.

கார்வேந்தனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கெஸ்ட் ஹவுசுக்கு இவளை மறுபடியும் அழைத்துப் போக முடியாது. ஹாஸ்பிட்டலில் வைத்திருக்க முடியாது.

ஆனால் இவள் ஒரு முக்கிய துருப்பு சீட்டு. கோதண்டராமனை, வழிக்குக்கொண்டுவர இதைவிட பெரிய ஆயுதம் கிடைக்காது.

 

கோதண்டராமன் பெரிய ஆடிட்டர். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் எல்லோருக்கும் சிம்ம சொப்பனம்.

பெரிய கண்கள், தடிமனான கண்ணாடி, உருண்டையான தொப்பை எல்லாம் அவன் மீதான பயத்தை இன்னும் அதிகரிக்கும்.

அவன் நாடி, நரம்பெல்லாம் ஆடிட்டிங் அறிவும், எல்லோரையும் காலடியில் போட்டு நசுக்கும் அந்த வெறியும் ஊறிக் கிடந்தது.

கார்வேந்தன் வேலை செய்யும் அலுவலகத்தில் இரண்டு நாளாக இந்த கோதண்டராமன் தலைமையில் ஆடிட்டிங் நடக்கிறது.

மொத்த அலுவலகமே தலைகீழாய்க் கிடக்கிறது. எல்லோருக்கும் உயிர் மட்டும் தான் பாக்கி இருக்கு. சின்ன சின்ன கணக்கு வழக்குகளில் அவன் தவறு கண்டுபிடித்தால் சமாளித்து விடலாம் .

படுபாவி, 75 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டிய அலுவலகத்தின், புதிய கட்டிடம் தவறு என ரிப்போர்ட் தயார் செய்து எல்லோரையும் தவிக்க விடுகிறான்.

தலைமை அதிகாரி நிறைய விதிகளை காட்டி எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டார். ஒரு புதிய சட்டத்தின் படி தவறு என்கிறான். கிராதகன் சுப்ரீம் கோர்ட்டுக்கே போனாலும் அவனை வெல்வது கடினம் .

 

தலைமை அதிகாரி இரண்டு நாட்களாக​ மன உளைச்சலில் கிடக்கிறார்.

அவர் மிகவும் நல்லவர், எந்த குறுக்கு வழியும் தெரியாது. பியூன் முதல் அதிகாரிகள் வரை அவரின் அன்புக்கு எல்லோரும் அடிமை .

கார்வேந்தன் அங்கு வேலை செய்யும்  20 உதவி அதிகாரிகளில்  ஒருவன். ஆனால் சிக்கலான சமயத்தில் எல்லா அதிகாரிகளும் இவனை தான் தேடுவார்கள்.

இவனும் எப்படியோ அந்த வேலையை செய்து முடிப்பான். அதுபோல்தான் கோதண்டராமனை சரிகட்டும் வேலையும் இவன் தலையில் வந்து விழுந்து விட்டது.

இரண்டு நாட்களாய் இவனும் பாடாய் படுகிறான். கோதண்டராமன் தங்கியிருந்த கெஸ்ட்ஹவுஸ்க்கே போய்விட்டான்.

வெட்கத்தைவிட்டு, உடம்பை வளைத்து “ஐயா, உங்களுக்கு ஏதும் தேவைப்பட்டால் உதவிக்கு என்னை அனுப்பியுள்ளார்கள்.” என்று பவ்யமாக கூறி நின்றவனை, கோதண்டராமன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

கோதண்டராமனைவிட, அவன் உதவியாளர் பெரிய அரக்கனாக இருந்தான்.

“உன்னையெல்லாம் யார் கூப்பிட்டா உதவிக்கு ? உன் வேலையை பார். ஏதாவது தேவைன்னா நாங்களே கூப்பிடுவோம்” என நாயை விரட்டுவது போல் விரட்டினான்.

கார்வேந்தனின் விசிட்டிங் கார்டை வாங்கி குப்பையில் வீசுவதை போல் மேஜை மீது எறிந்தான்.

கார்வேந்தனுக்கு பெரிய அவமானமாக இருந்தது. சாமி ரூமில் போய் பேச ஆரம்பித்தான்.

“அவர்கள் அவமானப்படுத்தியது ஒன்றும் தைக்கவில்லை. தலைமை அதிகாரியும், மொத்த அலுவலகமும் என்னை நம்பிக் கொண்டிருக்கிறது. குருவே நான் என்ன செய்ய வேண்டும் ?”

“காத்திரு, ஏதாவது அற்புதம் நிகழும்” என்பது போல் அவனுக்கு ஒரு உத்திரவு வந்தது.

இப்படித்தான் இவன் கஷ்ட காலத்தில் அந்த அரூப சாமியார் வழி காட்டிக் கொண்டிருக்கிறார் .

 

அற்புதம் சரியாக இரவு பத்து மணிக்கு நிகழ்ந்தது.

கோதண்டராமன் உதவியாளர் போன் செய்தான். “சார் உடனே உங்களை கூப்பிடுகிறார்” என்றான்.

அடுத்த 5 நிமிடத்தில் கெஸ்ட் ஹவுஸ் வாசலில் போய் நின்றான் கார் வேந்தன்.

அங்கு எழிலரசி வலிப்பு வந்து வாயில் லேசாக நுரை தள்ளி படுத்துக் கிடந்தாள்.

யாருக்கும் தெரியாமல் அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் பார்த்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இதுதான் கார் வேந்தனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை.

கோதண்டராமன் காரிலேயே அவளை ஏற்றி அனுப்பினார்கள். கார் டிரைவர் மொத்த கதையும் கூறிவிட்டான்.

கோதண்டராமனுக்கு வயதாகிவிட்டாலும் இன்னமும் அந்த விஷயத்தில் கிங் என்றும், இந்த பெண்ணை ஏதோ புரோக்கர் மூலம் உதவியாளர் ஏற்பாடு செய்ததாகவும், கோதண்டராமன் கை பட்டதுமே அவளுக்கு வலிப்பு வந்துவிட்டது என்றும், கோதண்டராமன் புகழ் பாடிக்கொண்டே வந்தான்.

இதை நாம் யாருக்கும் தெரியாமல் கச்சிதமாக செய்தால், அவர் நம்மளை நன்கு கவனிப்பார் என்றும் கார்வேந்தனுக்கு ஊக்கம் கொடுத்தான்.

குரு வழி காட்டி விட்டார். எழிலரசியை ஹாஸ்பிடலில் சேர்த்தாயிற்று. மயக்கம் தெளிந்து விட்டது. கோதண்டராமனை நாளைக்கு வைத்துக் கொள்ளலாம். முதலில் எழிலரசியை பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும்.

இப்போது இவளை எங்கே அனுப்புவது என்பது தான் கவலை.

 

கார்வேந்தன் வீட்டுக்கு போன் செய்தான். “நான் ஒரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வரப் போகிறேன் அவள் இரவு நம் வீட்டில் தங்கி விட்டு அதிகாலையில் போய்விடுவாள்.”

மனைவி ஒத்துக் கொள்ளவில்லை, மொத்த கதையையும் சொன்னான்,

“யாராவது அக்கம்பக்கம் கேட்டால் என்ன சொல்வது?”

“ஊரிலிருந்து இன்டர்வியூக்கு வந்திருக்கிறாள்; தங்கை முறை உறவு என்று சொல்லி சமாளிக்கலாம்.”

“உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு, இன்னும் என்னவெல்லாம் கொடுமையை பாக்கணுமோ ? ஏதாவது செஞ்சு தொலை.” என்று போனை வைத்தாள்.

வழியெல்லாம், எழிலரசி தன் கதையைச் சொல்லிக் கொண்டு வந்தாள்.

“என் சொந்த ஊர் சேலம். நான் செய்யும் தொழில் வீட்டில் யாருக்கும் தெரியாது. கூடிய சீக்கிரம் இதிலிருந்து போய் விடுவேன். எனக்கு எப்போதாவது இது போல் வலிப்பு வந்து விடுகிறது. தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள். உங்களுக்கு நிறைய சிரமம் கொடுத்துவிட்டேன்.” என்றாள்.

தன் பர்ஸில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து “அதுதான் எதுவுமே நடக்கலையே எதுக்கு அவர் பணம்? இதை அவரிடமே கொடுத்து விடுங்கள்” என்றாள்.” என்று தன் தொழில் தர்மத்தை உறுதிப்படுத்தினாள்.

கார்வேந்தன் வாங்க மறுத்து விட்டான். “அவரிடம் நான் பேசிக்கொள்கிறேன்” என்றான்.

எழிலரசி காலையிலேயே எழுந்து முகம் கழுவி திருநீறு இட்டுக் கொண்டாள். கார்வேந்தன் மனைவி தேநீர் போட்டுக் கொடுத்தாள்,.

அவள் ‘அண்ணி அண்ணி’ என்று பாசமாக அவளிடம் நடந்து கொண்டாள். திடீரென்று இருவர் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிச் சென்றாள்.

 

கோதண்டராமன் எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டான்.

“உனக்கு என்ன வேண்டும்? சொல், செய்கிறேன். ஏதாவது புரமோஷனுக்கு வழி செய்யட்டுமா? இல்லை, ஏதாவது பணம், பொருள் எதுவாயினும் கேள். ஆனால் இந்த விஷயத்தை உன்னுடனே வைத்துக் கொள்வேன் என எனக்கு நீ சத்தியம் செய்து தர வேண்டும்” என்றான்.

டிரைவரும் உதவியாளரும் இதுபோல் பல சத்தியங்கள் செய்து வாழ்பவர்கள் என்று கார்வேந்தனுக்கு புரிந்துவிட்டது.

வேந்தன் தன் கோரிக்கையை வைத்தான், “ஐயா என் உயிரே போனாலும், இதை யாரிடமும் சொல்ல மாட்டேன்.  நீங்கள் எனக்கு எதுவும் செய்ய வேண்டாம். அந்த கட்டிட விவகாரத்தில் ரிப்போர்ட்டை மாற்றி எழுத வேண்டும். அதில் கடவுள் சத்தியமாக நாங்கள் எந்த ஊழலும் செய்யவில்லை. எங்கள் தலைமை அதிகாரி மிகவும் நேர்மையானவர். நீங்கள் அதை ஏதோ விதிகளின்படி தவறு என்கிறீர்கள். மனிதாபிமான அடிப்படையில் அந்த ரிப்போர்ட்டை மாற்றித் தந்தாலே போதும்” என்றான்.

“நீ என்ன பைத்தியமா?  நான் உனக்கு பதவி உயர்வு வாங்கித் தருகிறேன் என்றேன். நீ ஏதோ ஒரு அலுவலக விஷயத்தை பிடித்துக் கொண்டு நிற்கிறாயே” என்றான் கோதண்டராமன்.

கார்வேந்தன் திட்டவட்டமாக மறுத்துவிட்டான். இதுபோல் வேலை செய்து நாம் பதவி உயர்வு வாங்குவது “அக்காவை வைத்து பேக்கரி வாங்குவதற்கு” சமம் என உள்ளுக்குள் நினைத்து கொண்டான்.

ஒரு மணி நேரத்தில் ரிப்போர்ட் மாறிவிட்டது . 75 லட்ச ரூபாய் கட்டடம் சரியே. என்று கோதண்டராமன் கையெழுத்து போட்டுவிட்டான்.

 

கார்வேந்தன் பெரிய ஸ்டார் ஆகிவிட்டான்.  ஆட்டோகிராப் மட்டும் தான் போடவில்லை.

அதிகாரிகள் அழைத்து பேசினார்கள். “என்ன செய்தாய்?” என்று கேட்டார்கள்.

ஒரு உறவுகார பெண் மூலம் பேசி காரியத்தை முடித்ததாக சொன்னான்.

தலைமை அதிகாரி பர்சனலாக நன்றி சொன்னார். “உனக்கு என்ன வேண்டும்? கேள்” என்றார்.

“நாம புதுசா கட்டின கட்டிடத்திற்கு பெயர் வைக்கலாமா சார்?”

“தாராளமா வைக்கலாம்.”

கட்டிட பிரச்சினை தீர்வதற்கு எழிலரசியே காரணம். எழில் பிளாக் என்று வைக்கச் சொல்லுவோமா என்று மனதிற்குள் எண்ணினான்.

“என்ன வேந்தா, உன் பெயரை வைத்து விடலாமா?” என கேட்டு உயர் அதிகாரி சிரித்தார்.

“இல்லை சார் அந்த கட்டிடத்திற்கு ‘எழில் பிளாக் ‘ என்று வையுங்கள், எழில் என்றால் அழகு சார். அழகான இதற்கு எழில் பிளாக் பொருத்தந் தானே”

“சரி, இதற்கு எழில் பிளாக் என்றே வைத்து விடுவோம்.” என உடனே ஒத்து கொண்டார்.

கார்வேந்தன் எழிலரசிக்கு போன் செய்து நன்றி சொன்னான்.

மறுமுனையில் அவள் அதிர்ந்தாள்.

” எனக்கு எதற்கு நன்றி?, உங்களுக்கும்,  அண்ணிக்கும் தான் நான் நன்றி சொல்லணும்.”

“இல்லம்மா எனக்கு சொல்ல வேண்டுமென்று தோன்றியது. நன்றிம்மா, உடம்பை பாத்துக்கம்மா.” என்றான்.

வீட்டுக்கு வந்தான். மனது நிறைந்து இருந்தது. சாமி ரூமுக்குள் போனான்.

” யாருக்கும் எந்த காயமும் இல்லாமல் பிரச்சினை முடிந்து விட்டது நன்றி குருவே” என்றான்.

குரு சிரித்தார்.

“இன்று இரவு யாரை கூட்டி வரபோகிறாய்?” என மனைவி சீண்டினாள்.

“யாரும் இல்லை இன்று நீதான் என் டார்கெட்.  அதுவும் இரவு வரை காத்திருக்க போவதில்லை. பிள்ளைகள் டியூஷன் முடிந்து வரும் முன்பே என் கடனை வசூலிக்க போகிறேன்” என அவளை பிடித்து இழுத்தான்.

“கார்வேந்தா .. கொஞ்சம் அடங்கு வேந்தா” என்றாள்.

அவன் அடங்குவதாய் தெரியவில்லை .. வேறு வழியின்றி கதவை தாழிட்டு கொண்டாள்.

முனைவர் க. வீரமணி
சென்னை
9080420849

 

3 Replies to “எழில் பிளாக் – சிறுகதை”

  1. மிகவும் மாறுபட்ட கதைக்களம். சிறிய கதையில் பல தத்துவங்கள் அழகாக உள்ளடங்கி உள்ளது. நன்றி.
    அடுத்த படைப்பிற்கான காத்திருப்பு தொடரும் 👍😀

  2. தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும் என்பதை நினைத்துக் கொண்டேன்.

    மலை போல வந்தது பனி போல விலகியது என்பதன் அர்த்தம் என்ன என்பதும் புரிந்தது.

  3. சமூகஅந்தஸ்திற்கு உலகம் எவ்வளவு போராடுகிறது என்பதை மூன்று கோணங்களில் சித்தரிக்கிறது. இக்கதை கோதண்டராமன் சமூக அந்தஸ்து, மேனேஜரின் சமூக அந்தஸ்து ஆடிட்டரின் சமூக அந்தஸ்து இவை அவர்களை வெவ்வேறு மாறுபட்ட வாழ்க்கை தடுமாற்றங்களை செய்யச் சொல்லுகிறது. எழில் பிளாக் அது பின்னணியை இவ்வாறு சரி செய்தது என்பது எண்ணிலாத உறுத்தல்களை ஏற்படுத்தினாலும் எங்கோ ஓரிடத்தில் மகிழ்ச்சியை தருவதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு அடிப்படை ஊழியனின் நிலைப்பாடு எவ்வளவு மோசமானது, இளைய மகளாக வரும் அந்தப் பெண்ணின் நிலைப்பாடு எவ்வளவு மோசமானது என்பதை அதை ஆழமாக உணர்த்துகிறது.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.