ஏரி ‍- பண்டைய முறையும் அமைப்பும்

ஏரி நீர் சேமிப்பின் முக்கிய அங்கம். நம் முன்னோர்கள் காலத்தில் ஏரிகள் எப்படி இருந்தன என நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. அதற்காகவே இந்தக் கட்டுரை.

மனித நாகரீகம் ஆரம்பித்த காலம் தொட்டு நீர்நிலைகள் மற்றும் வேளாண்மை என்பன இன்றியமையாதவையாக இருந்துள்ளன.

பெரும்பாலும் ஆற்றுப் படுகைகளில் பண்டைய நாகரிகம் பரந்திருக்கக் காண்கின்றோம். மனிதர்கள் முதலில் ஆற்றை மட்டும் சார்ந்து இருந்துள்ளனர். பிறகு நீர்நிலைகள், குட்டைகள், ஏரிகள் உருவாக்கப்பட்டு அதன் வழியே பாசனம் செய்யப்பட்டது. கால்வாய்கள் மூலம் பாசனம் வந்தது, குட்டைகளில் இருந்து ஏற்றம் மூலம் பாசனம் செய்யப்பட்டது.

ஏற்றம் முறையில் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சும் விவசாயி

ஏற்றத்தின் சிறப்பைக் கம்பர் இவ்வாறு போற்றுகின்றார்

காற்றுமேல் வருகின்ற கார்விடினும் கடல்சுவறி
ஆற்று நீர்அற வெள்ளி அரசனும் தெற்கு ஆயிடினும்
ஏற்றமே கொடுநாளும் இறைத்து உலகம் விளைவித்துக்
காத்துமே உயிர் வளர்த்தல் காராளர் தம் கடனே.

பாடலின் பொருள்:
காற்று வந்து கார்மேகம் பெய்யாமல் போனாலும் ஆற்றுநீர் வறண்டு போனாலும், ஏற்றம் கொண்டு நீர் இறைத்து பயிர் வளர்த்து உயிர் காத்தல் விவசாயினுடைய‌ கடமை ஆகும்.

அதன் பிறகு கிணறுகள் உருவாக்கப்பட்டன. கிணறுகளில் இருந்து கவலை (கபிலை) (பிற்காலத்தில் சுற்றுக் கவலைகூட இருந்தது) மூலம் நீர் இறைக்கப்பட்டது.

பிறகு டீசல் இயந்திரங்கள் வந்தன. அதன் பிறகு மின்சார மோட்டார்கள் வந்துவிட்டன. இன்று ஆழ்துளைக் கிணறு வந்து நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்குச் சென்று விட்டது.

அக்காலத்தில் ஆற்றில் நீர் எப்போதும் சென்று கொண்டிருந்தது. ஆற்றைத் தடுத்துப் பெரிய அணைகள் கட்டியதால், தற்போது மழை இல்லாத காலங்களில் ஆற்றில் நீர் இல்லாமல் போனது. ஆற்று மணல் கொள்ளை போனது.

நீர்நிலை வகைகள்

தமிழர்கள் எவ்வாறு நீர்நிலைகளை அழைக்கின்றார்கள் என்று பார்ப்போம்.

சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும்.

குட்டை என்பது மழை நீரின் சிறிய தேக்கமாகும்.

குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை குளம் ஆகும்.

உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை ஊருணி ஆகும்.

ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை ஏரி ஆகும்.

கண்ணாறுகளை உடையது கண்மாய் ஆகும்

வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலை ஏந்தல் ஆகும்.

இவ்வாறு தமிழர்கள் நீர்நிலைகளைப் பலவிதமாகப் பெயரிட்டு அழைக்கின்றனர்.

ஏரியின் அமைப்பு

ஒரு கிராமம் உருவாகும்போது வீடுகள் அமைக்க, மேட்டுப்பாங்கான நிலம், வேளாண்மைக்கு நன்செய் நிலம், புன்செய் நிலம் (ஏரிப்பாசனம் பெறாத பகுதி) என வகைப்படுத்தினர்.

மழைக் காலத்தில் மழையை நம்பிப் புன்செய் பயிர்களும், மழைநீரைச் சேமித்து நன்செய் பயிர்களும் பயிர் செய்யப்பட்டன.

நன்செய் பயிர் செய்ய நீர் சேமிக்கவேண்டும் என்பதால் கிராமத்திற்குத் தகுந்தாற் போல் ஏரிகள் உருவாக்கப்பட்டன.

ஏரிகளுக்கு நீர் கொண்டு வர ஆற்றுக்கு அருகில் இருக்கும் ஏரிகளுக்குக் கால்வாய் மூலமாக ஆற்று நீர் திருப்பப்பட்டது.

ஆற்றுக்குத் தொலைவில் இருக்கும் ஏரிகளுக்குச் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வடிகால் அமைத்து வரவு கால்வாய் மூலமாக மழைக்காலத்தில் நீர் கொண்டு வரப்பட்டுச் சேமிக்கப்பட்டது.

சேமித்த நீரை வீணாக்காமல் இருக்கப் பெரிய ஏரியும், அதன் மிகுதி நீரைச் சேமிக்க ஒருபக்கம் சிறிய ஏரியும் (சித்தேரி) அமைத்தனர். மறுபக்கம் மிகுதி நீர் செல்லும் பாதையில் அந்நீரைச் சேமிக்கத் தாங்கல் என்று சிறிய தேக்கத்தையும் ஏற்படுத்தினர். கிராமத்தினரின் தேவைக்கு ஏற்ப சிறியதாக‌ குட்டைகள் உருவாக்கப்பட்டன.

கிராம நிலச் சமன்பாட்டிற்கு ஏற்ப ஏரியில் நீர் வெளியேற மதகுகள் அமைத்தனர். நீர் மிகுதியாக இருந்தால் மேட்டுப்பகுதி நிலங்களும் பாசனம் பெற மடைகள் உருவாக்கப்பட்டன.

ஏரிக்கரைக்கு உட்பட்டுள்ள வயல்களில் நீர்ப் பாய்ச்சலுக்காக‌ நீரை வெளியேற்றும் பகுதிக்கு மதகு என்று பெயர். மதகு ஏரியின் பள்ளமான பகுதியில் அமைந்திருக்கும்.

ஏரி நிறைந்தால் மிகுதியான நீரை வெளியேற்றும் பகுதிக்கு மடை அல்லது மடைக்கால் என்று பெயர். மடை ஏரியின் மேடான‌ பகுதியில் அமைந்திருக்கும்.

மடைக்கால் வழியாக பாசனம் பெறும் வகையிலும் நிலங்களை வகை செய்திருந்தனர். மிகுமழைக் காலங்களிலும் நீர் பராமரிப்பு செம்மையாகச் செய்யப்பட்டிருந்துள்ளதை அறிகின்றோம்.

மதகுகளில் மேல், இடை, கடை என துவாரங்கள் மூலமாக நீர் பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டது.

தற்காலத்தில் இயந்திரங்கள் இருப்பதால் ஏரிகள் அமைப்பது எளிது. ஆனால், அந்தக் காலத்தில் ஏரிகள் அமைக்க மிகுந்த உழைப்பும் திட்டமிடுதலும் இருந்திருக்க வேண்டும்.

மன்னர்கள் ஏரி

பண்டையக் காலத்தில் அரசர்கள் நீரைச் சேமிக்க ஏரிகள், குளங்கள் அமைத்தார்கள். ஆற்று நீரைத் தடுத்துப் பெரிய அணைகள் கட்டவில்லை.

ஆற்று நீரைக் கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்குக் கொண்டு செல்ல வகை செய்திருந்தனர். இன்றும் காவேரிப்பாக்கம், மாமண்டூர், தென்னேரி போன்ற ஏரிகளுக்கு பாலாற்றினின்று அமைத்துள்ள கால்வாய்கள் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் இருக்கும் பெரிய ஏரிகள் எல்லாம் மன்னர்கள் உருவாக்கியவையே ஆகும்.

சுமார் 1500 ஏக்கர் பரப்பளவுள்ள காவேரிப்பாக்கம் ஏரி பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது.

மகேந்திரவர்ம பல்லவன் மகேந்திரவாடி ஏரி (மகேந்திர தடாகம்) உருவாக்கினான்.

உத்தமசோழன் காலத்தில் மதுராந்தகம் பெரிய ஏரி சுமார் 2900 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக உருவாக்கப்பட்டது.

இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் – செம்பரம்பாக்கம் பெரிய ஏரி உருவாக்கப்பட்டது.

நந்திவர்மன் காலத்தில் – கொலவை ஏரி (கொளவாய் ஏரி செங்கற்பட்டு) உருவாக்கப்பட்டது.

முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் – தூசிமாமண்டூர் ஏரி (சித்திர மேகத் தடாகம்) உருவாக்கப்பட்டது.

இந்தப் பெரிய ஏரிகளை பராமரிக்க ஏரிக்கரையில் பனைமரங்கள் வளர்க்கப்பட்டன.

மழைக்காலங்களில் நீரில் எழும் அலைகளால் ஏரிக்கரை சேதமாகாமல் இருக்கச் சவுக்குமரக் கழிகளை இடைவெளிவிட்டு நட்டு வைத்து, இடையில் பனை ஓலைகளைக் கொண்டு கட்டி வைப்பார்கள். இம்முறைக்குக் கிராமத்தில் அலைமலார் (அலமலார்) கட்டுவது என்று பெயர். இதனால் ஏரிக்கரை பழுதாகாமல் பாதுகாக்கப்பட்டது.

ஆற்றுப் பகுதியிலிருந்து கால்வாய் மூலம் நீர்வரத்து இல்லாத ஏரிகளுக்குச் சுமார் நான்கு ஐந்து மைல் தொலைவில் இருந்து மழைக் காலத்தில் வடியும் நீரை, வரவு கால்வாய்கள் அமைத்து நீர் தடையின்றி வந்து சேர வழி வகுத்துள்ளனர்.

இப்போது எனக்குத் தெரிந்த எங்கள் ஏரியின் அமைப்பைத் தெரிவிக்க விரும்புகின்றேன். இதுபோல் அவரவர் பகுதியில் இருக்கும் ஏரிகளைப் பற்றித் தெரிவித்தால் இக்காலத் தலைமுறையினர் தெரிந்து கொள்வார்கள். நம் முன்னோர்கள் மக்களுக்கு ஆற்றிய அருஞ்செயல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

பாக்கம் பெரிய ஏரி – எங்கள் கிராம ஏரி

திருவள்ளுர் மாவட்டம் மற்றும் வட்டம் 86எண் பாக்கம் நத்தமேடு கிராமம். எங்கள் கிராம ஏரியின் பெயர் பாக்கம் பெரிய ஏரி. நீர் பிடிப்புப் பகுதி சுமார் 430 ஏக்கர். பாய்ச்சல் சுமார் 1560 ஏக்கர். (1951ஆம் ஆண்டு கணக்குப்படி).

இந்த ஏரிக்கு உட்பட்ட சிறிய ஏரி ஒன்றும் தாங்கல் ஒன்றும் உள்ளது.

(கிழக்கில் இருந்து மேற்கு) கலிங்கல் மடைக்கால், மேட்டு மதகு, நரி மதகு, பள்ள மதகு, கங்கராஜா மதகு (இந்த மதகின் கட்டுமானத்தில் பாறையில் செதுக்கப்பட்ட பண்டைய தமிழ்க் கல்வெட்டு இருந்தது. மதகு சீரமைப்பின்போது போன இடம் தெரியவில்லை).

மேட்டு மதகு (மேற்கு) கருமான் மடைக்கால், விளா மடைக்கால், பெருமூஞ்சிக்கால், அடத்திக்கால், கீழ் நத்த மேட்டுக்கால் எனப் பாய்ச்சலுக்கு ஏற்றார்போல் வழித்தடங்கள் அமைத்துள்ளார்கள்.

இவ்வமைப்பு, பெரும்பாலான பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் இருக்கும் அமைப்புகளை ஒத்துள்ளன.

பள்ளமதகும் சித்தேரியும் கலந்து பாய்ச்சலுக்காயின.

1,தலையீட்டுக்கால்

2.இரண்டாங்கால்

3.தண்ணிப்பட்டிக்கால்

4.பிராயன் குளத்துக்கால்

5.தச்சன்பட்டிக்கால்

6.அலராம்பட்டரைக்கால் எனக் கால்வாய்கள் இருந்தன.

பள்ளமதகு, கெங்கராஜா மதகு, மேட்டுக்கால், சித்தேரியும் கலந்து பாய்ச்சலுக்குண்டான கால்வாய்கள்.

1.பாலக் கொல்லைக்கால்

2.கிஷ்டம்பட்டரைக்கால் (கிருஷ்ணன் பட்டரைக்கால்)

3.களிவாகால்

4.வேம்படிகால்

5.சமுத்திரக் கொல்லைக்கால் என இருந்துள்ளன.

மிக அதிக‌ முயற்சியினால் ஏரியும், ஆயக்கட்டும் அதற்கு உகந்த கால்வாய்களும் அமைத்து நீர்ப்பாசன மேலாண்மையினால் சீரியமுறையில் வேளாண்மை செய்யப்பட்டுள்ளது என்பதை யோசிக்கவேண்டும்.

இன்றைக்கும் உகந்த இந்த முறையினைத் தவற விட்டோம். நீரைத் தேடிக் கொண்டுள்ளோம்.

மேலும், அங்கங்கே நீர்த் தேக்கக் குளங்கள் அமைத்துள்ளார்கள். குளம் உருவாக்கியவர்கள் பெயரிலும் அமைந்துள்ளன.

அயன் என்பவரால் உருவாக்கப்பட்டது அயனான்குளம் என்றும்,

சீரான் என்பவரால் உருவாக்கப்பட்டது சீரான் குளம் என்றும் ,

கன்னி என்பவரால் உருவாக்கப்பட்டது கன்னியான் குளம் என்றும் ,

குள்ளாண்டி என்பவரால் உருவாக்கப்பட்டது குள்ளாண்டி குளம் என்றும் ,

அப்பளாய் என்பவர் உருவாக்கியதை அப்பளாய் குளம் என்றும் இன்றும் அழைக்கப்படுகின்றன.

உதாரணம்: பல்லவர் காலத்து ஏரிக் கால்வாய்கள் பெரும்பிடுகு வாய்க்கால், வைரமேகன் வாய்க்கால் என உருவாக்கியவர் பெயரில் இருப்பதுபோல், எங்கள் ஏரிக் கால்வாய்களுக்கும் அவ்வாறே பெயர்கள் இருக்கின்றன.

கொட்டாரப்பட்டிக்கால், குளகுசிங்கன்கால், கோயிலான் பட்டிக்கால், வண்ணான்குளம்கால், வேலன்பட்டிக்கால், பிடாரி வெட்டிக்கால், பின்னங்குளத்தான் கால் என அழைக்கப்பட்டன.

இவையெல்லாம் பெரும்பாலும் இளைய தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. (இவையெல்லாம் மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டு அவர்கள் பெயரில் வழங்கி வருகின்றன.) இதன்மூலம் எங்கள் ஏரி பண்டைய மன்னர்கள் காலத்தியது என்று தெரிகின்றது.

எங்கள் ஏரிக்கு வரவு கால்வாய் சுமார் ஆறு மைல் தொலைவில் இருந்து உருவாக்கப்பட்டது. இக்கால்வாய்க்கு வெள்ளங் கால்வாய் என்று பெயர். (வெள்ளக்காவாய்) இன்று ஆக்கரமிப்பால் அழிந்தது. மேலும் கசக்கால் (ஊத்துக் கால்வாய்) மூலமும் நீர் வரத்து இருந்துள்ளது.

எங்கள் ஏரி நிரம்பித் தாங்கல் வழியாகச் சென்று பாக்கம் கிராம ஆற்றுக் கால்வாயில் கலந்து சென்று காட்டாங்கால் என்ற கால்வாய் மூலம் கொசஸ்தலை ஆற்றில் கலந்து, வங்கக் கடலுக்குச் செல்லும். இன்றும் வருவாய்த் துறையினரிடம் இருக்கும் வரைப்படங்கள் மூலமாக இதனை அறியலாம். மக்கள் பெருக்கத்தினால் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் மூலம் பெரும்பாலும் காணாமல் போயின.

மதகு அமைப்பு

எங்கள் ஏரியில் உள்ள பள்ளமதகில் இரண்டு பக்கமும் திண்ணைகள் ஐந்து உள்ளன.

பாக்கம் ஏரியின் பெரிய மடையின் தற்போதைய நிலை

இந்தத் திண்ணைகள் மூழ்கினால் நீர் கொள்ளளவில் ஒர் அளவீடாகக் கொண்டு அதன்படி சாகுபடி செய்வார்கள்.

கால் ஏரி நிரம்பினால் காட்டும் பாறை உண்டு. அரை ஏரி நிரம்பினால் காட்டும் ஒரு பாறைக்கல் இருக்கும். முழு ஏரி நிரம்பினால் தெரிந்து கொள்ள பாறை ஒன்றுண்டு. இவ்வாறு நீர் இருப்பைத் தெரிந்து அதற்கேற்ப பயிர் சாகுபடி செய்வார்கள்.

ஏரியை பராமரிக்க வேண்டிய பணம் ‘மீன் மகசூல்‘ மூலம் (கிராமத்தில் ‘மச்ச மகசூல்’என்பர்.) பெறப்பட்டது.

ஏரிக்காவலர் மற்றும் நீர்கட்டி என்பவர்கள் ஏரியின் பராமரிப்புப் பணியில் இருப்பார்கள்.

ஏரிக்கரையில் உள்ள மரங்களைக் காப்பாற்ற வெள்ளாடுகள் வளர்க்கக் கிராம மக்கள் சார்பாக கட்டுப்பாடுகள் விதிப்பார்கள் அம்முறைக்கு காய்தா என்று பெயர்.

எங்கள் ஏரிக்கரையின் ஓரிடத்தில் ‘அண்ணன்மார் சாமி‘ இடம் என்று அடையாளப்படுத்தி அவ்விடத்தில் செங்கற்கள் வைத்து பொட்டிட்டு பூசித்து வந்தார்கள்.

நாளடைவில் இப்பகுதி அண்ணன்மார்சாமி பற்றிய செய்தி தெரியாதவர்களால் அனுமார் சாமியாக்கி கோயிலும் கட்டிவிட்டார்கள். இங்கே வரலாறே மாற்றப்பட்டது. இது காலத்தின் நிலை.

ஏரிக்கரைக்கு வடமேற்கு மூலையில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட ‘தங்கச்சிமார்‘ என்றழைக்கப்பட்ட ‘எல்லை காத்தம்மன்’ கோயில் இருக்கின்றது.

இன்று பழமை மாறிவிட்டது. இங்கே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தால் அரிய தகவல்கள் கிடைக்கும்.

பண்டைய சுடுகற்கள், உறை கிணறுகள், பானை ஓடுகள் எல்லாம் ஒருகாலத்தில் தெரிந்து கொண்டிருந்தன. சிறிய வயதில் நான் பார்த்திருக்கின்றேன். நாளடைவில் மக்கள் பெருக்கத்தால் தெரியாமல் போய்விட்டன.

இவ்விடத்தில் சமணர்கள் இருந்ததாகப் பெரியவர்கள் சொல்லி வந்தார்கள். மேலும் இப்பகுதியின் அருகில் இருக்கும் புலியூர் கிராமத்தில் தீர்த்தங்காரர் சிலை படத்தில் உள்ளபடி இன்றும் இருக்கின்றது.

தீர்த்தங்காரர் சிலை

தொல்லியல்துறை மனது வைத்தால் வரலாறு தெரியும். எங்கள் பகுதியும் வரலாற்றில் இடம்பெறும்.

இன்னும் சில காலம் சென்றால் பழமை மறைந்து விடும்; வரலாறு மாற்றப்படும்; முன்னோர் பெருமை அழிக்கப்படும். இளைய தலைமுறையினருக்கு சொல்லுவாரும் இல்லா நிலை உருவாகும்.

எங்கள் கிராம ஏரியும் அமைப்பும் சில நாட்களில் எங்களுக்கே தெரியாமல் போகும். இதுபோன்றே ஒவ்வொரு கிராமத்திற்கும் வரும்.

ஆகவே இளைய தலைமுறையினர் அறியும் வண்ணம் ஒவ்வொரு கிராமத்தினரும் தத்தம் கிராம வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும்.

செங்கற்பட்டு மாவட்டம் ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது. (இப்போது இம்மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு விட்டது.)

எங்கள் மாவட்டத்தில் பாய்ந்து வளப்படுத்திய வ்ருத்தக்ஷீர நதி என்றழைக்கப்பட்ட கூவம் நதியின் இன்றைய நிலை நாம் அறிந்ததே. காரணம் நீர் சேமிப்பின் மீது அலட்சியம் காட்டியதும் பராமரிப்பு செய்யாததுமே ஆகும்.

பசுமைப் புரட்சிக்குத் தந்த முக்கியத்துவத்தை எளிமையான நீர் சேமிப்புக்குத் தராதது பெரிய குற்றமே ஆகும். இரண்டும் ஒன்றிணைந்ததாக இருந்திருக்க வேண்டும். இல்லாமல் செய்ததும் நம் குற்றமே.

இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்

திருநின்றவூர் ‍ 602024
கைபேசி: 9444410450

2 Replies to “ஏரி ‍- பண்டைய முறையும் அமைப்பும்”

  1. கருத்துள்ள கட்டுரை. இன்றைய சமூகத்திற்குத் தெரியாத பல்செய்திகள் . ஆழமான விரிந்த பொருள்ள இது போன்ற கட்டுரைகள் இக்காலகட்டத்திற்கு மிகவும் தேவை.
    ஆசிரியரின் திறமை அவரின் எழுத்தாற்றலால் மிளிர்கிறது.
    இன்னும் நிறைய கட்டுரைகள் எழுத வேண்டுகிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.