டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்கள் இந்திய ஏவுகணை தொழில்நுட்ப நாயகன் என்று அழைக்கப்படுகிறார். அவர் இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவர் ஆவார்.
அவர் இன்றும், மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறார்.
நாம் இக்கட்டுரையில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, அவருடைய விண்வெளி ஆராய்ச்சி, எழுத்துப் பணி மற்றும் தேசப்பற்று ஆகியவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்கள் 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் நாள், தமிழ்நாட்டிலுள்ள ராமேஸ்வரத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் பெயர் ஜைனு லாப்தீன். அவருடைய தாயார் பெயர் ஆஷியம்மா.
கலாமின் கல்வி
கலாம் தன் பள்ளிப் படிப்பை இராமேஸ்வரத்தில் உள்ள தொடக்கப் பள்ளியிலும், இராமநாதபுரத்திலுள்ள மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
படிக்கும்போதே செய்தித்தாள் போடும் வேலையை மேற்கொண்டு தன் குடும்பத்திற்கு உதவினார்.
கலாம் திருச்சியில் உள்ள ‘செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தார்.
சென்னையில் உள்ள எம்.ஐ.டி.யில் விண்வெளி பொறியியல் படிப்பைப் படித்தார். அதில் முதுகலைப்பட்டமும் பெற்றார்.
ஏவுகணை தொழில்நுட்ப நாயகன்
கலாம் 1960 ஆம் ஆண்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார்.
அப்பொழுது சிறிய ஹெலிகாப்டரை இந்திய இராணுவத்திற்காக வடிவமைத்துக் கொடுத்தார்.
1969 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) ஏவுகணைகளை வடிவமைக்கும் பிரிவில் பணியாற்றினார்.
ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவும் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் பங்களிப்பு பாராட்டப்பட்டது. அதனால் அவர் “இந்திய ஏவுகணை தொழில்நுட்ப நாயகன்” என்று அழைக்கப்படுகிறார்.
1998 இல் நடந்த பொக்ரான்-II அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். இவ்வாறு கலாம் சுமார் 40 வருட காலம் இந்திய அறிவியல் ஆராய்ச்சிப் பணியில் தன் வாழ்வை அர்ப்பணித்தார்.
கலாம் 2002 ஆம் ஆண்டு இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். அவர் அனைவராலும் “மக்களின் ஜனாதிபதி” என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
கலாம் பெற்ற விருதுகள்
கலாம் தன்னுடைய விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளுக்காக பத்ம பூஷண், பத்ம விபூசண் மற்றும் பாரத ரத்னா ஆகிய உயரிய விருதுகளைப் பெற்றார்.
மேலும் தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது, வீர்சவர்கார் விருது, இராமானுஜன் விருது, ஹூவர் மெடல், சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது மற்றும் சவராச மஸ்க்ருதி புரஸ்கார் விருது ஆகிய விருதுகளையும் பெற்றார்.
கலாமின் எழுத்துப் பணி
கலாம் சிறந்த எழுத்தாளர். அவர்
அக்கினிச் சிறகுகள்,
இந்தியா 2020,
எழுச்சி தீபங்கள் மற்றும்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை ஆகிய நூல்களை எழுதினார்.
சிறந்த கவிஞராக கலாம் பல கவிதைகளையும் எழுதியுள்ளார். அவருடைய பொன்மொழிகள் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கிறது.
கலாமின் பொன் மொழிகள்
“கனவு காணுங்கள். அந்த கனவை நனவாக்கப் பாடுபடுங்கள்” போன்ற சிந்தனைகளை இளைஞர்களின் மனதில் கலாம் பதிய வைத்தார். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
“வாய்ப்புக்காக காத்திராதே, வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்” போன்ற பலபொன் மொழிகளை மாணவர்களுக்குக்கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்.
இவ்வாறு தன் விண்வெளி ஆராய்ச்சிப்பணி, எழுத்துப்பணி மற்றும் மேடைப்பேச்சு ஆகியவற்றின் மூலம் இந்தியாவிற்கும், இந்திய இளைஞர்களுக்கும் வழிகாட்டியாக விளங்கிய கலாம், 2015ஆம் ஆண்டு ஜுலை 27ஆம் நாள் உயிர்நீத்தார்.
“நமது பிறப்பு ஒருசம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்ற அவரது பொன் மொழிக்கேற்ப கலாம் வாழ்ந்து காட்டினார்.
கலாமின் மணி மண்டபம் அவர் சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் உள்ளது.
நாமும் கலாமின் பொன் மொழிகளை பின்பற்றி அவர் கனவை நனவாக்குவோம்.
வாழ்க இந்தியா!
வளர்க கலாம் புகழ்!!
பிரேமலதா காளிதாசன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!