சாமி என்ன ஆனது – நம்ம
பூமி பாழாய்ப் போனது
ஓரிரவு ஒருபுயல் ஊரு மாறிப்போனது
காரிருளும் கட்டாந்தரையும் என்றே வாழ்வும் ஆனது
தேடி வைச்ச தென்னை வீணா சாய்ஞ்சு போனது -இங்க
தாகத்துக்கும் தண்ணியில்லை என்ற நிலை வந்தது
பள்ளிக்கூட ஓட்டைவழி நல்லா வெயில் காயுது
பாடஞ் சொல்ல டீச்சர் வரும் பாதை மாறிப்போனது
மெல்ல வரும் ராப்பொழுதும் இப்ப பயமாகுது – ஒரு
மெழுகுவர்த்தி ஒளிகூட இல்லாத நாளிது
நேற்றுவரை பசியறியா பாழாய்ப் போன வயிறிது
நெல்லுச்சோறு மட்டும் தின்னு வளர்த்துவிட்ட உயிருது
ஒற்றைத்துணி மாற்று இல்லை என்றே இப்போ ஆனது
வெற்றுவானம் கூரையாக்கி கஜாப் புயல் போனது
தொற்றுநோயைப் பரப்பிடத்தான் ஆடு செத்துக் கிடக்குது
தொல்லை தர வேண்டாம் என்று மின்கம்பம் தூங்குது
காற்றுக்கென்ன கடலுக்கென்ன கஜா நண்பன் ஆனது
வரும் காலம் இனி என்னவாகும்?
என் கண் துடைக்க எந்தக் கரம் வரும்?
– இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942