அக்பர் ஒருமுறை தன் மந்திரி பீர்பாலிடம் கோபம் கொண்டு பதவி நீக்கம் செய்து விட்டார். பீர்பால் யாரிடமும் எதுவும் கூறாமல் உடனே சென்று விட்டார்.
யாருக்குமே பீர்பால் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அக்பருக்கு தன் தவறு புரிந்தது. பீர்பாலை பதவி நீக்கம் செய்ததை நினைத்து வருந்த ஆரம்பித்தார்.
பீர்பாலின் பிரிவை அக்பரால் தாங்க முடியவில்லை. அரசவை மந்திரிகள் அனைவரிடமும் பீர்பாலை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்துத் தன்னிடம் அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.
மந்திரிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசை சென்று பீர்பாலை வலை போட்டுத் தேடியும் அவர்களால் கண்டுபிடிக்க முடியாமற் போகவே, ஏமாற்றத்துடன் திரும்பினர்.
அக்பர் குழம்பினார். திடீரென ஓர் ஐடியா உதித்தது அவருக்கு.
‘எங்கள் தேசத்திலுள்ள கடலுக்குத் திருமணம் நிகழ இருப்பதால், உங்கள் தேசத்திலுள்ள ஆறுகளையும் நதிகளையும் எங்கள் தேசத்திற்கு அனுப்பித் திருமண விழாவைச் சிறப்பிக்கக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றோர் கடிதத்தை அண்டை நாடுகளுக்கு அனுப்பினார்.
அண்டை நாட்டு அரசர்கள் எல்லோரும் இக்கடித்ததைப் பார்த்து ஆச்சர்யத்தில் மூழ்கினர். அவர்களுக்கு எப்படி சாத்தியம் எனத் தலையைப் பிய்த்து கொண்டிருந்தார்கள்.
ஒரே ஒரு தேசத்து அரசர் மட்டும் அக்பருக்குப் பதில் அனுப்பியிருந்தார். எப்படி?
‘உங்கள் தேசத்துக் கிணறுகள் அனைத்தையும் உங்கள் தேசத்து நுழைவுவாயிலில் காத்திருக்கச் செய்து எங்கள் தேசத்து ஆறுகளையும் நதிகளையும் வரவேற்க ஏற்பாடு செய்தால், நீங்கள் விரும்புகிறபடி உங்கள் தேசத்து கடல் திருமண விழாவுக்கு எங்கள் தேசத்து ஆறுகளையும் நதிகளையும் அனுப்பிச் சிறப்பிக்கச் செய்கிறோம்!’
அக்பர் கடிதத்தைப் படித்ததும் புரிந்து கொண்டார். பீர்;பால் மட்டுமே இது போன்ற சாதுரியமான, சாமர்த்தியமான யோசனைகளை அளிக்க முடியும்.
எனவே எங்கிருந்து பதில் கடிதம் வந்ததோ அந்த தேசத்து அரண்மனையில்தான் பீர்பால் பணிபுரிகிறார் என்பதை நொடியில் அறிந்து கொண்டார்.
உடனே நேரில் சென்று பீர்பாலைச் சந்தித்து மன்னிப்புக் கோரி, மீண்டும் தன் அரண்மனையிலேயே பீர்பாலைச் சேர்த்துக் கொண்டார்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!