கத்தரிக்காய்

கத்தரிக்காய் காய்களின் ராஜா என்ற பெருமையினை உடையது. இக்காயில் உள்ள சத்துக்கள் மற்றும் அதிக அளவு பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக சூப்பர் காய் என்ற புகழினையும் கொண்டுள்ளது.

இன்றைக்கு சாதாரண சமையலிலிருந்து விருந்து சமையல் வரை எல்லா சமையல்களிலும் கத்தரிக்காய் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

கத்தரிக்காயின் தாயகம் இந்தியா ஆகும்.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் கிழக்கு மத்திய பகுதிகள், மத்திய தரைக்கடல் பகுதிகள் ஆகிய இடங்களில் இக்காய் பிரபலமானது.

பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்காய் தற்போது உலகின் எல்லாப் பகுதிகளிலும் சமையலில் முக்கிய இடத்தினைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வருடத்தின் எல்லாப் பருவங்களிலும் இக்காய் பயிர் செய்யப்படுவதால் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. இக்காயானது செடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.

வெப்ப மண்டலம் மற்றும் துணை வெப்ப மண்டலங்களில் இத்தாவரம் செழித்து வளருகிறது. இத்தாவரம் பொதுவாக 3-4 அடி உயரம் வரை வளரும் வளரியல்பை உடையது.

 

கத்தரிச் செடி
கத்தரிச் செடி

 

கத்தரிப் பூ
கத்தரிப் பூ

 

கத்தரிக்காய் வெள்ளை, ஊதா, பச்சை போன்ற வண்ணங்களில் காணப்படுகிறது. இக்காயானது மென்மையான பளபளப்பான வெளிப்புறத் தோலினைக் கொண்டுள்ளது.

இக்காயின் உட்புறம் வெள்ளைநிற சதைப்பகுதியையும், அதனுள் சிறிய வடிவிலான எண்ணற்ற விதைகளையும் கொண்டுள்ளது. கத்தரி பிஞ்சாக இருக்கும் போதே அறுவடை செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

 

கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள்

கத்தரிக்காயில் விட்டமின் சி, விட்டமின் கே, பி1(தயாமின்), பி2(ரிபோஃளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்) போன்றவைகள் காணப்படுகின்றன.

இக்காயில் தாதுஉப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவைகள் உள்ளன.

இக்காயானது குறைந்த அளவு எரிசக்தி, கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், நார்சத்து, ஃபோலேட்டுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

 

கத்தரிக்காயின் மருத்துப் பண்புகள்

செரிமானத்திற்கு

சரிவிகித உணவில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். கத்தரியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. எனவே இக்காயினை உணவில் அடிக்கடி சேர்ப்பது நல்லது.

இக்காயில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது. மேலும் உணவில் உள்ள நுண்ஊட்டச்சத்துக்களை உடல் உட்கிரகிக்கவும் தூண்டு கோலாக உள்ளது.

உணவுப் பாதையின் ஆரோக்கியத்தில் நார்ச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் மலச்சிக்கலிற்கும் நல்ல தீர்வாக நார்ச்சத்து விளங்குகிறது. எனவே நார்ச்சத்தினை அதிகம் கொண்டுள்ள கத்தரியை உணவில் சேர்த்து பயன் பெறலாம்.

 

உடல் எடை குறைப்பிற்கு

கத்திரியானது அதிக அளவு நார்ச்சத்துடன் குறைந்த அளவு கலோரியையும் கொண்டுள்ளது. எனவே இக்காயை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துவதோடு குறைந்த எரிசக்தியையும் தருகிறது.

மேலும் பசியை உணரச் செய்யும் ஹார்மோனான க்ரெலினின் செயல்பாட்டினை இக்காய் தாமதப்படுத்துகிறது. மேலும் பசியின்மை மற்றும் அதிகப்பசி ஆகிய இரண்டையுமே கட்டுப்படுத்தி ஆரோக்கியமான உடல் எடை குறைய இக்காய் வழிசெய்கிறது.

எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் இக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

 

எலும்புகள் பாதுகாப்பிற்கு

எலும்பு சீரழிவு மற்றும் ஆஸ்டியோபோரோஸிஸ் ஆகிய எலும்பு பாதிப்பு நோய்களிலிருந்து கத்தரி நம்மைப் பாதுகாக்கிறது. இக்காயின் தோலில் காணப்படும் பீனாலிக் கூட்டுப் பொருட்கள் எலும்புகளை உறுதிப்படுத்துவதோடு எலும்புகளின் அடர்த்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

இக்காயானது அதிக அளவு மெக்னீசிய சத்தினைக் கொண்டுள்ளது. உடலானது கால்சியத்தை உறிஞ்ச மெக்னீசியம் ஊக்குவிக்கிறது. மேலும் இக்காயில் காணப்படும் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து எலும்புகளைப் பலப்படுத்துகிறது. எனவே இக்காயினை உண்டு உறுதியான எலும்புகளைப் பாதுகாக்கலாம்.

 

அனீமியாவை குறைக்க

இக்காயில் இரும்புச்சத்தும், செம்புச்சத்தும் உள்ளன. இரத்த சிவப்பணு உற்பத்திக்கு இச்சத்துக்கள் முக்கியமானவை. இதனால் இரத்த சிவப்பணு குறைவினால் ஏற்படும் அனீமியாவிற்கு இக்காய் தீர்வாகும்.

கத்தரிக்காயை உணவில் சேர்த்து அனீமியாவால் ஏற்படும் தலைவலி, சோர்வு, பலவீனம், மனஅழுத்தம், அறிவாற்றல் செயலிழப்பு போன்றவற்றைக் குணப்படுத்தலாம்.

 

சிறந்த மூளை செயல்பாட்டிற்கு

இக்காயில் காணப்படும் பைட்டோநியூட்ரியன்கள் மூளையின் சிறந்த செயல்பாடு மற்றும் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. பைட்டோநியூட்ரியன்கள் மூளையை தொற்று நோய் உள்ளிட்ட நோய் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.

மேலும் இவை ஆக்ஸிஜன் மிகுந்த இரத்தத்தை மூளைக்கு செலுத்துவதால் மூளையின் நரம்பியல் பாதைகளை திறம்பட செயல்பட வைத்து நினைவாற்றல் மற்றும் பகுப்பாய்வு சிந்தனைகளை அதிகரிக்கச் செய்கிறது. எனவே கத்தரிக்காய் மூளைச் செயல்பாட்டுக்காய் என்று அழைக்கப்படுகிறது.

 

இதய நலத்திற்கு

கத்தரியில் உள்ள நார்ச்சத்தானது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி நல்ல கொலட்ஸ்ராலை சேமிக்க வழிசெய்கிறது.

மேலும் இக்காயில் காணப்படும் ஃப்ளவனாய்டுகள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயம் சீராக செயல்பட வழிவகை செய்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் அதிரோஸ்கிளிரோஸ் போன்றவை வராமல் நம்மை இக்காய் பாதுகாக்கிறது.

 

புற்றுநோய் வராமல் தடுக்க

இக்காயில் காணப்படும் ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் நோய்களின் தடுப்பாற்றல் மையமாக விளங்குகின்றன. இக்காயில் காணப்படும் விட்டமின் சி-யானது உடலுக்கு நோய் தடுப்பாற்றலைத் தருவதோடு நோய் எதிர்ப்பிற்கு காரணமான இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தின்போது உருவாகும் பிரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டினைத் தடுத்து புற்று வராமல் பாதுகாக்கிறது.

 

கத்தரிக்காயினைப் பற்றிய எச்சரிக்கை

கத்திரிக்காயானது சிலருக்கு உடலில் அரிப்புகள், தடுப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்தும். ஆதலால் புண்கள், தோல்நோய் உள்ளவர்கள், கர்பிணிகள் ஆகியோர் இதனை அளவோடு பயன்படுத்த வேண்டும்.

 

கத்தரிக்காயினை வாங்கும் முறைகள்

கத்தரிக்காயினை வாங்கும்போது பளபளப்பான பிரகாசமான நிறத்தில் கனமாகவும், விறைப்பாகவும் உள்ள காயினை தேர்வு செய்ய வேண்டும்.

கத்தரியின் காம்பினை நோக்கும்போது அது தடிமனாகவும், விறைப்பாகவும், பச்சை நிறத்தில் இருந்தால் அக்காயினைத் தேர்வு செய்ய வேண்டும்.

மேற்தோல் சுருங்கியும் மெதுவாகவும் மற்றும் மேற்புறத்தில் வெட்டுக்காயங்கள் உடைய கத்திரியைத் தவிர்த்து விடவேண்டும்.

இக்காயினை அறையின் வெப்பநிலையில் ஓரிரு நாட்கள் வைத்திருந்தும் குளிர்பதனப் பெட்டியில் ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

இக்காயினைப் பயன்படுத்தும்போது மேற்புறத்தினை நன்கு கழுவ வேண்டும்.

கத்திரிக்காயினை வெட்டி அரிசி களைந்த நீரிலோ அல்லது உப்பு கலந்த நீரிலோ போட்டு பயன்படுத்தினால் அதன் மேற்பரப்பு கறுத்து விடாமல் சுவையாக இருக்கும்.

கத்தரியை முறையாக சமைத்தால் அதன் சத்துக்கள் வீணாகாமல் நம்மை வந்தடையும். கத்தரிக்காயானது குழம்புகள், கூட்டுகள், பொரியல்கள், சட்டினி, ஊறுகாய், சூப் என பலவகைளில் சமைத்து உண்ணப்படுகிறது.

சத்துக்கள் நிறைந்த இயற்கையின் நன்கொடையான கத்தரியை உணவில் சேர்த்து மகிழ்வான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

2 Replies to “கத்தரிக்காய்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.