கனிம நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 14

வந்த வேலை முடிந்தது. அந்த அலுவலகத்திலிருந்து புறப்பட்டு பேருந்து நிறுத்துமிடம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

அப்பொழுது மணி மதியம் 12-யை கடந்திருந்தது. வெயிலின் தாக்கமோ அதிகரித்திருந்தது.

வியர்வை ஊற்றெடுத்து எனது முகத்தை நனைத்தது. கைகுட்டையால் கழுத்திலும் முகத்திலும் சொட்டிக் கொண்டிருந்த வியர்வை துளிகளை நன்றாக துடைத்தேன். கைகுட்டை ஈரமானது.

தண்ணீர் தாகம் எடுக்கத் தொடங்கியது. சாலையின் ஓரத்தில் நின்று, எனது முதுகில் மாட்டியிருந்த பையை திறந்து பார்த்தேன்.

அதில் நான் வழக்கமாக எடுத்து வரும் தண்ணீர் பாட்டில் இல்லை. அப்பொழுது தான் என் நினைவிற்கு வந்தது, குடிநீரை நிரப்பி, அந்த பாட்டிலை சமையலறையிலேயே வைத்துவிட்டு வந்தது.

“சரி, கடையில தண்ணி பாட்டில் வாங்கிக்கலாம்” என்று முடிவு செய்துக் கொண்டு, விரைவாக நடந்தேன். பேருந்து நிறுத்துமிடத்தை நெருங்கினேன். நல்ல வேளையாக, அங்கேயே ஒரு கடை இருந்தது.

மினரல் வாட்டர்

கடைக்குச் சென்றேன். “சார், ஒரு மினரல் வாட்டர் (mineral water) பாட்டில் வேணும்” என்றேன்.

அவர் குளிர்சாதன பெட்டியை திறந்து தண்ணீர் பாட்டிலை எடுக்க முற்பட்டார்.

உடனே, “கூலிங் இல்லாம இருக்கா” என்று கேட்டேன்.

சட்டென திரும்பி, பக்கத்தில் இருந்த மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்களில் ஒன்றை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார்.

அதற்குண்டான பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொண்டு அருகில் இருந்த பேருந்து நிறுத்தும் இடத்திற்கு வந்தேன்.

“நீர் குடிக்கலாம்” என்று எண்ணி, தண்ணீர் பாட்டிலை திறக்க, நான் ஏற வேண்டிய பேருந்து அங்கு வந்து நின்றது. தாமதிக்காமல், தண்ணீர் பாட்டிலை மூடிவிட்டு பேருந்தில் ஏறினேன்.

பேருந்து காலியாகவே இருந்தது. பயணச்சீட்டு வாங்குவதற்காக நடத்துனரை நோக்கிச் செல்ல முயன்றேன்.

“உக்காருங்க.வர்றேன்” என்று கூறி அவரே வந்தார். அவரிடம் சரியான காசை கொடுத்து பயணச்சீட்டை வாங்கிக் கொண்டு இருக்கையில் அமர்ந்தேன்.

பேருந்து ஓடிக் கொண்டிருந்தது. தண்ணீர் பாட்டிலை திறந்து நீரை குடித்தேன். ஆனால் சிறிதளவு நீர் என் மேலே சிந்தியது.

சட்டென பாட்டிலை மூடிவிட்டு, கைகுட்டை எடுத்து முகம் மற்றும் சட்டையில் சிந்தியிருந்த நீரை துடைத்தேன். அத்தோடு வியர்வையும் சேர்ந்துக் கொள்ள கைகுட்டை நன்றாக ஈரமானது.

“கவனமா குடிச்சிருக்கலாமே, இப்படி தண்ணி சிந்திடுச்சே” குரல் ஒலி கேட்டது.

கைகுட்டையை கவனித்தேன்.

“நான் தான் சார். நீர்” என்றது அந்தக் குரல்.

“ஓ…ஓ… நல்லா இருக்கியா”

“நான் நல்லா தான் இருக்கேன். நீங்க?”

“இம்ம்… நல்லா இருக்கேன். சொல்லு” என்றேன்.

“ரொம்ப சோர்வா இருக்கீங்களோ?”

“இல்ல, இல்ல நீ சொல்லு” என்றேன்.

“சும்மா தான். ஒரு சந்தேகம். இப்ப கேட்கட்டுமா?”

“என்ன சந்தேகம்? கேளு”

“நீங்க தண்ணீர் பாட்டில வாங்கரப்போ, மினரல் வாட்டர்ன்னு கேட்டீங்களே?”

“ஆமாம், அதுல என்ன சந்தேகம்?”

“என்ன சார் இப்படி கேக்குறீங்க? மினரல் வாட்டர்ன்னா என்ன? சொல்லுங்களேன்.”

சற்று சிந்தித்தேன். “சரி தான். மினரல் வாட்டர்க்கு தமிழுல ‘கனிம நீர்’ அப்படீன்னு சொல்லுவோம்.”

“கனிம நீருன்னா?”

கனிம நீர் என்றால் என்ன?

“சொல்றேன். குறிப்பிட்ட மற்றும் நிலையான கனிமப்பொருட்கள் கரைந்திருக்கும் நீருக்கு கனிம நீருன்னு பேரு. இது இயற்கையாகவே, நிலத்தடி நீர்மூலத்திலிருந்து எடுக்கப்படுது. பாரம்பரியமாகவே கனிம நீர இயற்கையாகவே மூலத்திலிருந்து பெறப்பட்டு பயன்படுத்துறாங்க.”

“சரி சார். ஆனா, இயற்கையா கிடைக்கும் நீருல, இடத்த பொருத்து கனிம பொருட்களும், அதன் அளவுகளும் மாறுபடுமே.”

“நீ சொல்றது சரி தான். இதற்கு தான் கனிம நீருக்கான வரையறைய சொல்லியிருக்காங்க.”

“அப்ப, அத சொல்லுங்களேன்.”

“இம்ம்… அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் வரையறைப்படி (U.S. Food and Drug Administration) கனிம நீர் என்பது, பாதுகாக்கப்பட்ட நிலத்தடி நீர் மூலத்திலிருந்து கிடைக்கும் நீருல குறைந்தது 250 parts per million அளவு மொத்த கரைந்த திடப்பொருட்கள், அதாவது நன்மை தரும் கனிம உப்புக்கள், இருக்கணும்னு சொல்றாங்க.

அதேசமயத்துல, இயற்கையா கிடைக்கும் இந்த நீருல, கூடுதலாக மற்ற எந்த கனிமங்களையும் சேர்க்க கூடாதுன்னும் சொல்றாங்க.”

“ஓ…ஓ…”

“ஐரோப்பிய ஒன்றியத்தில், கனிம நீருக்கு கொஞ்ச வித்தியாசமாக வரையறைய கொடுக்குறாங்க.”

“அப்படியா?”

“ஆமாம். நீர் சுத்தீகரிப்பு செய்யாம, இயற்கை மூலங்களில் இருந்து எடுக்கப்பட்டு, பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைத்தான் கனிம நீருன்னு இவங்களும் சொல்றாங்க.

ஆனா, இரும்பு, மாங்கனீசு, கந்தகம் மற்றும் ஆர்சனிக் போன்ற தீங்கிழைக்கும் வேதிப்பொருட்கள் நீருல, இருந்தா, அவற்றை நீக்க, நீர் சுத்தீகரிப்பு முறைகள் பயன்படுத்தப்படலாம்.

அதேசமயத்துல, கனிம நீரின் அத்தியாவசிய கூறுகளும் மாறக்கூடாது. அத்தோட, கார்பன் டைஆக்சைடு வாயுவ தவிர வேறு எந்த வேதிப்பொருளையும் கூடுதலா சேர்க்க கூடாது.”

“ஓ…இயற்கை கனிம நீருல இருக்கும் தீங்கான வேதிப்பொருட்கள நீக்கலாம். ஆனா, நன்மை தரும் கனிம உப்புக்களோட அளவு இயற்கையிலேயே எவ்வளவு இருக்கோ, அத்தோட விட்றனும், கூடுதலா சேர்க்க கூடாது. அப்படித்தானே.”

“ஆமாம்”

“ஆனா, இயற்கையா இருக்கும் நீருல நுண்ணுயிரிகளும் இருக்கலாமே.”

“ஆம். கனிம நீருல எப்படி தீங்கிழைக்கும் வேதிப்பொருட்கள் இருக்கக்கூடாதோ, அதேப்போல நோய்க் கிருமிகளும் இருக்கக் கூடாது.”

கனிம நீர் நன்மைகள்

“சரி சார். பொதுவா நான் உங்கள மாதிரி மனிதர்களோட வாழ்விற்கு முக்கியமுன்னு தெரியும். கனிம நீரா நான் உங்களுக்கு எப்படி பயன்படுறேன்?”

“இம். கனிம நீருல இருக்கும் வேதிக்காரணிகளப் பொருத்துதான், அதன் நன்மை இருக்கு. சொல்லப்போன, கனிம நீரை தொடர்ந்து நுகர்வதால ஏற்படும் விளைவைகளை மதிப்பிடும் ஆய்வுகள் தொடர்ந்து நடந்துகிட்டுத் தான் இருக்கு.

அப்படி ஒரு ஆய்வுல, கனிம நீர் நுகர்வால பித்தப்பை இயக்கவியலில் நேர்மறையான தாக்கம் ஏற்படுவதாக கண்டு பிடிக்கப்பட்டிருக்கு.

அதேநேரத்துல, இயற்கையான உயர் கனிம நீரால் (natural hyper mineral water) மனித ஆரோக்கியத்திற்கு தீங்குகள் விளைவிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

உதாரணத்துக்கு, அதிக அளவு உப்பு நிறைந்த கனிம நீரை பருகுவதன் மூலம், சோடியம் மற்றும் குளோரைடு அயனிகள் உடலில் அதிக அளவு தங்கி, இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதாக சில ஆய்வுகள் முடுவுகள் தெரிவிக்கின்றன.”

“ஓ…ஓ…”

“ஆனா, உயரளவு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் கொண்ட கனிம நீரை சிகிச்சைக்கு பயன்படுத்த, குடல் இயக்கம் மேம்பாடு மற்றும் இரைப்பை காலியாகுதல் முதலிய நன்மைகளும் நிகழுவாதாக சொல்றாங்க.

இத்தாலியில, இயற்கை இயற்கையான உயர் கனிம நீர் நுகர்வு பற்றி மருத்துவ ஆய்வுகள செஞ்சிருக்காங்க.

அவை பொதுவாக நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றன. ஆனா, இது ஆரம்பகட்ட ஆய்வு முடிவுதான், இன்னும் கூடுதலான ஆய்வுகள் தேவைன்னும் சொல்றாங்க.”

“எது எப்படியோ.. நான் உங்களுக்கு பயன்பட்டா போதும்.” என்றது நீர்.

சட்டென சிக்னலில் (traffic signal) பேருந்து நின்றது. நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதை உணர்ந்தேன். “சரி, நாம அப்புறம் பேசலாமா?” என்றேன்.

“சரி சார்” என்றது நீர்.

தண்ணீர் பாட்டிலை பையில் வைத்துக் கொண்டு, கைகுட்டையை கையில் வைத்துக் கொண்டு தயாரானேன், நிறுத்துமிடம் வந்தவுடன், பேருந்தில் இருந்து இறங்குவதற்காக.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

மென்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 15

வாலைவடி நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 13

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.