கருணை உள்ளம் – சிறுகதை

ஒரு சமயம் வெளிநாடு செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போயிருந்தேன்.

அப்போது நான் கண்ட காட்சி.

ஹோட்டலின் வாசலில் ஒரு பெரியவரை விரட்டிக் கொண்டிருந்தார் செக்யூரிட்டி.

பெரியவர் பசியின் காரணமாக வாடி வதங்கி போயிருந்தார்.

அழுக்காகி போயிருந்த பேண்ட் சட்டை, வெண்ணிற தாடி, பஞ்சு மிட்டாய் போன்று ஒன்றோடு ஒன்று சிக்கி பின்னி கொண்டிருந்த தலைமுடி, குழி விழுந்த கண்கள், நீர் பற்றாக்குறையால் வாடி சுருங்கிய இலை போல் உடலின் தோல் சுருங்கி கிடந்தது.

வாசலில் உச்சி வெயிலின் தாக்கத்தால் அவர் தடுமாறிக் கொண்டிருந்தார். கால்களில் செருப்பும் இல்லை. வயிற்றை காண்பித்து ஏதோ பேசுவது தெரிந்தது.

டைனிங் டேபிளில் உட்கார்ந்து இருந்த எனக்கு சாப்பிடவும் முடியவில்லை. அவரை பார்காமலும் இருக்க முடியவில்லை.

அவர் வேறு என்ன பெரிதாக கேட்டு விடப் போகிறார். ஒரு ஜாண் வயிற்றுக்காகத்தான் இந்த பாடு. அவரை அழைத்து வந்து சாப்பாடு வாங்கித்தர எண்ணி எழுந்தேன்.

அதற்கு முன்பாக ஒரு ‘டிப் டாப்’ ஆசாமி வந்து ஹோட்டலின் கண்ணாடி கதவை திறந்து கொண்டு வெளியே சென்றார்.

வெளியில் சென்றவர் செக்யூரிட்டியிடம் அந்தப் பெரியவரை உள்ள விடுமாறு சொல்லி அழைத்துக் கொண்டு வந்து அந்த ஹோட்டலில் ஒதுக்கப்புறமாக இருந்த டேபிளில் அமர வைத்து சாப்பாடு வைக்குமாறு சொன்னார்.

பெரியவர் சாப்பாட்டைப் பிசைய ஆரம்பித்தார். அவரின் கண்கள் கலங்கி உப்பு நீர் மூக்கின் வழியாக வழிந்தது.

அந்தப் பெரிய மனிதர் அவரை சாப்பிட வைத்துவிட்டு, அந்த ஹோட்டல் மேனேஜரிடம் ஏதோ சைகை காண்பித்து சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் அதற்கு மேலும் பார்த்தும் பாராமல் சாப்பிட்டு முடித்துவிட்டு என் பில்லைக் கட்டிவிட்டு வெளியேறினேன்.

மறுநாள் என் வேலைகளை முடித்துவிட்டு அதே ஹோட்டலுக்கு சாப்பிட வந்த போது பெரியவர் ஒருவர் அந்த ஓட்டலுக்கு வருபவருக்கும் போவருக்கும் வணக்கம் சொல்லி கதவை திறந்து விட்டுக் கொண்டிருந்தார்.

சீருடையும் தலைப்பாயும் அவ்வளவு பொருத்தமாக இருந்தது அவருக்கு. நானும் வணக்கம் சொல்லிவிட்டு உள்ளே சென்று டேபிளில் அமர்ந்தேன்.

ஒரே குழப்பமாக இருந்தது. இவரை இதுக்கு முன் எங்கோ பார்த்த ஞாபகம். சரியாக நினைவுக்கு வரவில்லை.

அப்போது என் டேபிளுக்கு சர்வர் வந்து “வணக்கம் சார் உங்களுக்கு என்ன வேண்டும்? என்ன சாப்பிடுறீங்க?” என்று கேட்டுக்கொண்டு ஒரு லிஸ்டைக் கையில் தந்தார்.

நான் அதை கையில் வாங்கி படித்துப் பார்க்காமலே நேத்து சாப்பிட்ட உணவையே இன்றும் ஆர்டர் செய்தேன்.

சிறிது நேரத்தில் சர்வர் உணவை கொண்டு வந்து வைக்க, அதுவரையில் தெளிவு பெறாமல் யோசித்து கொண்டு இருந்த எனக்கு சட்டென்று சுய உணர்வு வந்தது. நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

சர்வரை அருகில் அழைத்து “தம்பி, நேற்று நான் வந்தபோது வாசலில் யாரும் இல்லையே! இன்று வாசலில் ஒரு பெரியவர் வணக்கம் சொல்லி அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறாரே!”

“ஓ! அத கேக்கறீங்களா. அந்தப் பெரியவர் நேற்று தான் வேலைக்கு சேர்ந்தார்.”

“என்ன நேத்து தான் வேலைக்கு சேர்ந்தாரா? பார்த்தால் வயதானவர் போல தெரிகிறதே.”

“எங்க முதலாளிக்கு இரக்க குணம் அதிகம். கடையின் மேலே தான் அவருடைய ரூம் இருக்குது. அங்கே இருந்து கேமராவில் கண்காணித்து கொண்டிருப்பார்.

கடையின் வாசலில் யாராவது பசி என்று வந்து நின்று விட்டால் போதும். உடனே மேலே இருந்து கீழே இறங்கி வந்து யார் என்னவென்று விசாரித்து பசிக்கு சாப்பாடு கொடுத்து அவர்களுக்கு கையில் காசு கொடுத்து, முடியை வெட்டி குளிக்க சொல்லி, சீருடை அணியச் சொல்லி, கடையில் வேலைக்கு சேர்த்துக் கொள்வார்.

ஆதரவற்றவர்கள் யாராக இருந்தாலும் சரி, ஊனமாக இருந்தாலும் சரி, அவர்களால் முடிந்த எந்த வேலையாக இருந்தாலும் பார்க்கட்டும் என்று சேர்த்துக் கொள்வார்.

அவர்களுக்கு ஒருவேளை மட்டும் உணவு அளித்து அனுப்பி வைத்தால், அடுத்த வேலை உணவிற்கு யாரிடமாவது கையேந்தி நிற்பார்கள்.

‘மீன் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவனுக்கு நாம் பிடித்த மீனை கொடுப்பதை விட, அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே நல்லது’ என்று சொல்வார் எங்கள் முதலாளி.

சிறுவயதில் ஒருவேளை சாப்பாட்டிற்கு அவ்வளவு கஷ்டப்பட்டாராம். இங்கு வேலை பார்ப்பவர்களின் பாதிப்பேர் அப்படி வந்தவர்கள் தான்.

எங்கள் முதலாளிக்கு இப்போது இது போன்று 26 உணவகங்கள் இருக்கின்றன.” என்று சொல்லி முடித்தார்.

என் கண்கள் கலங்கியதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் கர்ச்சிப்பால் கண்களை துடைத்தபடி வெளியே நடந்தேன்.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.