காடே கதை கூறு குறும்படம் காட்டை மையம் கொண்ட அரசியல் படம்.
பணத்திற்கும் பணமற்றவைக்கும் இடையில் நடக்கும் போராட்டம்.
காட்சி ஒன்று. உள் நடப்பவைகளும் வெளிப்பாடுகளும் வேறு வேறு. அந்த அரசியல் பொதுமக்களுக்குத் தெரிவதேயில்லை.
மனதை அதள பாதாளத்திற்குள் கொண்டு சென்று அழுத்துவது போன்ற பிரமை. கண்ணீர் முட்டிக் கொண்டு நிற்கும் சோகம்.
வலி, வேதனை, இயலாமை, துயர், அத்தனையையும் ஒட்டு மொத்தக் காட்சிகளிலும் அள்ளித் தெளித்திருப்பது மனதை ஏதோ செய்கிறது… உள்ஊடுறுவி திடுக்கிட வைக்கிறது.
காட்டு அரசியல்
திருப்பதி- சேஷாசல மலையில் செம்மரக் கடத்தல் – இதன் பின்னணி நடத்தைகள் – அவ்வவ்பொழுது மாட்டிக் கொள்ளும் செம்மரம் வெட்டும் திருவண்ணாமலை சுற்று வட்டார ஏழை மக்கள்- செய்திகள். இது தான் இக்குறும்படத்தின் கதைக் கரு. விரிவாக விளங்க வைக்க வேண்டிய கதைக்கரு. ஆனால். 14 நிமிடங்களில் எல்லாவற்றையும் விளங்க வைத்து ஆவனமாக்கித் தந்திருக்கிறார் இயக்குநர்.
ஆழமான, நுண்மையான வசனங்கள் கதையை மிக விரைவாக நகர்த்துகின்றன. இசை கூட சில நேரம் சொல்ல வேண்டிய உணர்வுகளை நறுக்கென்று கடத்துகின்றது.
செம்மரக் கடத்தல் குறித்த செய்திகள் வரும் பொழுதெல்லாம், ‘போலீசாருக்கும், கடத்தல்காரர்களுக்கும் இடையில் சண்டை, போலீசார் சுட்டதில் இத்தனை பேர் பலி’ என்று வரும்.
அப்பொழுதெல்லாம் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை பலர். உண்மையில் செம்மரம் கடத்தினால், சூடுபட்டு சாக வேண்டியது தான் என்று, அப்போது அவர்கள் மனம் நீதி பேசி இருக்கும்.
சந்தனக் கடத்தல், செம்மரக் கடத்தல் கதைகளில் சில, விஸ்வரூபம் எடுத்து, மாபெரும் அவதாரப் புருஷர்களாக மாற்றப்பட்டு, பத்திரிக்கைகளில் அவர்களைக் குறித்தும், அவர்களது கடத்தல் பின்புலம் குறித்தும் எழுதயதற்குப் பிறகு தான் இங்கு நடக்கும் ‘காட்டு அரசியல்’ மக்களுக்குப் புரிய ஆரம்பித்தது.
வெட்டுபவன் மட்டும் சாவான். ஏன்?
வெட்டுபவன் ஒருவன், கடத்துபவன் ஒருவன், விற்பவன் ஒருவன், வாங்குபவன் ஒருவன், வைத்திருப்பவன் ஒருவன், இவர்கள் எல்லோரும் மாட்ட மாட்டார்கள். ஆனால், வெட்டுபவன் மட்டும் குண்டடி பட்டுச் சாவான். என்ன கொடுமை இது?
”இந்த காட்டு அரசியல், இங்கு நடக்கும் பெரும் உள்வியாபாரம், இது எதுவுமே எப்போதுமே வெளியே வருவதில்லை” என்ற மறைமுக நடத்தைகளை அப்பட்டமாகப் போட்டு உடைத்திருக்கிறது இப்படம்.
இந்த உள்ளரசியலைத் தாண்டி, சாதியத் திமிர், இன வன்மம், மேல் தட்டு ஆணவம் என்பதையும் இதற்குள் நுழைத்துக் கதை கூறியிருப்பது இரத்த நாளங்களை உசுப்பேற்றுகிறது.
எத்தனை கொடுமைகள் செய்வீர் இன்னும்? எனப் படம் பார்க்கும் போது வாய் முணுமுணுக்கிறது. கடுமையை அப்படியே வெளிப்படுத்தும் வசனங்கள் மிக ஆழமானவை. உண்மையை வெளிப்படுத்துவவை.
நிறம், முகவெட்டு, ஆடை, பேச்சு, பேருந்தில் பின்சீட்டு இதை வைத்து மனிதருக்குள் பாகுபாடா? நக்கலும் நையாண்டியும் படம் பார்ப்பவரை வெகுளச் செய்கிறது.
முழுமையாக ஆடைகளன்றி ஒன்பது பேரை நடுக்காட்டிற்குள் எவ்வித ஆதாரமும் இல்லாமல், மேலதிகாரிக்குக் கணக்குக் காட்டி செம்மரக் கடத்தல் கேஸை முடிக்க, அடித்துத் துன்புறுத்திச் சுட்டுக் கொள்ளும் இந்த ஒரேயொரு காட்சிப் பத்தாயிரம் சவுக்கடிகளைக் கொடுத்த வலியைத் தருகிறது.
“அடி தாங்க முடியாம ஒன்னுக்கடிச்சுட்டான் சார்” என்று ஒரு போலீஸ்காரன் சொல்லும் போது, அவனை ஓங்கி அடித்துக் கொன்று விட வேண்டும் போலிருக்கிறது.
செய்யாத தவறை, செய்ததாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என வற்புறுத்திச் செய்யும் துன்பங்கள், இதுபோன்று ஒன்று இரண்டல்ல. ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் தமிழகத்திலும் இதுபோல் இன்னும் பல நூறு நடந்து கொண்டே தான் இருக்கிறது.
காடே கதை கூறு குறும்படம் = விழிப்புணர்வு
“தமிழா” எனச் சோகமாகப் பாடும் பாடல் எதார்த்த வரிகளால் நெஞ்சில் ஆழமாகப் பதிகிறது. இசையமைப்பு குறும்பட வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது.
அனைவரையும் உணர வைத்து நடிக்க வைத்திருப்பதால் நடிப்பு அசாத்தியமாக வந்திருக்கிறது ஒவ்வொருவரிடமும்.
இது ஒரு பக்கம் என்றால், மேலதிகாரியின் சூழ்ச்சிகளுக்கு, கட்டுக் கதைகளைக் கட்டமைக்கும் நாடக ஆசிரியர்களாகப் போலீஸ்காரர்கள் விளங்குகிறார்கள் என்ற கோணத்திலும் இக்கதை கூறப்பட்டிருப்பது, வேலையைத் தக்கவைக்க இரக்கப்படவெல்லாம் முடியாது என்ற நிலை.
காடு இது போன்ற கதைகளை உடனே உடனே வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத் தான், இந்தத் தலைப்பு, ”காடே கதை கூறு”.
காடு கதை கூறி விட்டது.
நாம் தூங்குகிறோமா? இல்லை விழித்துக் கொள்கிறோமா?
இக்குறும்படத்தைக் குறித்த ஒரு பார்வையாளரின் விமர்சனம்:
“ஆனால் இன்னும் என் இன மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கூடிய முடிவை சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். பெரிய இயக்குனர்களே எடுக்க பயப்படும் கதை களத்தை நீங்கள் எடுத்ததற்கு நன்றி.”- (Trib Jet)
இயக்கம்-எழுத்து-ஒளிப்பதிவு:- ஜெயசீலன்
இசை:- வசந்த் சந்திரசேகர்
படத்தொகுப்பு:- சு. சுதர்சன்
பாடல் ஆசிரியர்:- சுதன் பாலா
வெளியீடு:- காம்ரேட் டாக்கீஸ்
தயாரிப்பு:- க. யுவராஜ்
(குறும்படம் விரியும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!