அந்த ஆலயத்தின் கோபுரத்தில்
வாழ்ந்திருந்த வெள்ளைப்புறா
காதல் என்றால் என்ன என்று
கண்டறிய நினைத்தது!
சோலை வனம் ஒன்றில் நுழைந்து
பூக்களிடம் கேட்டது
காதல் என்றால் என்ன?
சாலையிலே பறந்து செல்லும்
சிறந்த வண்ண பூச்சிகளை
சிறகினாலே தழுவச் செய்ய
நாங்கள் தருகின்ற வாசனையை
சுமந்து செல்லும் காற்றின் செய்கை
காதலன்றி வேறு என்ன? என
கண்கவரும் வண்ணப்பூக்கள்
காதல் பற்றி சொல்லின!
சின்னப்புறா மீண்டும் துள்ளி
சிறகு விரித்து பறந்து சென்று
கொல்லையில் பழுத்திருந்த
கொய்யா மரத்தை அடைந்தது
அய்யா நீ சொல்லேன்
காதல் என்றால் என்னவென்று?
கொய்யாவைக் கேட்டதும் அது
குலுங்கி சிரித்துபின் சொன்னது
பழுத்த பழம் சுமந்திருப்பேன்
வெளிர் பொன்னாய் அதைப் புதைத்திருப்பேன்
விழுந்தாலும் துயரமின்றி
விதையாய் நான் எழுந்திடுவேன்
விருட்சமாக உயர்ந்திடுவேன்
அதற்கு முன்னர் உன்இனத்தார்
உண்டிட நான் மகிழ்ந்திடுவேன்
அதுதானே காதல் என்பேன்
அதன் எல்லை அன்பே என்பேன்
பழுத்திருந்த மரம் சொன்ன
பதிலால் மனம் திருப்தியுற்று
எழுந்த புறா
பழுதில்லா அன்பெதுவோ அதுவேதான்
காதலென புரிந்ததனால்
பறந்தது தன் காட்டை நோக்கி
நல்ல உள்ளம் பிறர் வாழ உதவும்
நன்மை தரும் நலம் பெருக்கும்
அல்லதைத் தடுக்கும் ஆக்கம் கொடுக்கும்
அதுதான் உண்மை காதல் என
நமக்கும் உணர்த்திச் செல்லும்!
கைபேசி: 9865802942