தனிமைதான் எனக்கு நிரந்தரம் என்று ஆனது
யாரிடமும் எதுவும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை
நலம் கேட்போரின் வார்த்தையில் உயிரோட்டம் இல்லை
சின்ன சின்ன சந்தோசங்களுக்கு மனம் ஆசைப்படுகிறது
ஐந்து வருடம் காப்பாற்றிய கவுரவம் காற்றில் போனது
மௌனத்தை என் மீது திணித்தது வாழ்க்கை
இங்கு எது பேசுவதற்கும் யோசனையாக இருக்கிறது
என் பொறுப்புகளை கையாள வழி தேடுகிறது மனசு
நம்பிக்கை கொண்ட மனத்திற்கு பாதை எங்கும் வழிகள்
என்ற கூற்று என் முன்னே பொய்த்து போனதோ?
கணவனாக, தந்தையாக, மகனாக, நல்ல உறவாக
என் பொறுப்புகள் செய்யப்படாமல் கிடக்கின்றன
சார்ந்து இருந்து பழக்கப்படாத மனது
உறவுகள் செய்யும் உதவியில் தொய்மை அடைகிறது
சோதனைகளை சாதனைகளாக்கும் என் மனதிற்கு
இப்பொழுது ஒய்வு காலமாக இருக்கிறது
மறுபடியும் வாய்ப்பிற்கு காத்திருக்கிறேன் நான்
என் உறவுகளுக்கு என்ன நலமானது பண்ண முடியுமோ
அதனை முடிக்க தருணம் வரும் வரை காத்திருக்கிறேன்
வாழ்க்கை என்னை மறுபடியும் புடம் போடுகிறது
எங்கு வீழ்த்தப்பட்டேனோ அங்கேயே மீண்டும் எழுவேன்
நான் பக்குவப்பட இயற்கை தடைகளைக் கொடுக்கிறது
நான் பக்குவப்பட இயற்கை தனிமையைக் கொடுக்கிறது
இதனை சாபமாகக் கருதாமல் வரமாகக் கொள்வேன்
வெற்றி தோல்வி காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டவை
என்ற நியதி உணர இயற்கை தனிமை தருகிறது
என்னை சுற்றி எது நடந்தாலும் நடக்கட்டும்
சூழ்நிலையால் பாதிக்கப்படும் கைதியல்ல நான்
வாய்ப்புகளை வரமாக மாற்ற இன்னும்
இனிய பக்குவத்திற்கு காத்திருக்கும் நான்
– சிறுமலை பார்த்திபன்