கானல் நீர்- சிறுகதை

நிரவியில் ஒரு செல்வந்தர் வீட்டில் உற்றார், உறவினர்கள் நண்பர்கள் என்று அனைவரும் கலந்து கொண்டு தடபுடலாக திருமணம் நடந்து கொண்டிருந்தது.

திருமண நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடந்தது.

அந்த ஊரில் பெரிய பெயர் போன சமையல்காரர் மெய்தீன் கைப்பக்குவதில் சமையல் தயாரிக்கப்பட்டு பந்திப் பரிமாறப்பட்டது.

சமையல்காரரின் கை ஆட்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைகளை எடுத்து போட்டு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது

“டேய் பாபு! என்னடா பண்ணிக்கிட்டு இருக்க. சாப்பாடு கேக்குறாங்க பாரு. அள்ளி வச்சு அனுப்பி விடு. தால்சா வாளியில் தால்சா இல்ல பாரு. ஒரு ரெண்டு மூணு வாளிக்கு ஊத்தி வை” என்று சொல்லிக் கொண்டிருந்தான் சேத்தான்.

அவன் சொன்ன வேலையெல்லாம் செய்து முடித்துவிட்டு பாபு நண்பன் சேத்தானிடம் வந்தான்.

“டேய் சேத்தான், இங்க பாருடா ரொம்ப நேரமா நானும் பாத்துகிட்டு இருக்கேன். அங்க ரெண்டு மூணு பொம்பளைங்க என்ன பாத்து கைய காமிச்சு காமிச்சு என்னமோ பேசுறாங்கடா.”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல பாபு. போய் உன் வேலையை பாரு. கொஞ்ச நேரத்துக்கு தம் அடிக்கிறத நிப்பாட்டிக்க. வேலை முடியட்டும். அவங்க போனதும் நாம பேசிக்கலாம் என்ன புரிஞ்சுதா?” என்று சொன்னான் சேத்தான்.

பாபுவுக்கு புரிந்து விட்டது. ‘இதில் ஏதோ அர்த்தம் இருக்குது. விருந்துக்கு வந்த பொம்பளைங்க ஒருவர் மாத்தி ஒருவர் வந்து நம்பள பாக்குறாங்க. இவனும் கொஞ்ச நேரம் தம் அடிக்காதன்னு சொல்றான். சரி சரி எதுவா இருந்தாலும் வேலை முடிஞ்சதுக்கு அப்புறம் அவன கூப்பிட்டு தனியா பேசிக்குவோம்’ என்று யோசித்துக் கொண்டே பாபு வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

ஒரு வழியாக விருந்து சிறப்பாக முடிந்தது.

பாபு வேலையை முடித்துவிட்டு தன் கையில் கொண்டு வந்திருந்த சாமான்களை எல்லாம் சரி பார்த்து வைத்து சைக்கிளில் கட்டிக் கொண்டிருந்தான்.

அப்போது மேஸ்திரி மொய்தீன், “டேய் பாபு வேலையெல்லாம் முடிஞ்சுசா? இங்க வா” என்றார்.

பாபு அருகில் வந்தான்.

“பாபு அவங்க வந்து உன்னைய பார்த்தார்களே. ஏதாவது உன்கிட்ட பேசினார்களா?”

“இல்லையே அவங்க யாருன்னு எனக்கு தெரியாது. என்னமோ வந்து எட்டி பார்த்தாங்க. கூட, ஒரு வயசான பெரியவரும் வந்து இருந்தாரு. அவங்களுக்குள்ளயே என்னமோ பேசிகிட்டு சிரிச்சுகிட்டு போயிட்டாங்க. எனக்கு ஒண்ணுமே தெரியலையே”

இடையில் சேத்தான் சிரித்துக்கொண்டே “தெரியாதுடா உனக்கு. எப்படி தெரியும்? உனக்கு ஒண்ணுமே தெரியாது.”

“யோவ் என்னய்யா சொல்ற? எனக்கு என்னைய தெரியும் நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்துகிட்டு இருக்கிறேன்.”

“ஆமாம் இவரு பச்ச புள்ள பாரு. இவர வந்து வேடிக்கை பாக்குறாங்க. டேய் எல்லாம் எனக்கு தெரியும்டா” என்று சொல்லி கிண்டலடித்து சிரித்தான் சேத்தான்.

உடனே மேஸ்திரி “பாபு உனக்கு உண்மையிலேயே ஒன்னும் தெரியாதா?”

“ஆமாங்க நீங்க எல்லாரும் என்ன பேசுறீங்க? என்ன கேட்கிறீங்க? ஒன்னும் தெரியலையே …”

“அவங்க தான்டா உன்னை மாப்பிள்ளை பார்த்துட்டு போய் இருக்காங்க.”

“அப்படியா எனக்கு என்ன தெரியும்?”

“நல்ல குடும்பம்டா. அவங்க கிட்ட உன்ன பத்தி எல்லாம் பேசிட்டேன். உன்னைய அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. உங்க அம்மா அப்பா கிட்ட பேசிட்டு ஒரு நல்ல முடிவு எடுப்பாங்க.”

“இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்? நான் அவங்கள கூட சரியா பாக்கல. நான் பாட்டுக்கு என் வேலைய பாத்துட்டு இருக்கேன். இவன் தான் சொன்னான் கொஞ்ச நேரத்துக்கு தம்மு அடிக்காதன்னு.”

“அடுத்தது இவன் கல்யாண சாப்பாடு தான் நம்மளுக்கு” என்று சேத்தான் சொல்ல மறுபடியும் ஒரே சிரிப்பொலி திரும்பவும் கிண்டல் அடிக்க ஆரம்பித்து விட்டனர்.

சேர்த்தானும் பாபுவும் சிறு வயது முதல் நல்ல நண்பர்கள். அவன் இருக்கும் இடத்தில் தான் இவன் இருப்பான் இவன் இருக்கும் இடத்தில் தான் அவன் இருப்பான். ஒருவருக்கொருவர் விட்டு பிரிய மாட்டார்கள்.

வீட்டிற்கு போனதும் பாபுவின் அம்மா “டேய் பாபு உனக்கு பொண்ணு பார்த்து இருக்கேன்டா. நல்ல பொண்ணு நல்ல குடும்பம். எங்களுக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சு. அதனால நாங்களும் சரின்னு சொல்லிட்டோம்.

உன்னைய கல்யாண வீட்டிலேயே பாத்துட்டாங்கலாமே. அவங்களுக்கு உன்னைய ரொம்ப புடிச்சு போச்சாம். பொண்ணு பேரு சாந்தினி. பொண்ணு அழகா இருக்கா.

குடும்பம் நம்மள மாதிரி ஏழைபட்ட குடும்பம் தான். நல்ல குடும்பமா தெரியுது. அதனால தான் நானும் அப்பாவும் பேசி முடித்து விட்டோம்.

நாளைக்கு நாங்க போய் பொண்ண ஒரு எட்டு பாத்துட்டு வந்துருவோம். அவங்க அதுக்கப்புறம் வந்து உன்னைய வீட்டுல வச்சு பாப்பாங்க” என்றார்.

பாபுவுக்கு எதுவும் புரியவில்லை அப்போது “சரி சரி எதையாச்சும் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.

சில மாதங்கள் சென்றன.

ஒருநாள் தன் மேஸ்திரியிடம் இருந்து போன் வந்ததும் வேலைக்கு புறப்பட்டு கொண்டு இருந்தான் பாபு.

அம்மா பாபு “எங்கப்பா கிளம்பிட்ட? இன்னைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு பொண்ணு வீட்ல இருந்து வராங்களாம்.”

“சாயங்காலம் தானே. மேஸ்திரி கிட்ட இருந்து போன் வந்துச்சு. ஒரு வேலை ஒன்னு இருக்குதாம். சின்ன வேலை தான் முடித்துவிட்டு சீக்கிரம் வந்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான் பாபு.

“சரி சரி சீக்கிரமா போயிட்டு வேலைய முடிச்சுட்டு சீக்கிரமா வந்துடுப்பா.” என்றாள் அம்மா.

பாபு நிரவிக்கு சென்று வேலையை முடித்துவிட்டு தன் மேஸ்திரியிடம் விசயத்தை சொல்லிவிட்டு இரண்டு மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வந்து விட்டான்.

பாபு அம்மாவிடம் “சரி இப்ப சொல்லுங்க. எப்ப வராங்க என்ன செய்யணும்?”

“ஒன்னும் இல்லப்பா. நாலு மணிக்கு பொண்ணு வீட்டிலிருந்து வருகிறார்களாம். ஒரு பத்து பேர் வருவாங்க அவங்களுக்கு என்ன செய்யலாம் நீயே சொல்லு?”

“அவங்க பத்து பேரு தான் வராங்க. நம்ப அக்கம் பக்கத்து வீட்ல இருந்து சரி ஒரு பத்து பேர வச்சுக்குவோம். அப்புறம் நம்ம வீட்டுல உள்ளவங்க ஒரு 25 பேர்.”

“என்னப்பா பண்ண போற?”

“அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். ஆளுக்கு ஒரு முர்தப்பா. கொஞ்சம் சேமியா பாத். கொஞ்சம் கேசரி. ஆளுக்கு ஒரு டம்ளர் காப்பி அவ்வளவுதான். போதுமில்ல?”

“சரி சரி உனக்கு தெரிஞ்ச மாதிரி பார்த்து செய்” என்று சொல்ல, பாபு கடைத்தெருவுக்கு சென்று சிறிது நேரத்தில் சாமான்களுடன் தன் நண்பன் செத்தானையும் அழைத்துக் கொண்டு வந்தான்.

தன் வேலைகளை முடிக்கவும் பெண் வீட்டிலிருந்து வரவும் சரியாக இருந்தது.

அம்மாவும் அப்பாவும் “வாங்க, வாங்க எல்லாரும் வாங்க” என்று சொல்லி உள்ளே அழைத்து உட்கார வைத்தார்கள்.

பெண் வீட்டின் உறவினர் ஒருவர் “எங்க மாப்பிள்ளை தம்பிய காணோம்?”

“அவர் கொல்லையில இருக்காரு. கொல்லையில கொஞ்சம் வேலை பார்த்துட்டு இருக்காரு. இப்ப வந்துருவாரு. வர சொல்றேன்.” என்றாள் அம்மா.

பெண்ணின் அக்காள் “வேணாம் வேணாம் மாப்பிள்ளைய தான் நாங்க கல்யாண வீட்டிலேயே பாத்துட்டோமே. நாங்க கொல்லையில போயி மாப்பிள்ளைய பார்த்துக்கிறோம்” என்றாள்.

“மாப்பிள்ளை என்ன பண்ணிட்டு இருக்காரு சமச்சிட்டு இருக்காரா?”

“ஆமாம்.” என்றாள்.

அதே நேரம் மாப்பிள்ளை வேலையை முடித்துவிட்டு கை கால் மூஞ்சி எல்லாம் கழுவிக்கொண்டு துண்டை எடுத்து துடைத்தபடி உள்ளே வர,

பெண்ணின் அக்கா, “மச்சான் வாங்க. மச்சான் எங்க போறீங்க? உங்கள இப்படி பாக்குறப்ப தான் அழகா இருக்குது. ஹா ஹா ஹா” ஒரே சிரிப்பும் கேலியும் ஆக வீடு மாறியது.

சிறிது நேரத்தில் மாப்பிள்ளை ரெடியாகி வெளியே வர. மாப்பிள்ளையை பார்த்தபின் விருந்து உபசரிக்கப்பட்டது.

இரு வீட்டாருக்கும் பிடித்துப் போக அனைவரின் சம்மதத்துடன் ஒரு நல்ல நாளில் திருமணம் முடிந்தது.

அப்போதுதான் பாபு பெண்ணை பார்த்தான்.

பெண் நாலரை அடி உயரம். வட்ட முகம். கூட்டு புருவம் வலது புற புருவத்தில் ஒரு மச்சம். குண்டு உடும்பு. வெள்ளை நிறம். உயரத்துக்கு தகுந்தாற்போல் கை கால் எல்லாம் குண்டு குண்டாக விரல்கள் எல்லாம் சின்ன சின்னதாக செஞ்சு வைத்தது போல்.

குண்டு உடம்பில் பட்டுப்புடவை சுற்றி கிட்டத்தட்ட ஒரு பொட்டலம் போல் பாபுவின் அருகில் நின்றாள். பாபுவால் எதுவும் சொல்ல முடியவில்லை

‘தனக்கு இப்படி பெண்ணைப் பார்த்து கட்டி வைத்து விட்டார்களே’ என்று மனதில் நொந்து கொண்டாலும், ‘சரி நம்மளுக்கு ஆண்டவன் கொடுத்தது அவ்வளவுதான்’ என்று மனதை சமாதானம் பண்ணிக் கொண்டான்.

இரண்டு மூன்று நாட்கள் சென்றன. பால் இனித்தது. கனியின் சுவை தெரிந்தது.

அவளின் உயரத்தை தான் ஆண்டவன் அளந்து வைத்தானோ தவிர அவளின் மனம் மிகவும் பெரியது.

உயரத்தைப் பார்த்து உருவத்தைப் பார்த்து யாரையும் எடை போட்டு விடக்கூடாது என்பதை புரிந்து கொண்டான்.

மிகவும் பாசமாகவும் அன்பாகவும் கணவனின் நிலை அறிந்து நடந்து கொண்டாள். கணவனின் வருமானத்துக்குள் குடும்பம் நடத்தினாள்.

தன் கணவன் மேல் சிறு கீறல் பட்டாலும் துடித்து விடுவாள். அவள் கண்ணில் கண்ணீருக்கு பதில் ரத்தம் தான் வடியும். அவ்வளவு பாசமானவள், பண்பானவள், அழகானவள், அறிவானவள், அமைதியானவள் என்று உணர்ந்தான் பாபு.

இல்லற வாழ்க்கையில் சந்தோசம், மன நிம்மதி என்று அளவற்ற சந்தோஷத்தில் திளைத்தான் பாபு.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருவரும் அன்பில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சாந்தினி கருவுற்றாள்.

சாந்தினிக்கு மூன்று மாதமாக இருந்தபோது, ஒருநாள் பாபுவும் சாந்தினியும் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்க, பாபு தூக்கத்தில் தேம்பி தேம்பி அழுது கொண்டு இருந்தான்

சாந்தினி சத்தம் கேட்டு எழுந்தாள்.

“என்னங்க… என்னங்க… எழுந்திரிங்க ஏன் அழுவுறீங்க? என்ன ஆச்சு?”

“…ம்…ம்…ம்” எழுந்து உட்கார்ந்து கண்களை துடைத்துக் கொண்டான்.

“என்னங்க என்ன ஆச்சு? ஏன் தூக்கத்துல அழுவுனீங்க?”

பாபுவுக்கு அப்போதுதான் சுயநினைவு வந்தது. கனவில் கண்டதை எல்லாம் நினைவுகூர்ந்தான்.

சாந்தினி திரும்பவும் கேட்க, பாபு கனவில் கண்டதை சொல்ல ஆரம்பித்தான்.

சாந்தினி பிரசவத்திற்கு ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும், பிரசவத்தில் இறந்து விட்டதாகவும், அவளை தூக்கிக்கொண்டு போய் மார்ச்வரியில் வைத்திருப்பதாகவும், பாபு பைத்தியம் பிடித்தது போல் அலறிக் கொண்டு அங்கும் இங்கும் ஓடுவதைப் போல் கண்டேன் என்று சொல்லிவிட்டு தேம்பிக்கொண்டே, தான் படுத்து இருந்த கட்டிலுக்கு நேர் எதிர்த்த சுவற்றில் மாட்டி இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். ஒரு மணியை காட்டியது.

சாந்தினி பாபுவை தன் மார்போடு அணைத்துக் கொண்டு முதுகை தட்டி கொடுத்தாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. பயப்படாதீங்க! எனக்கு ஒன்னும் ஆகாது.

நம்ம புள்ள எந்த பிரச்சனையும் இல்லாம நல்லவிதமா பிறக்கத்தான் போறான். அப்படியே உங்கள மாதிரியே.

நாம ரெண்டு பேரும் சந்தோசமா வளர்க்கத்தான் போறோம். நம்மளுக்கு ஆண்டவன் எந்த குறையும் கொடுக்க மாட்டான்” என்று சொல்லி சமாதானப்படுத்தி படுக்க வைத்தாள்.

அதிலிருந்து பாபு தன் மனைவியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான். எந்த ஒரு சின்ன மனக்கசப்பும் வந்து விடக்கூடாது என்று மிகவும் கவனமாக நடந்து கொண்டான்.

இருந்தாலும் சாந்தினியின் பாசத்திற்கு அளவே கிடையாது. தன் கணவனை குழந்தையைப் போல் பாவித்தாள்.

இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. எந்த ஒரு தம்பதியும் வாழாத வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

ஏழு மாதத்தில் வளைகாப்பு நடத்தி சாந்தினியை அவளின்அம்மா வீட்டிற்கு அழைத்துச் செல்ல, பாபுவும் பின்னால் சென்றான்.

பகல் நேரங்களில் தன் ஊருக்கு வந்து வேலை இருந்தால் வேலைகளை முடித்துவிட்டு இரவு தன் மாமியார் வீட்டிற்கு திரும்பி விடுவான்.

இப்படியே நாட்கள் ஓடின.

பிரசவத்திற்கு பத்து நாள் முன்பாகவே, நாகப்பட்டினம் தலைமை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

விஷயம் அறிந்து ஊரில் இருந்த பாபு தன் கையில் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு போய் சேர்ந்தான்.

அதற்கு அப்புறம் பாபு ஆஸ்பத்திரியை விட்டு நகரவே இல்லை. தன் மனைவி ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த நாட்கள் எல்லாம் பாபுவும் கூடவே தான் இருந்தான்.

இருவரும் ஆஸ்பத்திரியிலும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு சிரித்த முகத்துடனே காட்சியளித்தார்கள்.

‘சாந்தினிக்கு ஆப்ரேஷன் தான் பண்ணனும்’ என்று சொல்லி பிரசவ தேதி குறிக்கப்பட்டது.

ஆப்ரேஷன் அறைக்கு சாந்தினியை அழைத்துச் செல்ல அப்போது அவள் பாபுவின் கையை பற்றி பிடித்துக்கொண்டு ஒரு விதமான பயத்துடனே சென்றாள்.

பாபுவின் கண்களில் கண்ணீர் கசிய நின்று கொண்டிருந்தான். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தாயையும் பிள்ளையையும் கட்டிலில் கொண்டு வந்து போட்டார்கள்.

“அதான் குழந்தை பிறந்து விட்டது பாருங்கள். உங்கள் மனைவியும் குழந்தையும் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள்.” என்று மாமியார் மாமனார் உட்பட எல்லோரும் பாபுவை சமாதானப்படுத்தினார்கள்.

பாபு தன் குழந்தையையும் மனைவியையும் பார்த்துக் கொண்டே அங்கேயே இருந்தான்.

இரவு 8 மணி வந்தது.

மூத்த கொழுந்தியாளின் கணவர் பாபுவின் சகலை வந்தார்.

“வாங்க தம்பி காலையில இருந்த எதுவும் சாப்பிடாம நிக்கிறீங்க. அதான் உங்களுக்கு ஆம்பள புள்ள பொறந்து இருக்கு இல்ல. உங்க பொண்டாட்டியும் நல்லா இருக்காங்க. அப்புறம் ஏன் கவலைப்பட்டுக்கிட்டு சாப்பிடாம குளிக்காம இருக்கிறீங்க? வாங்க கடைக்கு போயிட்டு வருவோம்” என்று கூறி ஹோட்டலுக்கு அழைத்து சென்றார்.

ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே, “சாந்தினிக்கு உடம்பு சரியில்லை. நெஞ்சு வலிக்குது என்று சொல்கிறாள் அலட்டை சுழட்டையாக வருகிறாள்” என்று போன் வந்தது.

இருவரும் சாப்பிட்டது பாதி, சாப்பிடாதது பாதி என்று கையை கழுவி விட்டு இருவரும் ஓடினர்.

அங்கே அப்போது சிஸ்டர்கள் வந்திருந்தனர். சாந்தினிக்கு ஆக்சிஜன் எல்லாம் கொண்டு வரப்பட்டு என்ன என்னமோ செய்துவிட்டு “ஒன்றும் இல்லை எல்லாம் சரியா போயிடும் பயப்படாதீங்க” என்று சொல்லிவிட்டு போய்விட, சற்று தேவலையாக இருந்தது.

இரவு பத்தேகால் மணி. பாபு திண்ணையில் படுத்து உறங்க ஆரம்பித்தான்.

திரும்பவும் ஓடி வந்து எழுப்பினார் சகலை. பாபு வாரி சுருட்டி எழுந்து உட்கார்ந்தான்.

“என்ன என்ன ஆச்சு?”

” அந்த புள்ள ரொம்ப நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லுதுப்பா இங்க வா” என்று அழைத்துக் கொண்டு சென்றார்.

அதற்க்குள் மாமியார் ஓடிச் சென்று தூங்கிக் கொண்டிருந்த டாக்டரை எழுப்பி கூட்டிட்டு வந்திருந்தார்.

மூத்த கொழுந்தியாள் சாந்தினியை மார்போடு சாய்த்தபடி முதுகை தடவி கொடுக்க, டாக்டர் சாந்தினிய பரிசோதித்து கொண்டிருந்தார்.

அனைவரும் நின்று கொண்டிருக்கும்போது, டாக்டர் ஒரு ஊசியை எடுத்து போட்டார்.

அவ்வளவுதான் சாந்தினி ‘நறநற’வென்று பல்லை கடித்தாள். வாய் ஒரு பக்கம் கோணிக் கொண்டு போனது. கட்டிலுக்கு அருகே தன் எதிரே நின்றிருந்த கணவனின் வலது கரத்தை பற்றி இறுக பிடித்தாள் உயிர் பிரிந்தது.

இரவு ஒரு மணி.

பாபு தன் தலையில் அடித்துக் கொண்டு பைத்தியம் பிடித்தது போல் செய்வதறியாது அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான்.

மறுநாள் பிரேதத்தை அடக்கம் செய்துவிட்டு பாபு வீட்டிற்கு வர,
மாமியார் ஒரு பக்கம், மூத்த கொழுந்தியாள் ஒரு பக்கம் என்று ஆளுக்கு ஒரு பக்கமாக இருக்க,

மாமியார் பாபுவை பார்த்து “தம்பி எங்க புள்ளையைத்தான் அள்ளி கொண்டு வச்சிட்டோம். என் புள்ளை பெத்த புள்ளையாவது நாங்க வளர்க்கிறோம். அதையும் எங்கள விட்டு பிரிச்சு விடாதீங்க தம்பி!” என்று சொல்லி அழ பாபுவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

‘விறுவிறு’ என்று தெருவில் இறங்கி நடந்தான். பாபுவின் வாழ்க்கை கானல் நீராய் மாறியது.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

Visited 1 times, 1 visit(s) today