காராமணி (தட்டைப்பயறு) – ஏழைகளின் அமிர்தம்

காராமணி என்றதும் காரடையான் நோன்புக்கு படைக்கப்படும் அடை செய்வதற்கு பயன்படும் பயறு என்பதே என்னுடைய நினைவிற்கு சட்டென்று வருகிறது.

இதனை நாம் தட்டைப்பயறு, தட்டாம்பயறு என்றும் கூறுகிறோம். தட்டைப்பயறு, கத்திரிக்காய் உள்ளிட்டவைகளைக் கொண்டு செய்யப்படும் பயற்றுக் குழம்பு நம் ஊரில் மிகவும் பிரலமான ஒன்று.

இது வறண்ட நிலங்களிலும் செழித்து வளர்ந்து ஏழை மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் ஏழைகளின் அமிர்தம் காராமணி என்று அழைக்கப்படுகிறது.

இது அவித்து, குழம்பு, பொரியல், அவியல், துவையல் எனப் பலவகைகளில் சமைத்து உண்ணப்படுகிறது.

காராமணியின் வரலாறு

சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பயறு ஆப்பிரிக்காவில் முதலில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது.

கிமு 200 முதல் கிமு 300 ஆண்டிற்கு இடையில் இந்தியாவிலும் இது அறிமுகப்படுத்தப்பட்டது.

17-ம் நூற்றாண்டில் இது ஐக்கிய அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

பின் அங்கிருந்து தென்அமெரிக்காவிற்கு பரவிய இப்பயறு அங்கு நிலைப்பெற்று புகழ் பெற்றது.

தற்போது தெற்காசியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய இடங்களில் இது அதிகளவு பயிர் செய்யப்படுகிறது.

காராமணியின் அமைப்பு மற்றும் வளரியல்பு

காராமணியானது சுமார் 3 அடி உயரம் வளரும் அடர்ந்த புதர் செடிவகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.

இத்தாவரம் வறண்ட சூழலிலும், களர் மண்ணிலும் செழித்து வளரும் இயல்பினை உடையது.

இத்தாவரத்தின் வேர்முடிச்சுகளில் வாழும் பாக்டீரியாக்கள் வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தி மண்ணை வளமாக்குகின்றன.

இத்தாவரத்தின் பூக்கள் மணி வடிவில் வெள்ளை, இளம்சிவப்பு, மங்கிய மஞ்சள், ஊதா மற்றும் கருஊதா நிறங்களில் காணப்படுகின்றன.

 

காராமணி பூக்கள்
காராமணி பூக்கள்

 

இப்பூக்களிலிருந்து நீண்ட உருளைவடிவக் காய்கள் தோன்றுகின்றன. இக்காயானது 6-15 விதைகளைக் கொண்டுள்ளது.

 

காராமணி காய்கள்
காராமணி காய்கள்

 

 

அறுவடைக்கு தயார் நிலையில் காராமணி
அறுவடைக்கு தயார் நிலையில் காராமணி

 

விதையானது லேசாக வளைந்து சிறுநீரக வடிவில் 6-12 மிமீ நீளத்தில் கருப்பு, கிரீம் கலர், சிவப்பு, பச்சை, பழுப்பு, வெள்ளை நிறங்களில் காணப்படுகின்றன. இவ்விதைகள் ஐந்து ஆண்டுகள்வரை முளைக்கும் திறன் உடையவை.

 

காராமணி
காராமணி

 

காராமணி ஃபேபேசி என்ற இருபுற வெடிகனிவகையைச் சார்ந்த தாவர வகையாகும். இதனுடைய அறிவியல் பெயர் விக்னா உங்குயிகுலாட்டா என்பதாகும்.

காராமணியின் முழுதாவரமும், காயும், விதைகளும் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.

காராமணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

காராமணியில் விட்டமின் பி1(தயாமின்), பி9(ஃபோலேட்டுகள்) ஆகியவை மிகஅதிகளவும், பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்) ஆகியவை அதிகளவும், பி3(நியாசின்), பி2(ரிபோஃப்ளோவின்), சி ஆகியவையும் உள்ளன.

இதில் கால்சியம், இரும்புச்சத்து, செம்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகியவை அதிகளவும், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. பயோசனின் என்ற பைட்டோ நியூட்ரியன் காணப்படுகிறது.

மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவையும் அதிகமாக உள்ளன.

காராமணி மருத்துவப்பண்புகள்

நல்ல செரிமானத்தைப் பெற

காராமணியானது நார்ச்சத்தினை அதிகம் கொண்டுள்ளது. எனவே செரிமானத் தன்மையை மேம்படுத்துவதுடன் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமானப் பிரச்சினைகளையும் போக்குகிறது.

இதயநலத்தினை மேம்படுத்த

காராமணியில் காணப்படும் விட்டமின் பி1(தயாமின்) இதயநலத்தின் மேம்பட்டிற்கு பெரிதும் உதவுகிறது. இந்த விட்டமின் இதய செயலிழப்பை தடைசெய்கிறது.

மேலும் இப்பயறில் காணப்படும் பிளவனாய்டுகள் இதயம் நன்றாச் செயல்பட உதவுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்தானது உடலில் கொலஸ்ட்ரால் சேருவதைத் தடைசெய்வதோடு தமனிகளில் அடைப்புகள் ஏற்படா வண்ணம் உதவுகிறது.

நச்சு நீக்கம்

காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன. மேலும் இவை ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடைசெய்கின்றன.

இதனால் செல்களின் பிறழ்சி தடுக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இதில் காணப்படும் விட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

நல்ல தூக்கத்தினைப் பெற

காராமணியில் மெக்னீசியம் மற்றும் டிரிப்தோபன் குறிப்பிட்டளவு காணப்படுகிறது. மெக்னீசியம் மற்றும் டிரிப்தோபன் உடலின் சோர்வினைப் போக்கி நல்ல தூக்கம் ஏற்பட வழிவகை செய்கிறது.

தூக்கக் குறைபாடு உள்ளவர்கள் தூக்கச் செல்வதிற்கு சிறிது நேரத்திற்கு முன்பு காராமணியை உண்டால் நல்ல தூக்கத்தினைப் பெறலாம்.

அனீமியை தடுக்க

இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டால் அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும். காராமணியில் உள்ள இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து அனீமியைத் தடைசெய்கிறது.

இரத்த சிவப்பணுக்களின் அதிகரிப்பால் ஆக்ஸினை உடைய இரத்தம் உடல்உறுப்புகளுக்கு பாய்வதால் உடல் உறுப்புக்கள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்குகின்றன.

ஆரோக்கியமான உடல்எடை இழப்பிற்கு

காராமணியானது குறைந்தளவு எரிசக்தியையும், கொலஸ்ட்ராலையும் கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்தானது நல்ல செரிமானத்தைத் தூண்டுவதுடன் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகிறது.

இதனால் இடைவேளை உணவு உண்பது தடுக்கப்படுகிறது. இதனால் காராமணியை உண்டு ஆரோக்கியமான உடல்இழப்பினைப் பெறலாம்.

சருமம் பாதுகாப்பிற்கு

காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள், விட்டமின் சி, புரதம் ஆகியவை சருமம் மேம்பாட்டிற்கு உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் சருமம் முதிர்வதை தடைசெய்கிறது.

சருமம் எரிச்சல் மற்றும் புறஊதாக்கதிர் வீச்சு ஆகியவற்றிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இதில் காணப்படும் புரதச்சத்தானது பழுதான செல்களை சரிசெய்வதோடு புதிய திசுக்கள் வளரவும் உதவுகிறது. மேலும் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து சரும இளமையைப் பாதுகாக்கலாம்.

சர்க்கரை நோயினை நிர்வகிக்க

காராமணியில் காணப்படும் மெக்னீசியமானது கார்போஹைட்ரேடின் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் இதனை உண்ணும்போது இன்சுலின் சுரப்பினை சீராக்குகிறது. மேலும் இது உடல்சோர்வினை நீக்கி நல்ல தூக்கத்திற்கும் வழிவகை செய்கிறது.

எலும்புகளைப் பாதுகாக்க

காராமணியில் உள்ள கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை எலும்புகளின் பாதுகாப்பில் உதவுகிறது. எனவே இதனை உண்டு எலும்புகளைப் பாதுகாக்கலாம்.

அதிக அளவு காராமணியை உட்கொள்ளும்போது அது வாயுவைப் பெருக்கும். இதனால் வயிற்று வலி, வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம்.

காராமணியை வாங்கும்போது ஒரே சீரான நிறத்துடன் துளைகள் இல்லாத உடையாத பயறுகளைத் தேர்வு செய்யவும்.

காராமணியானது சூப்புகள், சாலட்டுகள், கேக்குகள், இனிப்புகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

குறைந்த விலையில் அதிக ஊட்டச்சத்துக்களை அள்ளித்தரும் ஏழைகளின் அமிர்தம் காராமணி உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.