டாப் 10 காற்று மாசடைந்த நாடுகள் 2022

டாப் 10 காற்று மாசடைந்த நாடுகள் 2022

சுவிஸ் நிறுவனமான ஐ.க்யூ.ஏர் சமீபத்தில் வெளியிட்ட ‘உலகளாவிய காற்றின் தரம்’ (Global Air Quality) ஆய்வின்படி இந்தியா உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டில் இந்தியாவின் இடம் ஐந்து என்பது குறிப்பிட்டத்தக்கது. கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் இந்தியா மூன்று இடங்கள் பின்தங்கியுள்ளது என்பது சற்று ஆறுதலான செய்தி.

இருந்தாலும், 2022-ல் உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள பாதுகாப்பு காற்று மாசுபாட்டின் அளவினைவிட இந்தியாவில் காற்று மாசுபாடு 10 மடங்கு அதிகமாக உள்ளது என்பது வருந்தத்தக்க விசயமாகும்.

உலகின் அதிக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின்

6 நகரங்கள் முதல் 10 இடங்களுக்குள்ளும்,

14 நகரங்கள் முதல் 20 இடங்களுக்குள்ளும்,

39 நகரங்கள் முதல் 50 இடங்களுக்குள்ளும்,

65 நகரங்கள் முதல் 100 இடங்களுக்குள்ளும் இடம் பெற்றுள்ளன.

உலகின் அதிக மாசடைந்த நகரங்களின் வரிசையில் பாகிஸ்தானின் லாகூர் முதல் இடத்தையும், சீனாவின் ஹோடான் இரண்டாவது இடத்தையும், இந்தியாவின் பிவாடி மூன்றாவது இடத்தையும், இந்தியாவின் தலைநகர் டெல்லி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.

2022-ல் உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள பாதுகாப்பு காற்று மாசுபாட்டின் அளவினைவிட டெல்லியில் காற்று மாசுபாடு 20 மடங்கு அதிகமாக உள்ளது.

இந்தியாவின் பெருநகரங்களில் காற்று மாசுபாட்டுப் பட்டியலில் டெல்லியை அடுத்து கொல்கத்தா இடம் பிடித்துள்ளது.

சென்னையில் காற்று மாசுபாட்டின் அளவானது பாதுகாப்பு அளவினைவிட ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பு காற்று மாசுப்பாட்டுக் காரணியான நுண்ணிய துகள்களின் (2.5µகி/கமீ) அளவானது ஒருஆண்டின் சராசரியாக ஒரு கனமீட்டருக்கு 5 மைக்ரோ கிராம் என்று அளவு நிர்ணயித்துள்ளது.

ஆனால் இந்தியாவில் ஆண்டின் சராசரியாக காற்றில் நுண்ணிய துகள்களின் அளவு ஒரு கனமீட்டருக்கு 53.3 மைக்ரோ கிராமாக உள்ளது.

இராஜஸ்தானின் பிவாடி நகரத்தில் உள்ள காற்று நுண்ணிய துகள்களின் அளவானது ஒரு கனமீட்டருக்கு 92.7 மைக்ரோ கிராமாக உள்ளது.

இந்தியாவில் காற்று மாசுபாடு நுண்ணிய துகள்களின் அளவில் 20-35% போக்குவரத்தால் உண்டாகிறது. தொழிற்சாலைகள், நிலக்கரி அனல்மின் நிலையங்கள், உயிரி எரிபொருட்களின் பயன்பாடு ஆகியவையும் காற்று மாசுபாட்டில் பெரும்பங்கு வகிக்கின்றன.

நொய்டா, காசியாபாத், குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய இடங்களில் காற்று மாசுபாடு கடந்த ஆண்டைவிடச் சற்று குறைந்துள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் காற்று மாசுபாடு அளவானது குருகிராமில் 34%, ஃபரிதாபாத்தில் 21% டெல்லியில் 8% குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாப் 10 காற்று மாசடைந்த நாடுகள் 2022 பட்டியல்

வ. எண்நாடுஅளவு
1சாட்89.7µகி/கமீ
2ஈராக்80.1µகி/கமீ
3பாகிஸ்தான்70.9µகி/கமீ
4பஹரைன் 66.6µகி/கமீ
5வங்காளதேசம்65.8µகி/கமீ
6புர்கினா பாசோ63.0µகி/கமீ
7குவைத்55.8µகி/கமீ
8இந்தியா53.3µகி/கமீ
9எகிப்து 46.5µகி/கமீ
10தான்சானியா46.0µகி/கமீ

2022-ல் 131 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் மேற்கொண்ட உலகின் காற்று தரம் பற்றிய ஆய்வில், ஆறு நாடுகள் மற்றும் ஏழு பிரதேசங்கள் உட்பட மொத்தம் 13 இடங்கள் மட்டுமே ஆரோக்கியமான காற்றினைக் கொண்டுள்ளாத தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை ஆஸ்திரேலியா, எஸ்தோனியா, பின்லாந்து, கிரெனடா, ஐஸ்லாந்து, நியூசிலாந்து ஆகிய ஆறு நாடுகள் மற்றும் குவாம், புவெர்ட்டோ, ரிகோ உட்பட பசிபிக் மற்றும் கரீபியனில் உள்ள ஏழு பிரதேங்கள் ஆகியவை ஆகும்.

மேற்கூறிய 13 இடங்களும் உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த பாதுகாப்பு அளவான (காற்று மாசுபாடு நுண்ணிய துகள்கள்) 5 µகி/கமீ அளவினையோ அல்லது அதற்கு குறைவான அளவினையோ கொண்டுள்ளன.

உலகில் அதிகம் காற்று மாசுபாடு அடைந்த நாடுகளில் முதல் ஏழு நாடுகள் 50µகி/கமீ (காற்று மாசுபாடு நுண்ணிய துகள்கள்) அளவினைக் கொண்டுள்ளன என்பது எல்லோருடைய கவனத்திலும் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று.

மேற்காணும் ஆய்வில் காற்று மாசுபாடு நுண்ணிய துகள்களின் அளவே ஆய்விற்கு முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

காரணம் நுண்ணிய துகள்களை நுகரும்போது அவை நுரையீரலின் திசுக்களின் வழியாக இரத்த ஓட்டத்தில் கலந்து விடும். இதனால் ஆஸ்துமா, இதயநோய் மற்றும் ஏனைய சுவாசக் கோளாறுகள் உண்டாகும்.

தொகுப்பு: வ.முனீஸ்வரன்