குடிநீர்- நீருடன் ஓர் உரையாடல் 50

மதியம் 12.40 மணி. வெயில் உக்கிரத்தில் இருந்தது.

பேருந்திலிருந்து இறங்கியபோதே எனக்கு தாக உணர்வு மேலெழுந்தது. முன்னதாக நான் எடுத்துச் சென்றிருந்த நீரும் பேருத்தில் வரும்போதே குடித்து காலியாக்கி விட்டேன்.

தாகம் எடுத்ததால், ′பழரசம் குடிக்கலாமா அல்லது புட்டி நீர் வாங்கி அருந்தலாமா′ என எண்ணினேன். ′சரி வீட்டிற்கு சென்று நீர் அருந்தலாம்′ என்று முடிவெடுத்து நடக்கத் தொடங்கினேன்.

பாதி தூரம் கடந்திருப்பேன். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தலையிலிருந்து வியர்வை முகம் வழியாக வழியத் தொடங்கியது. எனது தாகம் மேலும் அதிகரித்தது.

நான் வைத்திருந்த நீர் புட்டியை எடுத்து அதில் ‘நீர் கொஞ்சமாவது இருக்கிறதா/’ என்று பார்த்தேன். நீர் துளிகள் கொஞ்சம் கூட இல்லை. வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகமான உடல்சோர்வினை அப்பொழுது உணர்ந்தேன்.

இன்னும் சற்று தூரம் நடந்தால் ஒரு கடை இருக்கிறது. அங்கு புட்டி நீர் வாங்கி விடலாம் என நினைத்துக் கொண்டு விரைவாக நடந்தேன்.

ஆனால் அந்த கடை மூடியிருந்தது. அதற்கு மேல் வேறு எங்கும் கடைகள் இல்லை. எனக்கு ஏமாற்றமே. நடந்தால் இன்னும் சில நிமிடங்களில் வீடு சென்றடையலாம். எனினும் தாகம் என்னை வாட்டியதால் எஞ்சிய தூரம் கடப்பதே எனக்கு சிரமமாக இருந்தது.

எப்படியோ நடந்து வீடு வந்து சேர்ந்தேன். வீட்டு அழைப்பு மணி பொத்தானை அழுத்தினேன். அப்பா உட்கதவை திறக்க சில நொடிகள் ஆனது. பின்னர் வெளியே வந்து ″வா..″ என்றபடி வெளி இரும்புக் கதவின் தாழ்பாளைத் திறந்தார்.

சட்டெனெ வீட்டிற்குள் சென்று ஒரு குவளையில் குடிநீர் பிடித்து முழுவதுமாக குடித்தேன். சற்றே சோர்வு நீங்கியது. எனினும் பசி எடுத்தது.

அம்மா சமைத்துக் கொண்டிருந்தார். ″சாப்பாடு பன்னிட்டீங்களா?” என்றேன்.

″பத்து நிமிஷம்பா. சாம்பார் கொஞ்சம் கொதிக்கணும்″ என்றார்.

சோர்வாக இருந்ததால் ஒரு லோட்டாவில் நீர் எடுத்துக் கொண்டு எனது அறைக்கு வந்து அமைதியாக அமர்ந்தேன்.

அடுத்து அம்மா ஒரு லோட்டாவில், குளிர்ந்த மோர் எடுத்து வந்து மேசையில் வைத்தார்.

சிறிதளவு மோரைக் குடித்தேன்.

நெற்றியில் இருந்து சில வியர்வை துளிகள் லோட்டாவில் இருந்த குடிநீரில் சொட்டியது.

″என்ன சார் இன்னிக்கு ரொம்ப சோர்வா இருக்கீங்க?″ – கனிவான குரல் கேட்டது.

″நீரா?″ என்றேன்

″ஆமாங்க. சொல்லுங்க. என்னாச்சு?″

″வீட்டுக்கு வரும்போது தாகம் அதிகமா எடுத்துச்சு. வீட்டுக்கு வந்து நீர குடிக்கற‌துக்குள்ள ரொம்ப கஷ்டமா போச்சி. எனக்கு இப்படி ஆனதே இல்ல.″

″சார் வர்ற வழியில நீரே கிடைக்கலையா?″

″இல்ல. வீட்டுக்கு வந்துடலாமுன்னு நினைச்சேன். பாதி தூரம் வந்தப்ப தாகம் ரொம்ப அதிமாயிடுச்சு. குடிநீர் வாங்க கடையும் இல்ல.″

″குடிநீரா?″

″ஆமா, குடிநீரத்தான் குடிக்க முடியும்″

″ஓஓ.. வீட்டுல இருக்கிற குழாயில நீர் வருதே, அந்த நீரக் குடிக்க மாட்டீங்களா?″

″ஆஆ.. அத குடிக்க முடியாது. பயங்கரமா உப்பு கரிக்கும்.″

″என்ன சொல்றீங்க! பாக்கறதுக்கு தெளிவாத் தானே இருக்கு?″

″பாக்கறதுக்கு சுத்தமா இருந்தா மட்டும் அந்த நீரக் குடிக்க முடியாது.″

″அப்ப குடி நீர்னா என்ன?″

″நீர் சுத்தமாவும் சுகாதாரமாவும் இருக்கணும். அத குடிச்சா எந்த நோயும் வரக்கூடாது. அதுக்குப் பேரு தான் குடிநீர். குடி நீருக்கென, தரக் கட்டுப்பாட்டு வரையறைகளும் இருக்குது.″

″சரிசரி. அப்ப எல்லா நீரையும் குடிக்க முடியாதுங்கிறீங்க. அப்படித்தானே?″

″ஆமா″

″ஏன் சார்?″

″நான் தான் சொன்னேனே குடி நீருக்குன்ணு சில வரையறைகள் இருக்குன்ணு″

″எனக்கு புரியலையே″

″சரி, குடிநீருல தூசி எதுவும் இருக்க கூடாது. நீர் நிறமற்றதா இருக்கணும். எவ்வித தீங்கிழைக்கும் வேதிச்சேர்மங்களும் இருக்க கூடாது. அத்தோட நோய்க் காரணிகளான நுண்ணுயிரி, வைரஸ் போன்றவையும் இருக்க கூடாது. அசுத்தமான குடிநீர குடிச்சா உடல் நலக்கேடு ஏற்படும்.″

″என்ன சார் சொல்றீங்க!″

″ஆமாம். அசுத்தமான நீரால காலரா, வயிற்றுப்போக்கு, ஹெபடைடிஸ் ஏ, டைபாய்டு போன்ற நோய்கள் பரவலாம். நீரில் வாழும் அல்லது இனப்பெருக்கம் செய்யும் பூச்சிகளால டெங்கு போன்ற நோய்களும் பரவும். கடுமையான நோய்கள் மூலமா உயிருக்கே ஆபத்து கூட ஏற்படலாம்.″

″ஓ, குடி நீர் சுத்தமா இருத்தா தான் எல்லோரும் ஆரோக்கியமா இருப்பாங்களா?″

″நிச்சயமா. அத்தோட உணவு சமைப்பதற்கும், வீட்டு உபயோகத்திற்கும், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் போதும், நீர் சுத்தமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கணும். மேலும் சுத்தமான நீர் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் இருக்கணும். அப்ப தான் ஒரு சமூகத்தின் பொருளாதாரமும் உயரும்.″

″பொருளாதாரம் உயருமா?″

″ஆமாம். உலகத்துல பல பகுதிகள்ல சுத்தமான குடி நீர் கிடைக்கிறதில்ல. சில பகுதிகள்ல வெகு தூரம் சென்றுதான் மக்கள் குடிநீர எடுக்க வேண்டிய நிலை இருக்கு.

நீர பெருவதற்கே அவங்க அதிக நேரத்தையும் உடல் உழைப்பையும் செலவழிக்கிறாங்க. இதுவே, குடிநீர் எளிதா கிடைச்சுதுன்னா, நீர் எடுக்கும் நேரமும் உடல் உழைப்பும் குறையும்.

இதனால அவங்க ஊதியம் ஈட்டக் கூடிய மற்ற வேலைக்கு போகலாம். குடும்பங்களோட பொருளாதாரம் உயர்ந்துச்சுன்னா, அந்த சமூகத்தோட பொருளாதாரமும் உயருமே″

″சரிங்க. சுத்தமான குடிநீர் கிடைச்சா சுகாதாரம் இருக்கும். பொருளாதாரமும் உயரும். அப்ப மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியா இருப்பாங்க தானே?″

″ஆமாம் ஆமாம்.″

″நல்லது சார். கடைசியா எனக்கு சில கேள்விகள் இருக்குது. கேட்கட்டுமா?″

″கேளு″

″உலகத்துல பல பகுதிகள்ல சுத்தமான குடி நீருக்கு தட்டுப்பாடு இருக்குது. மேலும் நீர் சூழல்களும் மாசு அடைஞ்சிருக்கு. இதுக்கெல்லாம் காரணம் என்ன சார்?”

சில நொடிகள் அமைதியாக இருந்தேன். பின்னர், ″முக்கியமா மனிதர்களாகிய எங்களோட செயல்பாடுகள் தான்″ என்றேன்.

″சார், நான் உங்களுக்கு, அதாவது மனிதர்களுக்கு நல்லது செய்யுறேன். நீங்க ஆரோக்கியமா வாழ்வது முதல் அன்றாட செயல்களுக்கு எல்லாமே நான் பயன்படுறேன். இதெல்லாம் நீங்க தான் எனக்கு சொன்னீங்க.

ஆனா, என்ன பயன்படுத்தியப் பிறகு, கழிவு நீரா என்ன வெளியேத்துறீங்க. இதுக்கூட பரவாயில்ல. ஆனா, விஞ்ஞான வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, நவீன உலகம்ணு சொல்லி, பலவிதமான மாசுக்கள என்னோட சேர்த்து என்ன அசுத்தமாக்குறீங்க.

இதனால என்ன நம்பி இருக்கும் தாவரங்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் ஏற்படும் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுந்தான்னு நினைக்கிறீங்களா?″

நீரின் இந்த கேள்வியினை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. திகைத்தேன். இப்போது எனக்கும் மீண்டும் சற்று வியர்த்தது.

பிறகு, ″மாசுபட்ட நீர சுத்தம் செய்யறதுக்கும் முறைகள் இருக்கு. இன்னும் அவற்றோட திறன அதிகரிக்க முயற்சிகள செய்யுறாங்களே″ என்றேன்.

″சார் நீங்களே நீர மாசுபடுத்துவீங்க, நீங்களே மாசுக்கள நீக்குவதற்கு முயற்சியும் பண்ணுவீங்க. இடையில நீர் மாசுக்களால பிற உயிரினங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுது. அத்தோட, புதுசு புதுசா நீர் மாசுக்கள் பெருகிகிட்டும் இருக்கு.

மனிதர்கள் நீர மாசுபடுத்தாம இருந்தா, எல்லோருக்கும் நல்லது தானே?″

நான் அமைதியாக இருந்தேன்.

″சார் கோச்சிகிட்டீங்களா? சொல்லுங்க சார்?″ என்று கனிவுடன் நீர் கேட்டது.

″இல்ல.. இல்ல நீ கேட்டதுல தப்பு இல்லையே″

அப்பொழுது, ″சார் நான் ஒரு சிரிப்பு துணுக்கு சொல்றேன்″ எனக் கூறி நீர் ஒன்றைச் சொன்னது. ஆனால், நீர் சொன்னதில் சிரிப்பு எதுவும் இல்லை. அதுவே எனக்கு சிரிப்பை ஏற்படுத்தியது.

″ஆம் சிரிச்சிட்டீங்களா.. இப்ப தான் எனக்கு மகிழ்ச்சி″ என்றது நீர்

நானும் இயல்பு நிலைக்கு திரும்பினேன். ″என்ன புதுசா? சிரிக்க வைக்க முயற்சி செய்யுற?″ என்றேன்.

″நான் கடைசியா உங்க கிட்ட பேசுறேன். இப்ப ஏன் சங்கடத்தோட போகணும். நம்ம கடைசி உரையாடல் மகிழ்ச்சியா இருக்கட்டுமே″ என்றது நீர்.

அந்நொடி அதிர்ச்சி அடைந்தேன். “என்ன சொல்ற? கடைசி சந்திப்பா? என்மேல உனக்கு கோவமா? சொல்லு?″ என்றேன்.

″உங்க மேல எனக்கு எந்த கோபமும் இல்லங்க. நான் பூமிய விட்டு புறப்பட வேண்டிய நேரம் வந்துடிச்சு″ என்றது நீர்.

″நீ சொல்றது எனக்கு புரியல″

″சார் நீருக்கு வயதிருக்குன்னு நீங்க ஒரு முறை சொன்னீங்க. நியாபகம் இருக்கா?″

″ஆமா″

அந்த வகையில என்னோட வயது இப்ப முடியுது. சார், நான் முதல்ல பார்த்த உலகத்துக்கும் இப்ப பார்க்கும் உலகத்துக்கும் அதிக வித்தியாசம் இருக்கு. குறிப்பா நீர் மாசுபாடு ஏற்பட்டிருக்கு.

நல்லா இருந்த நீர் மாசுபட்டு, அதனால எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுறத பார்த்தப்போ எனக்கு கஷ்டமா இருந்திச்சு. நான் பூமிய விட்டுச் செல்றதுக்கு முன்னாடி என்னோட ஆதங்கத்த மனிதர்களிடம் வெளிப்படுத்தனும்ணு தோனிச்சு.

அப்பதான் உங்கள ஒருநாள் சந்திச்சேன். நீங்களும் என்ன பற்றிய தகவல்கள சொன்னீங்க. எனக்கும் அத கேட்பதுல ஆர்வமா இருந்துச்சு. அதனால அவ்வப்போது வந்து உங்களோட பேசினேன்.

இப்ப இறுதி நேரம் வந்துடிச்சு. நானும் என்னோட மனக்குறைய சொல்லிட்டேன். நீர் நிலைகள தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் வைப்பது உங்க கடமை. அதாவது மனிதர்களோட கடமை. அத செய்வீங்கன்ணு நம்புறேன்.″

″சரி. ஆனா நீ போகணுமா? பூமியிலேயே இருக்கலாமே″ என்றேன்.

″சார் தொடக்கம்னு ஒன்னு இருந்தா அதுக்கு முடிவும் இருக்கணும்ல. அந்த வகையில நான் புறப்பட வேண்டிய நேரம் வந்துடிச்சு. மொத்தத்துல உங்களோட நான் பேசியதுல எனக்கு பெரும் மகிழ்ச்சி தான். உலகம் மகிழ்ச்சியா இருக்க எனது வாழ்த்துகள். நான் புறப்படுறேன் சார்″ எனக் கூறி நீர் சென்றது.

அப்பொழுது உணவு உன்பதற்காக அப்பா என்னை அழைத்தார். உணவு உண்டேன். அன்று முழுவதும் ஒருவிதமான அமைதியான மனநிலையில் இருந்தேன்.

பிறகு நீருடன் பேசிய இடங்களுக்குச் சென்று நீரை பார்த்தேன். ஆனால் நீர் என்னிடம் பேசவே இல்லை. என்னுடன் பேசி வந்த நீர் சென்று விட்டதே. இனி நீர் என்னிடம் பேசப் போவதில்லை என்பதை என் மனதிற்கு உணர்த்தினேன்.

ஆனால் நீரின் கேள்விகள் மட்டும் என் மனதில் எப்போதும் இருக்கும். என்னால் இயன்ற அளவு நீர் மாசுபாட்டை தவிர்க்கும் வழிமுறைகளை கடைபிடிப்பதோடு, நீர் வீணாவதையும் தவிர்ப்பேன் என்று உறுதி செய்து கொண்டேன்.

(உரையாடல் முடிந்தது)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

கழிவு நீர் – நீருடன் ஓர் உரையாடல் 49

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

நீங்கள் விரும்பக் கூடியவை

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.