குதிகால் வலி குறைக்கும் வழி

பூனை நடை நடந்து புன்சிரித்து மேடையில் வலம் வரும் மாடல்களைப் பார்த்து உயரமான குதிங்கால் செருப்பு அணிந்து ஒய்யார நடை நடக்க விரும்பும் யுவதியா நீங்கள்?

அப்படியானால் உங்களுக்கும், இந்த கட்டுரைக்கும் சம்பந்தம் இருக்கிறது. இன்றைக்கு ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களுள் முன்னிலையில் இருப்பது குதிகால் வலி.

குறைந்த பட்சம் நூற்றுக்கு இருபது பேராவது இதனால் அவதியுற்று இயல்பான வேலைகளைச் செய்ய முடியாமல் வலியின் வேதனையால் பாதிக்கப்படுகின்றனர்.

உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் ஆண்களைவிட பெண்களே குதிகால் வலியினால் அதிகம் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றன.

மனித உடலில் பாதத்தில் 26 எலும்புகள் உள்ளன. அவை நடக்கும் போது அல்லது ஓடும்போது மனித உடலின் எடை முழுவதையும் தாங்கும் அளவிற்கு ஏற்றவகையில் பாத எலும்புகள் வடிவமைப்பைப் பெற்றுள்ளன.

இந்தப் பாத எலும்புகளில் குதிகால் எலும்பானது மற்ற எலும்புகளைவிட பெரிதாகவும், உறுதியானதாகவும் அமைந்துள்ளது.

குதிகால் எலும்புடன் சேரும் பாதத்தில் உள்ள தசைநார்கள் அழற்சியடைவதால் பொதுவாக குதிகால் வலி உண்டாகிறது.

அதுமட்டுமில்லாமல் வேறுசில காரணங்களும் குதிகால் வலிக்கு காரணிகளாக அமைகின்றன.

அவை பாதஎலும்பு மூட்டுகளில் ஏற்படும் வாதநோய்கள், நோய்தொற்றுகள், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு, விபத்தினால் ஏற்படும் பாதிப்புகள், அதிக உடல்எடை, பாதநரம்புகளில் பாதிப்பு.

நோய்த்தொற்றின் காரணமாக பாதத்தின் தசைநாண்களில் வீக்கம் மற்றும் அழற்சி, கணுக்கால் மற்றும் பாதங்களில் உள்ள நரம்புகள் அழுத்தப்படுவது, பாதஎலும்புகளில் உண்டாகும் சிறுஎலும்பு முறிவுகள்.

எலும்புச்சிதைவு நோய், குதிங்கால், பாதங்களில் ஏற்படும் கட்டிகள், இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாகி படிமங்களாக பாதத்தில் படிவது, சர்க்கரை நோயினால் உண்டாகும் எலும்பு நரம்பு பாதிப்புகள், கீல்வாதம். மேற்கூறியவற்றினாலும் குதிகால் வலி ஏற்படலாம்.

இதைத்தவிர மிகமுக்கியமான மற்றொரு காரணமும் உண்டு. அது நாகரிகம் என்ற பெயரில் அதீத உயரத்திற்கு குதிகாலை உயர்த்தும் அளவிலான காலணிகளை அணிவதுதான்.

குதிகால் வலி நோய் அறிகுறிகள்

பாத எலும்புகளுக்கிடையே வீக்கம், தூங்கும்போது அல்லது ஓய்வுநிலையில் தாங்க முடியாத வலி, சிலநேரங்களில் காய்ச்சல், நடக்கும்போதும், பாதங்களை கீழ்நோக்கி அசைக்கும்போதும் சிரமம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

குதிகால் வலி நோய்க்கான பரிசோதனைகள்

எக்ஸ்-ரே

இரத்த பரிசோதனைகள்

MRI

CT – ஸ்கேன் ஆகியவை ஆகும்.

பொது மருத்துவ சிகிச்சையில் வலிகுறைப்பிற்காக மருந்துகள் மற்றும் Catrigo Steriod பயன்படுத்தப்படுகிறது. பாதிப்பின் தன்மையைப் பொறுத்து அறுவைசிகிச்சை சிலநேரங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

குதிகால் வலிக்கான இயன்முறை சிகிச்சை

பாதஎலும்புகளில் வலியைக் குறைப்பது, வலுக்குறைந்துள்ள கணுக்கால் பாததசைகளை வலுப்படுத்துவது, நரம்பு பாதிப்பினை சரிசெய்வது, நரம்பில் ஏற்படும் வலியைக் குறைப்பது, நடைத்தோரணையை சரிசெய்வது, நோயாளியின் அன்றாட நிகழ்வுகளை மேம்படுத்துவது. மேற்கூறியவைகளே குதிகால்வலிக்கு இயன்முறை சிகிச்சையின் நோக்கமாகும்.

இயன்முறை சிகிச்சை

குதிகால் எலும்பில் ஏற்படும் வலியினைக் குறைக்க Ultra Sound Therapy மற்றும் ஐஸ் தெரபி ஆரம்பநிலையில் உள்ள பாதிப்பிற்கு அளிக்கப்படுகிறது.

நாள்பட்ட வலியைக் கொண்ட நோயாளிகளுக்கு Short Wave Diathermy மற்றும் பாதம் முழுவதும் உள்ள வலியைக் குறைக்க மின்தூண்டுதல் சிகிச்சையான TENS சிகிச்சையானது அளிக்கப்படுகிறது.

தசைகளை வலுப்படுத்த கணுக்கால் மற்றும் பாததசைகளுக்கு உடலியக்கப் பயிற்சிகள் இயன்முறை மருத்துவரால் அளிக்கப்படுகிறது.

குதிகால் வலியால் பாதிக்கப்பட்டவர்கள் நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.

ஓடுவது, நீண்டநேரம் ஒரே இடத்தில் நிற்பது, கடினமான தரைப்பகுதியில் காலணிகள் இல்லாமல் நடப்பது போன்ற பாதத்திற்கு மிகுந்த அழுத்தம் தரும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

வலிகுறைய மிருதுவான காலணிகளை (MCR, MCP வகை காலணிகள்) அணிய வேண்டும்.

பெண்கள் குதிகால் உயர்த்திய நிலையில் உள்ள காலணிகளைத் தவிர்க்க வேண்டும்.

பாதஎலும்புகள் அழுத்தம் இல்லாமல் இருப்பதற்கும், வலியைக் குறைக்கவும் மருத்துவரின் ஆலோசனைப்படி பாதபட்டை அல்லது குதிகால்பட்டை அணிவது நல்ல பலனைத் தரும்.

ஒழுக்கமான நடத்தை எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு நடையில் ஒழுங்கும் முக்கியம்.

அதற்கு குதிகால் வலி வராமல் தவிர்ப்பதும், வந்துவிட்டால் உரிய இயன்முறை சிகிச்சைகளை செய்து கொள்வதும் அவசியம். உணர்ந்து நடந்தால் குதிகால் வலியின்றி குதித்து ஓடலாம்.

க.கார்த்திகேயன்

க.கார்த்திகேயன் அவர்கள்

க.கார்த்திகேயன்

தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர்.

ஆர். கே. இயன்முறை மருத்துவமனை மற்றும் புனர்வாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குநர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் 2007 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டுவரை உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் – ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இளையோர் இயன்மருத்துவப் பட்டம் (Bachelor of Physiotherapy), முதுநிலை உளவியல் ஆற்றுப்படுத்துதல் பட்டம்(M.S.,(Psychotherapy) படித்தவர்.

விளையாட்டு மருத்துவம் (Sports Medicine & Rehabilitation) ), மூட்டுவலிக்கான சிறப்பு சிகிச்சை (Ligament Injuries & Rehabilitation) ஆகிய சான்றிதழ் படிப்புகளையும் படித்தவர்.

முகவரி :
க.கார்த்திகேயன்
46 ,மேலத்தெரு
வீரான நல்லூர்
காட்டுமன்னார் கோயில் -608301
கைபேசி: 9894322065

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.