நம் நாட்டில் அனைத்து மாநிலங்களின் மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகளில் பெரும்பாலான பகுதிகள் அனைத்திலுமே கொசுத் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் வந்திருக்கும் சூழ்நிலையில், கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவ ஆரம்பித்து விடக் கூடாது.
கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தில் கொசுக்கள் முக்கியமான எதிரி ஆகும்.
ஏனெனில் கொசுத் தொல்லையிலிருந்து தப்பிக்க மக்கள் குட்நைட், ஆல் அவுட், மார்ட்டின் மற்றும் எவ்வளவோ செயற்கைத் திரவங்களையும், புகை மூட்டம் மூலம் விரட்டியடிக்கக் கூடிய பவுடர், கொசுவர்த்திச்சுருள், ஊதுபத்தி போன்றவைகளையும் உபயோகிக்கின்றனர்.
இதனால் பலருக்கு ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட இத்தகைய கொசு விரட்டிகள் ஒத்துக் கொள்ளாமல், சுவாசப்பாதை விரைவில் பாதிக்கப்பட்டு தொண்டை கர கரப்பு, சளி, தொடர் இருமல், தும்மல், தலைவலி போன்றவைகளால் அவதிக்குள்ளாகின்றனர்.
குறிப்பாக வயோதிகர்கள், குழந்தைகள், பெண்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
இவர்கள் எளிதில் கொரோனாவால் பாதிக்கப் படுவார்களோ என்ற அச்சம் உருவாகிறது.
மூன்றாவது கொரோனா அலையை முற்றிலும் தவிர்ப்பது அரசின் கடமை.
முதலில் அனைத்து மாநிலங்களிலும், கொசுத் தொல்லைக்கு உடனடியாகத் தீர்வு காணத் தகுந்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
மக்களின் உடல் நலன் கருதி மத்திய அரசும் மாநில அரசுகளும் மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள் மூலம் அதிகரித்து வரும் கொசுத் தொல்லைக்கு, இடைவெளியுடன் கூடிய கால அளவில், மக்கள் வாழும் பகுதிகளில் அடிக்கடி கொசுக்களை ஒழிக்க மருந்து அடித்து, ஆங்காங்கே சேரும் பல்வேறு கழிவுகளை உடனுக்குடன் அகற்றி, நகரின் சுகாதாரச் சூழலைப் பேணிக் காக்க முன் வந்தாலே எப்பேற்பட்ட தொற்றும் எந்த சூழ்நிலையிலும் ஏற்படாது.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வட கிழக்குப் பருவ மழை வேகமெடுக்கும் முன்பே கொசுத் தொல்லைக்கு மத்திய, மாநில அரசுகளும், சம்மந்தப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகளும் போதிய எதிர்ப்புத் திறனற்ற மக்கள் அதிக அளவில் நம் நாட்டில் வாழ்வதை நினைவிற் கொண்டு நிரந்தரத் தீர்வு காண ஆவன செய்ய வேண்டும்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998