பதனீர்

கோடைக்கான குளிர்பானம் பதனீர்

கொளுத்தும் கோடை வெயிலுக்கு உடலுக்கும் மனத்திற்கும் உற்சாகத்தை கொடுக்கும் இயற்கை குளிர்பானம் பதனீர் என்றால் யாரும் மறுப்பு சொல்ல முடியாது.

இது லேசான துவர்ப்பு சுவையுடன் இனிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. இதனை பனை ஓலையில் பருகும்போது இதமாகவும், மணமாகவும் இருக்கும். பனையிலிருந்து கிடைக்கும் பதமான நீர் பதனீர் என்றழைக்கப்படுகிறது.

பதனீரானது பனை, தென்னை, கீத்துல் போன்ற மரங்களிலிருந்து பெறப்படுகிறது. இருப்பினும் பனை மரத்திலிருந்து பெறப்படும் பதனீரே சுவை மிகுந்தாக இருக்கிறது.

இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, பிலிபைன்ஸ், மெக்ஸிகோ, நைஜீரியா, காங்கோ, கென்யா, கானா உள்ளிட்ட உலகநாடுகள் பலவற்றில் பதனீர் பயன்பாட்டில் உள்ளது.

இந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்இந்தியாவில் பதனீரானது அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பதனீரை பனையிலிருந்து எடுத்துப் பருகுவது பராம்பரியமான ஒன்றாகும்.

பதனீரினை எடுக்கும் முறை

பனை மரத்திலிருக்கும் பாளை எனப்படும் மஞ்சரிப் பகுதியை நசுக்கியும், சீவியும் விடும்போது பாளையிலிருந்து சொட்டு சொட்டாக திரவம் வெளிப்படும். சுண்ணாம்பு தடவிய பானையில் இத்திரவம் சேகரிக்கப்படும்போது பதனீர் கிடைக்கிறது.

இதற்கு பதனீரில் இயற்கையாகவே உள்ள ஈஸ்டுகள் மற்றும் காற்று முக்கிய காரணிகள் ஆகும். சுண்ணாம்பு சேர்க்காத பனையில் இருந்து பெறப்படும் திரவம் கள் என்று அழைக்கப்படுகிறது.

பதனீரைப் பெறுவதில் பாளைகளை பதனீர் சுரக்க தயார்படுத்துவது என்பது இன்றியமையாத ஒன்றாகும். பொதுவாக பாளைகளின் வளர்திசுக்களை அழுத்தி விடுவதன் மூலமும், மொட்டுகளை சீவிவிடுவதன் மூலமும் பதநீரானது பெறப்படுகிறது.

முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பாளைகளை காலை 11.00 மணிக்கு முன்பாக எ வடிவ இடிக்கி கொண்டு நீளவாக்கில் அழுத்தி விடவேண்டும்.

ஆறு முதல் பன்னிரெண்டு நாட்கள் வரை அதாவது பதனீர் சுரப்பு தொடங்கும்வரை 2மிமீ அளவுக்கு பூமொட்டுகளை காலையில் 11.00 மணிக்கு முன்பும், மாலை 4.00 மணிக்கு பின்பும் நாள்தோறும் சீவியும் இடுக்கி கொண்டு அழுத்தியும் விடவேண்டும்.

திரவச்சுரப்பு ஆரம்பித்தவுடன் அழுத்துவதைத் தவிர்த்து சீவி மட்டும் விடவேண்டும்.

அகன்ற வாயினை உடைய நீர்த்த சுண்ணாம்பு தடவிய மண்சட்டிகளை சணல் அல்லது கயிறு கொண்டு பனங்கருக்குகளில் கிடைமட்டத்திற்கு 30 பாகைஅளவுக்கு கட்டித்தொங்க விட்டு மஸ்லீன் துணி கொண்டு மூடி பதநீரைச் சேகரிக்கப்படுகிறது.

நீர்த்த சுண்ணாம்பு தடவிய மண்சட்டிகளில் பதநீரானது சேகரிக்கப்படுவதால் கால்சியத்தின் அளவு உயர்ந்து அவற்றின் தரம் கூடுகிறது.

பொதுவாக 12-15 நாட்களில் பதநீர்சுரப்பு ஆரம்பமாகும். ஆரம்ப நாட்களில் குறைந்தளவே பதநீர் சுரப்பு இருக்கும். பதநீர்சுரப்பானது அதிகரிக்கத் தொடங்கியவுடன் காலை, மாலை இருவேளைகளிலும் பதநீரினைச் சேகரிக்கலாம்.

பாளை கட்டையாகும்வரை அதாவது காம்புப்பகுதி 10-15 செமீ நீளம் வரும்வரை பாளைகளை சீவிவிட்டு பதநீரினைச் சேகரிக்கலாம். நுனிமொட்டுகள் இல்லாத நிலையில் பாளையில் பதநீர்சுரப்பானது நின்றுவிடும்.

பதநீர்சுரப்பு நிற்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக இளம்பாளைகளை பதநீரினைச் சுரக்க தயார்படுத்த வேண்டும். ஒரு பனையில் ஒரே நேரத்தில் ஏழு பாளைகளை சீவி பதநீரினைச் சுரக்கச் செய்யலாம்.

பதனீரைப் பற்றிய தகவல்கள்

பதனீரை இறக்கும்போதுபதனீரை இறக்கும்போது

பதநீரானது ஆண் மற்றும் பெண் பனைகளிலிருந்தும் பெறப்படுகிறது. பெண் பனையானது 35-50 சதவீதம் வரை ஆண் பனையைவிட அதிகளவு பதனீரைச் சுரக்கிறது.

பொதுவாக பதனீரானது ஏப்ரல் முதல் ஜூலை வரை (90-130 நாட்கள்) எடுக்கப்படுகிறது. பதநீர் சுரப்பானது ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் குறைவாகவும், மே,ஜூன் மாதங்களில் அதிகமாகவும் இருக்கும்.

ஒரு பாளையிலிருந்து மூன்று முதல் ஐந்து மாதங்களுக்கு பதனீரானது எடுக்கப்படுகிறது. பாளைகளில் பதநீரைப் பெறுவதற்காக சில ஓலைகள் வெட்டி அப்புறப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு 30 சதவீத ஓலைகளை வெட்டிவிடுவதால் பதநீரின் விளைச்சல் மற்றும் பதநீர்சுரப்பு காலம் அதிகரிக்கும்.

பனையானது நடவு செய்த 12 முதல் 15 ஆண்டுகளில் பதனீரைக் கொடுக்க துவங்கும். நான்கு மாதங்களில் ஒரு பனையானது 100-200 லிட்டர் பதநீரினைக் கொடுக்கிறது.

பொதுவாக ஒரு பனையானது நாள்ஒன்றுக்கு குறைந்தஅளவாக ஒரு லிட்டரும், அதிகளவாக 12 லிட்டர் பதநீரினைக் கொடுக்கிறது. பதநீர் எடுக்கும் காலத்தில் மழைப்பொழிவு ஏற்பட்டால் பதநீரின் தரம் குறையும்.

பதனீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பதனீரில் விட்டமின் சி, பி1(தயாமின்), பி2(ரிஃபோப்ளோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்) போன்றவை உள்ளன. இதில் தாதுஉப்புக்களான கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம், இரும்புச்சத்து முதலியவை காணப்படுகின்றன.

மேலும் இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதச்சத்து, நார்ச்சத்து, இயற்கை சர்க்கரை, அமினோஅமிலங்கள், ஈஸ்டுகள் ஆகியவையும் உள்ளன.

பதனீரின் மருத்துவப் பண்புகள்

கோடை நோய்களுக்கு தீர்வு

கோடை காலத்தில் உடல்சூடு அதிகரித்து அம்மை, அம்மைக்கட்டு, நீர்க்கடுப்பு உள்ளிட்ட நோய்கள் உண்டாகின்றன. பதனீரினை அருந்தும்போது உடலின் வெப்பத்தினைக் குறைத்து குளிர்ச்சித் தருகிறது.

இதனால் கோடை கால நோய்களுக்கு பதனீரினை உண்டு நிவாரணம் பெறலாம். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பதநீரினை அருந்தும்போது நோயின் தீவிரம் குறைந்து விரைவில் குணமாகிவிடும்.

வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி பதனீரில் கலந்து அருந்த சீதக்கழிச்சல், இரத்தக்கடுப்பு, தொண்டைப்புண், வயிற்றுப்புண் ஆகியவை குணமாகும்.

கோடையில் புத்துணர்ச்சியைப் பெற

பனை, தென்னை போன்ற மரங்கள் மின்னலில் அதிகப்படியான மின்சக்தியை உள்வாங்கி பூமியில் உள்ள உலோகங்களை அயனிகளாக மாற்றி உறிஞ்சி நுண்ணூட்டச்சத்துக்களாக மாற்றி பதனீராகவும், இளநீராகவும் தருகின்றன.

வெயிலில் சென்றுவிட்டு நாம் பதனீரை அருந்தும்போது நம்மைவிட்டு நீங்கிய தாதுஉப்புக்கள், விட்டமின்கள் ஆகியவற்றை நாம் திரும்பப்பெற்று புத்துணர்ச்சியை உணர்கிறோம்.

பதனீரில் உள்ள தாதுஉப்புக்கள் மின்பகுளிகளாகச் செயல்பட்டு உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவினை சரியான அளவில் சமநிலைப்படுத்துகின்றன.

கண்பார்வை மேம்பட

பதனீரில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டான விட்டமின் சி மற்றும் விட்டமின் பி1 (தயாமின்) போன்றவை கண்பார்வையை மேம்படச் செய்கிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் கண்பார்வையை மேம்படச் செய்ய பதனீரானது அருந்தப்படுகிறது.

இதயநோய்களைத் தடுக்க

பதனீரில் உள்ள பொட்டாசியம் உயர்இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்கள் உண்டாவது தடுக்கப்படுகிறது.

பதநீரினை குறிப்பிட்டளவுதான் பருகவேண்டும். அளவுக்கதிகமாக பதநீரினை குடிக்கும்போது கல்லீரலில் பாதிப்பினை உண்டாக்கிவிடும்.

புற்றுநோயினைத் தடுக்க

பதநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டான விட்டமின் சி மற்றும் விட்டமின் பி2 (ரிஃபோப்ளோவின்) போன்றவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினைத் தடைசெய்து புற்றுநோய் உருவாவதைத் தடுக்கிறது.

ஆரோக்கியமான கேசம், சருமம் மற்றும் நகப் பராமரிப்பிற்கு

பதனீரில் உள்ள விட்டமின் பி தொகுப்புகள் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை கேசம், சருமம் மற்றும் நகப் பராமரிப்பில் அதிகளவு உதவுகின்றன.

இரும்புச்சத்தானது உடலில் உள்ள செல்களின் சீரான உருவாக்கம், வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மேலும் உடலில் உள்ள காயங்களை விரைந்து ஆற்றி ஆரோக்கியமான திசுக்களின் வளர்ச்சி நடைபெற பதனீர் உதவுகிறது. சொறி, சிரங்கு உள்ளிட்ட சருமநோய்களை பதநீர் குணமாக்குகிறது.

பாலூட்டும் தாய்மார்களுக்கு

பதனீரானது பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கிறது. மேலும் இதில் நார்ச்சத்தானது கருவுற்ற பெண்கள், பாலூட்டும் பெண்களுக்கு உண்டாகும் மலச்சிக்கல், வயிற்றுப்புண் போன்றவற்றையும் குணப்படுத்துவதோடு உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது.

பதனீரானது பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு எனப்படும் அதிகஇரத்தப்போக்கு நோயினை சரிசெய்கிறது.

பற்கள் மற்றும் எலும்புகள் பலம்பெற

பதனீரில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து போன்றவை பற்கள் மற்றும் எலும்புகளை பலம் பெறச் செய்கிறது. பதனீரானது ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதை தடைசெய்வதோடு பற்களின் பழுப்பு நிறத்தினையும் மாற்றுகிறது.

பதனீரைப் பயன்படுத்தும் முறை

பதனீரானது குறைந்த அளவு நேரமே கெட்டுப்போகாமல் இருக்கும். எனவே மரத்திலிருந்து இதனை இறக்கியவுடன் குடித்துவிடுவதே நல்லது.

பதநீரில் சுண்ணாம்பு சேர்த்து இருப்பதால் இதனை அறையின் வெப்பநிலையில் வைத்திருந்தால் மூன்று மணி நேரத்திற்குள் குடித்து விடவேண்டும்.

குளிர்பதனப் பெட்டியில் பதனீரைப் பதப்படுத்தி 15 மணி நேரம் வரைப் பயன்படுத்தலாம்.

குளிர்பதனப் பெட்டியில் பதப்படுத்திய பதனீர்குளிர்பதனப் பெட்டியில் பதப்படுத்திய பதனீர்

பதனீரானது பெரும்பாலும் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. பதனீரினைக் கொண்டு பதனீர்ச்சோறு, பதனீர்க்கொழுக்கட்டை, பதனீர்ப்பொங்கல், பதனீர்ப்பாயாசம் ஆகியவை சமைக்கப்படுகின்றன.

பதனீரில் இருந்து மதிப்புகூட்டுப்பொருளான கருப்பட்டி, பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனந்தேன் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.

இயற்கையின் அற்புதமான பதனீரினை அளவோடு பருகி வளமான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.