கோதுமை இன்றைக்கு உலக மக்களின் முக்கிய உணவுப் பொருளாகும். இது உலகில் அதிகம் பயிர் செய்யப்படும் பயிர்களில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது.
முதலில் கோதுமையானது பச்சையாக அப்படியே உண்ணப்பட்டது; தற்போது வறுத்தும், அவித்தும், மாவாக்கியும் உண்ணப்படுகிறது.
பொதுவாக கோதுமையானது உயர்நிலப்பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது.
தானிய வகையைச் சார்ந்த இது புல்வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இக்கட்டுரையில் கோதுமை எனக் குறிப்பிடப்படுவது முழுக் கோதுமை ஆகும்.
கோதுமையானது விளையும் காலத்தை பொறுத்து குளிர்கால கோதுமை மற்றும் வசந்தகால கோதுமை எனவும், அதனுடைய கட்டமைப்பினை வைத்து கடினமானது, மென்மையானது எனவும் பிரிக்கப்படுகிறது.
கோதுமையானது வெள்ளை மற்றும் ஆம்பர் கலந்த சிவப்பு உள்ளிட்ட வண்ணங்களில் காணப்படுகிறது.
கோதுமை மனிதனுக்கான தாவரப் புரதம் ஆகும்.
எளிதாக பயிரிடப்படும் தன்மையும், நீண்டநாட்கள் களஞ்சியப்படுத்தும் தன்மையும் ஆகியவை கோதுமை, மனிதனின் முக்கிய உணவுப் பொருளாக மாறுவதற்கு முக்கியக் காரணங்களாகும்.
கோதுமை என்பது உலகம் எங்கும் பயன்படுத்தக்கூடிய முக்கியமான தானியம் ஆகும். இது டிரைடிக்கம் என்னும் புல்வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இதனுடைய அறிவியல் பெயர் டிரைடிக்கம் அஸ்டிவைவம் என்பதாகும்.
கோதுமையானது தவிடு என்ற வெளிப்பகுதியையும், ஜெர்ம் என்னும் அடுத்த பகுதியையும், வித்து எனப்படும் நடுப்பகுதியையும் கொண்டுள்ளது.
கோதுமையின் வரலாறு
இது பழமையான தானியம் ஆகும். இது தென்மேற்கு ஆசியாவில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பே உணவாக இது பயன்படுத்தப்பட்டது.
கிமு 7000-ல் நம் முன்னோர்கள் எவ்வாறு கோதுமையை பயிர் செய்து உணவுப்பொருளாகப் பயன்படுத்துவது என்பதைக் கண்டறிந்தனர்.
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கோதுமையை மாவாக்கி உண்ணும் பழக்கம் உருவானது.
பல நாகரிகங்களில் இது சமயம் மற்றும் விழாக்களின் போது முக்கியத்தும் வாய்ந்ததாக இருந்தது.
கிரேக்க, ரோம, சுமேரிய மற்றும் பின்னிஷ் ஆகிய நாகரிகங்களில் கோதுமைக்கு ஆண் மற்றும் பெண் கடவுள்கள் இருந்தனர்.
15-ம் நூற்றாண்டில் உலகின் மேற்குப்பகுதியில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
உலகின் மூன்றில் ஒரு பகுதியினர் கோதுமையை உணவாகக் கொண்டுள்ளனர்.
இன்றைக்கு ஐக்கிய அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரான்ஸ், கனடா ஆகியவை கோதுமையை அதிகளவில் உற்பத்தி செய்கின்றன.
முழுக் கோதுமை
முழுக் கோதுமை என்பது பட்டை தீட்டாதது. அதாவது கோதுமையின் வெளித்தோல் முழுவதும் நீக்கப்படாதது.
கடையில் கோதுமை மற்றும் கோதுமை தொடர்புடைய பொருட்கள் வாங்கும்போது பட்டை தீட்டப்பட்டது (Refined) என்பதைத் தவிர்க்க வேண்டும்.
கோதுமையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
முழுக்கோதுமையில் சிறப்பான கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை உள்ளன.
இதில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், கந்தகம், குளோரின், ஆர்சனிக், சிலிக்கான், மாங்கனீசு, துத்தநாகம், அயோடின், செம்புச்சத்து போன்ற தாதுஉப்புகள் காணப்படுகின்றன.
மேலும் இதில் கரோடினாய்டுகள் மற்றும் பீட்டா கரோடீன்கள் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிஜென்டுகள், அமினோ அமிலங்கள் அதிகளவு உள்ளன.
இதில் விட்டமின் பி1 (தயாமின்), பி3 (நியாசின்), பி6 (பைரிடாக்ஸின்) ஆகியவை அதிகளவும், பி2(ரிபோஃப்ளோவின்), பி9 (ஃபோலேட்டுகள்) ஆகியவையும் காணப்படுகின்றன.
கோதுமையின் ஜெர்ம் பகுதியில் விட்டமின் இ அதிகளவு உள்ளது. மேலும் இப்பகுதியில் பி-த்தொகுப்பு விட்டமின்கள், மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்றவையும் காணப்படுகின்றன.
கோதுமையின் ஜெர்ம் பகுதியிலிருந்து தயார் செய்யப்படும் எண்ணெயானது உடல் பலத்தை அதிகரித்து ஆயுளை நீட்டிக்கிறது.
கோதுமையின் வெளிப்பகுதியில் உள்ள தவிடானது லிக்னென், பெர்லிக் அமிலம், பைடிக் அமிலம், லுடீன், பிளவனாய்டுகள், சபானின் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
கோதுமை – மருத்துவப்பண்புகள்
ஆற்றலினைப் பெற
முழுக்கோதுமையில் உள்ள பி-த்தொகுப்பு விட்டமின்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலினைத் தருகின்றன. இதில் காணப்படும் சிறப்பான கார்போஹைட்ரேட் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகிறது. இதனால் நீண்ட நேரத்திற்கு உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது.
கண்களின் பாதுகாப்பிற்கு
முழுக்கோதுமையில் விட்டமின் இ, நியாசின், துத்தநாகம் போன்றவை கண்தசை அழற்சி நோய், கண் புரை நோய் ஏற்படாமல் தடுக்கின்றன. இதில் காணப்படும் லுடீன் கண்பார்வை பலப்படுத்துகிறது.
கேசப் பராமரிப்பிற்கு
முழுக்கோதுமையில் உள்ள துத்தநாகச்சத்து கேச வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் கேசம் சுற்றுசூழலால் பாதிப்படைவதையும் தடுக்கிறது. ஆகையால் முழுக்கோதுமையை உணவில் சேர்த்து கேசத்தைப் பராமரிக்கலாம்.
சருமப் பராமரிப்பிற்கு
முழுக்கோதுமை செலீனியம், விட்டமின் இ, துத்தநாகம் உள்ளிட்டவைகள் சருமப் பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
முகப்பரு, சூரிய வெப்பப்பாதிப்பு, தோல் புற்றுநோய் ஆகியவற்றையும் இது தடைசெய்கிறது. இதில் உள்ள நார்ச்சத்தானது செரிமான மண்டலத்தை நன்கு செயல்படச் செய்வதோடு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.
இதனால் சருமம் இளமையாகவும், பளபளப்பாகவும் இருக்கச் செய்கிறது. எனவே முழுகோமையை உண்டு சருமத்தை பராமரிக்கலாம்.
ஆரோக்கியமான உடல்வளர்ச்சிதை மாற்றத்திற்கு
முழுகோதுமையானது செரிமானத்தை நன்கு நடைபெற ஊக்குவித்து ஆரோக்கியமான உடல்வளர்ச்சிதை மாற்றத்திற்கு வழிவகை செய்கிறது.
நார்ச்சத்து நீக்கப்பட்ட கோதுமையானது உடல்எடையை அதிகரிப்பதோடு இன்சுலின் சுரப்பைத் தடுக்கும் பொருட்களையும் உற்பத்தி செய்கிறது.
ஆதலால் முழுகோதுமையை உண்டு ஆரோக்கியமான உடல்வளர்ச்சிதை மாற்றத்தைப் பெறுவோம்.
கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு
முழுக்கோதுமையில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள், நார்ச்சத்தானது கல்லீரலில் உள்ள நச்சினை நீக்குகிறது. எனவே முழுகோதுமையை உண்டு கல்லீரலின் ஆரோக்கியத்தைப் பேணலாம்.
இதயநலத்தைப் பேண
முழுக்கோதுமையில் காணப்படும் என்ரோலேக்டான் என்னும் பொருள் இதயநோய் ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்தானது இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
மேலும் இரத்தத்தில் கொழுப்புக்கள் சேருவதைத் தடைசெய்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் தடுக்கப்படுகின்றன.
செரிமானப்பாதையின் ஆரோக்கியத்திற்கு
முழுக்கோதுமையில் உள்ள நார்ச்சத்தானது செரிமானப்பாதையில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதனால் செரிமானம் நன்கு நடைபெறுவதோடு உணவில் உள்ள ஊட்டச்சத்துகளையும் உறிஞ்சவும் உதவுகிறது.
இதில் காணப்படும் புல்கர் என்னும் பொருளானது உடலில் ஸ்டார்ச் சேருவதைத் தடைசெய்கிறது. இப்பொருள் சிறுகுடலால் செரிமானம் செய்யப்படுவதில்லை. செரிமானபாதையில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாகிறது.
மூளையின் ஆரோக்கியத்திற்கு
முழுக்கோதுமையில் உள்ள விட்டமின் பி, இ, ஃபோலேட்டுக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் செராடானின் உற்பத்தியை ஊக்குவிப்பதோடு ஆற்றலையும் வழங்குகிறது.
இதனால் அல்சீமர்ஸ், மனஅழுத்தம் ஆகியவை தடைசெய்யப்படுகின்றன. மூளை புத்துணர்வு, மொத்த உடல்ஆரோக்கியம் ஆகியவற்றை முழுகோதுமை வழங்குகிறது.
புற்றுநோயைத் தடைசெய்ய
முழுக்கோதுமையில் உள்ள நார்ச்சத்தானது மார்பகப் புற்றுநோய், குடல்புற்றுநோய் ஏற்படாமல் நம்மை பாதுகாப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. எனவே முழுக்கோதுமையை உண்டு புற்றுநோயைத் தடுக்கலாம்.
பெண்களின் ஆரோக்கியத்திற்கு
முழுகோதுமையை அடிக்கடி உணவில் சேர்க்கும்போது பெண்களின் உடல்பருமன், சர்க்கரை நோய், கர்ப்பகால ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.
மேலும் வயதானப் பெண்களுக்கு ஏற்படும் எலும்பு அடர்த்தி குறைவு, ஹார்மோன் குறைபாடு, உடல்எடை கோளாறுகள் ஆகியவற்றைத் தடைசெய்கிறது. ஆதலால் பெண்கள் எல்லா வயதிலும் முழுக்கோதுமையை உண்டு பயன்பெறலாம்.
கோதுமையானது ரொட்டிகள், பிஸ்கட்டுகள், மப்பின்கள், பாஸ்தா, கேக்குகள், பீட்சா, பாஸ்தா தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
கோதுமையில் குல்டன் புரதம் உள்ளது. இதனால் கோதுமை மாவானது பிசுபிசுப்புத் தன்மையையும், இரப்பர்போல் இழுவிசையையும் கொண்டுள்ளது.
எல்லா ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ள தாவரப்புரதமான முழுக்கோதுமையை அடிக்கடி உணவில் சேர்த்து வளமான வாழ்வு வாழ்வோம்.
Comments
“கோதுமை – மனிதனுக்கான தாவரப் புரதம்” அதற்கு 10 மறுமொழிகள்