சாகித்ய அகாடமி விருது இந்தியாவில் சிறந்த இலக்கியப் படைப்பாளிகளை அங்கீகரிக்கும் ஓர் உயரிய விருதாகும்.
இவ்விருது ஆண்டுதோறும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் உள்ள சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
இலக்கிய படைப்பு என்பது சிறுகதைகள், புதினம், கவிதை, நாவல், விமர்சனம், சுயசரிதை, இலக்கிய விமர்சனம், இலக்கிய வரலாறு, நாடகம், பிறர் சரிதை, பயணம், உரைநடை, கட்டுரை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இவ்விருதுக்கு தனிப்பட்ட படைப்பாளி மட்டுமே தேர்வு செய்யப்படுவார்.
சாகித்ய அகாடமி விருது 1955 முதல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இவ்விருது ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசையும், ஒரு பட்டயத்தையும் உள்ளடக்கியது.
படைப்பாளிகளின் படைப்புகளை அங்கீகரிப்பதும், அவர்களின் காலத்திற்கேற்ற புதிய எழுத்தாக்கங்களை ஊக்குவிப்பதும் சாகித்ய அகாடமி விருது வழங்குவதன் நோக்கமாகும்.
சாகித்ய அகாடமி
சாகித்ய அகடாமி இந்திய அரசினால் 1954-ல் ஏற்படுத்தப்பட்டது. இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் சுயசார்பு அமைப்பாக இது செயல்பட்டு வருகிறது.
சிறந்த இந்திய இலக்கியங்களை உலகறியச் செய்வது இதன் நோக்கமாகும்.
இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புக்களை பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை ஊக்கப்படுத்துவது போன்ற பணிகளை சாகித்ய அகடாமி செய்து வருகிறது.
மேலும் இவ்வமைப்பு இலக்கியம் சார்ந்த கூட்டங்கள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றையும் நடத்தி வருகிறது.
சாகித்ய அகாடமி விருது பெறுவதற்கான விதிமுறைகள்
படைப்பானது இந்தியப் படைப்பாளியின் சொந்தப் படைப்பாக இந்தியாவில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
படைப்பானது விருது வழங்கும் ஆண்டிற்கு முந்தைய ஆண்டிற்கு முன் ஐந்து வருடங்களில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அதாவது 2017 விருது வழங்கும் ஆண்டாயின் படைப்பானது 2011 முதல் 2015க்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
படைப்பாளி இந்தியராக இருக்க வேண்டும்.
இவ்விருதிற்கான போட்டியில் இறுதிக்கட்டத்தில் குறைந்தது மூன்று படைப்புகளாவது இடம் பெற்றால் மட்டுமே விருது வழங்கப்படும்.
இவ்விருதினைப் பெறுவதற்கான படைப்புகளின் தகுதிகள்
படைப்பானது அது சார்ந்த மொழி மற்றும் இலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பினை செய்திருக்க வேண்டும்.
மொழி பெயர்ப்பு படைப்புகள், பல ஆசிரியர்களைக் கொண்ட படைப்புகள், பல்கலை கழகங்களுக்கான ஆய்வு புத்தகங்கள், ஏற்கனவே இவ்விருதினைப் பெற்ற படைப்பாளிகள் (மொழி பெயர்பாளர் விருது, பால விருது, யுவ விருது பெற்றோர் தவிர), தேர்வுக்குழுவில் இடம் பெற்றுள்ள படைப்பாளிகள் ஆகியோர் இவ்விருதிற்கு தகுதியற்றவராவர்.
ஏற்கனவே புத்தக வடிவில் வெளிவந்தவைகளின் தொகுப்புக்கள், ஏற்கனவே புத்தவடிவில் வெளிவந்தவைகளின் மறுபதிப்புகள் ஆகியவை இவ்விருதிற்கு தகுதியற்றதாகும்.
படைப்பாளிகளோ புத்தக வெளியீட்டாளர்களோ இவ்விருதிற்கு படைப்புகளை நேரடியாக பரிந்துரைக்கக் கூடாது.
இவ்விருதினைப் பெறுவதற்கு இறுதியில் இரு படைப்புகளுக்கிடையே போட்டி என வரும்போது படைப்பாளிகளின் மொழி மற்றும் இலக்கிய சேவை கணக்கில் கொள்ளப்படும்.
சாகித்ய அகடாமி விருதுக்கு தேர்வு செய்யும் முறை
இவ்விருதுக்கு தேர்வுக்கு செய்யும்போது முதற்கட்டமாக தகுதியான படைப்புகள் அகாடமித் தலைவரால் நியமிக்கப்பட்ட ஓரிரண்டு வல்லுநர்களால் தேர்வு செய்யப்பட்டு பத்து மொழி வல்லுநர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஒவ்வொரு மொழி வல்லுநரும் இரண்டு புத்தகங்களை விருதுக்குப் பரிந்துரைப்பார்.
இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் மூன்று நீதிபதிகளின் பார்வைக்கு அனுப்பப்படும்.
அதிக வாக்குகளை அல்லது அனைவராலும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்ட ஒரு புத்தகம் விருதுக்கு தேர்வு செய்யப்படும்.
பின்னர் அகாடமியின் செயற்குழுவின் அங்கீகாரம் மற்றும் அறிவித்தலுக்கு அனுப்பப்படும்.
கடந்து வந்த பாதை
சாகித்ய அகாடமி விருதானது 1955-ல் ரூ.5000 ரொக்கப்பரிசையும், மார்பிளினால் செய்யப்பட்ட பட்டயத்தையும் உடையதாக இருந்தது.
அதிக எடையின் காரணமாக மார்பிளினால் செய்யப்பட்ட பட்டயம் மாற்றப்பட்டது. இப்பட்டயத்தை வடிவமைத்தவர் நடிகர் சத்தியஜித் ராய் ஆவார்.
1983-ல் ரொக்கப் பரிசு ரூ.10000 எனவும், 1988-ல் ரொக்கப் பரிசு ரூ.25000 எனவும், 2001-ல் ரொக்கப் பரிசு ரூ.40000 எனவும், 2003-ல் ரொக்கப் பரிசு ரூ.50000 எனவும், 2009 முதல் 100000 எனவும் மாற்றப்பட்டது.
1965-ல் இந்திய பாகிஸ்தான் போரின் காரணமாக பட்டயத்திற்குப் பதில் தேசிய சேமிப்பு பத்திரம் வழங்கப்பட்டது.
முதலில் இவ்விருது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 12 மொழிகளுக்கு வழங்கப்பட்டது.
1955-ல் இவ்விருதுதானது தமிழ் மொழிக்கு ரா.பி.சேதுபிள்ளையின் தமிழ் இன்பம் என்ற கட்டுரைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.
இவ்விருதினை கல்கி கிருஷ்ணமூர்த்தி, பாரதிதாசன், கு.அழகிரிசாமி, ஆதவன் சுந்தரம், சி.சு.செல்லப்பா ஆகியோர் அமரான பின் முறையே 1956, 1969, 1970, 1987, 2001 ஆகிய ஆண்டுகளில் பெற்றனர்.
இதுவரையிலும் இவ்விருது 1957, 1959,1960, 1964, 1976 ஆகிய 5 ஆண்டுகளில் வழங்கப்படவில்லை.
2016ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது.
– வ.முனீஸ்வரன்