இன்றைய பொருளாதாரம் பணப் பொருளாதாரம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். முன்பு ஒரு காலத்தில் பணம் இடை ஆளாக வருவதற்கு முன்பு பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்ததாக பொருளாதார வரலாறு கூறுகிறது.
தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் ஒரு கவிதையில்
கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம் என்று குறிப்பிடுகிறார்.
மேற்கண்ட கவிதை நமக்கு எதைக் காட்டுகிறது என்று பார்த்தால் பொருளுக்குப் பொருள் கிடைக்கும்.
அங்கே பணத்திற்கு வேலையே இல்லை என்ற நிலையில் ஒரு பொருளாதார முறை இயங்கியதையும், மனிதர்களை இயக்கியதையும் நாம் உணர முடிகிறது.
பண்டமாற்று முறையில் பல சிக்கல்கள் உருவாவதை அறிந்து அக்கால அறிஞர்கள் பணப் பொருளாதாரத்தை அறிமுகம் செய்தனர்.
பொருட்களையும், சேவைகளையும் வாங்குவதற்கும், விற்பதற்கும் ஒரு இடையாளாக பணம் செயல்படுத்தப்பட்டு, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தேவைகள்
பணம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு அமெரிக்கப் பொருளாதார இளைஞரான அறிஞர் பேராசிரியர் வாக்கர் என்பவர் கூறுகிறார்.
‘பணம் எதையெல்லாம் செய்யுமோ? அதுவே பணம்’
சந்தைப் பொருளாதாரம் தலைதூக்க ஆரம்பித்ததும், பணத்தின் மகத்துவத்தை அனைவரும் அறிந்தனர். மனிதர்களின் தேவையில் மாற்றம் ஏற்பட்டது.
மனித விருப்பங்கள் அதிகமாயின. விருப்பங்களை பூர்த்தி செய்ய முயற்சி செய்தனர். விருப்பங்கள் நிறைவேறியவுடன் திருப்தி அடைந்தனர்.
நுகர்வோர்களின் சந்தையாக கலப்பு பொருளாதார நாடாக இந்தியா மாறிய பிறகு நுகர்வோர்களின் தேவைகளும், உற்பத்தியாளர்களின் தேவையும் அதிகமானது. நுகர்வோரின் தேவைகள் மூன்று பிரிவுகளாக உருவானது. அவையாவன
1. அடிப்படைத் தேவைகள்
2. வசதித் தேவைகள்
3. ஆடம்பரத் தேவைகள்
அந்த உருமாற்றம் என்பது காலத்தின் கட்டாயம் ஆகும். அதற்கு ஏற்றார்ப் போல உற்பத்தியாளர்களும், மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் தங்களை உருமாற்றிக் கொண்டனர் என்பது தான் உண்மை.
கச்சாப் பொருட்களைத் தேடுவதில் உற்பத்தியாளர்களின் பணி அதிகமானது. ‘சிக்கனம்’ என்ற வார்த்தையை கடைப்பிடிக்க வேண்டியவர்கள் நுகர்வோர்களும் உற்பத்தியாளர்களுக்கும் தான்.
இது கொரோனா காலம். தேவையை அறிந்து உற்பத்தி செய்யுங்கள். நுகர்வை அறிந்து பொருட்களை வாங்குங்கள். தேவையும், அளிப்பும் பொருளாதாரத்தின் இரு கண்கள் ஆகும். தேவை நுகர்வோர் பக்கம். அளிப்பு என்பது உற்பத்தியாளர்கள் பக்கம்.
தேவைக்குச் செலவு செய்யுங்கள். தேவையில்லாத செலவைத் தவிருங்கள். அளவாக உற்பத்தி செய்யுங்கள். தேவையற்ற நட்டத்தைத் தவிருங்கள். திட்டமிட்டு செயல்படுங்கள்.
சிநேகிதத்தோடு சில யோசனைகள்
தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்
மின்சாரத்தை தேவைக்குப் பயன்படுத்துங்கள்
ஆடம்பரத் தேவையைத் தள்ளிப் போடுங்கள்
ஒரு ரூபாய் சேமிப்பது என்பது
ஒரு ரூபாய் சம்பாதிப்பதற்குச் சமம்.
சிக்கனம் காப்போம்!
சிறப்புடன் வாழ்வோம்!
முனைவர் சொ.சிதம்பரநாதன்
பொருளாதாரத் துறைத்தலைவர்
இராசபாளையம் ராஜுக்கள் கல்லூரி
இராசபாளையம்
கைபேசி: 9486027221
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!