ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். இந்நூல் ஆசிரியர் இளங்கோவடிகள். இவர், தமிழ்த்தாயைக் காப்பிய மாளிகையில் வைத்து அழகு சேர்த்தவர்.
இக்காப்பியத்தை ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு’ என்று மகாகவி பாரதியார் தமிழ்நாட்டோடு சேர்த்துப் போற்றுகின்றார்.
இந்நூலாசிரியரை “யமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணமே பிறந்ததில்லை உண்மை” என்று மகாகவி பாரதி பாராட்டுகின்றார்.
பழைமையும் பெருமையும் வாய்ந்த இக்காப்பியம், பண்டைய தமிழ்ப் பண்பாட்டு சமயநெறிகளைப் போற்றிப் பறைசாற்றுகின்றது.
அவ்வழியில் திருமாலின் அவதார புருஷர்களாகிய இராமனையும் கண்ணனையும் அழகுபட, ஆணித்தரமாகக் காட்டுகின்றார். அவ்வாறாகச் சொன்ன செய்திகளைக் காண்போம்.
வைணவர்கள் ‘கோவில்’ என்றும், ‘பெருமாள் கோவிலெ’ன்றும் போற்றப்படுகின்ற காவிரி, கொள்ளிடம் ஆற்று நடுவே அரங்கத்தில், ஆயிரம் தலைகளையுடைய பாம்பணைமீது, பலரும் வணங்கிப் போற்றும், திருமகள் அமர்ந்த திருமார்பனைத் திருஅரங்கனாக பள்ளிக் கொண்ட திருமாலை இளங்கோவடிகள் காட்டுகின்றார்.
'ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறல்
பாயல் பள்ளி பலர் தொழுதேத்த
விரிதிரைக் காவிரி வியன் பெருந்துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்' (காடுகாண் காதை )
இச்செய்தியையே குலசேகராழ்வார்
'இனத்துத்தியணிபணம் ஆயிரங்களார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி அனந்தனென்னும்
அணிவிளங்கும் உயர் வெள்ளையணையை மேவி
திருவரங்கப பெருநகருள் தென்னீர் பொன்னி
திரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும்'
'திடர்விளங்குகரைப் பொன்னி நடுவுபாட்டுத்
திருவரங்கத் தரவணையில் பள்ளிகொள்ளும்' என்று நமக்குக் காட்டுகின்றார்.
தொல்காப்பியர் கூறும்
‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறும் நல் உலகத்து’ என்ற கருத்திற்கு இணங்க, இளங்கோவடிகள்
‘நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நன்னாட்டு, (வேனிற் காதை)
என்று சொல்வது மட்டுமன்றி, அந்த நெடியோன் குன்றமே வேங்கடம் என்றும் அங்கு நின்று அருள்செய்பவன் திருமாலே என்றும் காட்டுகின்றார்.
ஒருசிலரின் ஐயத்தைப் போக்கும் வகையில், திருமாலின் சங்கு, சக்கரம் தரித்துள்ள தாமரைக் கையினைக் அடையாளங்களாகக் காட்டி உறுதிபடுத்தி நமக்கு தெள்ளத் தெளியத் தெரியபடுத்திகின்றார்.
'வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இருமருங்கு ஓங்கிய இடைநிலை தானத்து
மின்னுக் கொடி உடுத்து விளங்கு வில்பூண்டு
நன்னிற மேகம் நின்றதுபோலப்
பகையணங்கு ஆழியும் பால் வெண்சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
நலம்கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ வாடையின் பொலிந்து தோன்றிய
செங்கண்; நெடியோன் நின்ற வண்ணமும்'(காடுகாண் காதை) என்று இப்பாடலில் திருமாலின் நின்ற கோலத்தைக் இளங்கோவடிகள் காட்டியருளுகின்றார்.
திருமாலின் கிடந்த கோலத்தையும் நின்ற கோலத்தையும் கொண்டாடியவர் நடந்த நாயகனாய் சிறப்புறக் காட்டிய பாடல்.
'திரண்டமரர் தொழுதேத்தும் திருமால் நின் செங்கமல
இரண்டடியால் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்த அடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்த அடி'( ஆய்ச்சியர் குரவை) என்று மூவுலகைத் தன் திருவடியால் அளந்ததையும், பாண்டவர்களுக்காகத் தூதாகச் சென்றதையும் சொல்லி நடந்த கோலத்தையும் நமக்குக் காட்டுகின்றார்.
இப்பாடலில் திருமாலின் கண்ணன் மற்றும் வாமனாவதரத்தையும் திரிவிக்ரம அவதாரத்தையும் நமக்கு இளங்கோவடிகள் காட்டுகின்றார். கோகுலத்தில் கண்ணனை
'ஆயர் பாடியின் அசோதைபெற் றெடுத்த
பூவைப்புதுமலர் வண்ணன்
‘கன்றைக் குணிலாக் கனிஉதிர்த்த மாயன்’ (ஆய்ச்சியர் குரவை) என்று கண்ணன் தன்னைக் கொல்லவந்த கன்றினைத், தடியாகக் கொண்டு வீசி, மரமாக நின்ற விளாமரத்தின் கனிஉதிரக் காட்டிய ஆயர்பாடிக் கண்ணனை நமக்கு இளங்கோவடிகள் காட்டுகின்றார்.
இச்செய்தியை ஆண்டாள் நாச்சியார்,
‘கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி’ என்று பாடுகின்றார்
பொய்கையாழ்வாரும்,
‘கனிசாயக் கன்றெறிந்த தோளான்’ என்கின்றார்.
பாம்பைக் கயிறாகச் சுற்றிப் பாற்கடலைக் கடைந்த செய்தியினை,
‘பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்’.
‘வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே'(ஆய்ச்சியர் குரவை) என்று இளங்கோவடிகள் நமக்குக் காட்டினார்.
இக்கருத்தை ஆண்டாள் நாச்சியாரும்,
‘வங்கக் கடல்கடைந்த மாதவன்’ என்று போற்றுகின்றார்.
ஆயர்பாடியில் அசோதை கண்ணனைக் கயிற்றால் கட்டிய செய்தியை
'அசோதையார் கடைகயிற்றால் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய்!'(ஆய்.குரவை) என்று அழகுபட இளங்கோவடிகள் நமக்குக் கண்ணனைத் தாமோதரனாக நமக்குக் காட்டுகின்றார்
இச்செய்தியை பெரியாழ்வார்
‘பெருமா உரலிற் பிணிப்புண்டிருந்து’ என்று பாடுகின்றார்.
முழுமுதற்பொருள் இவனே! என அமரர்கள் வணங்கிடும் நீ, பசி இன்றியே எல்லா உலகங்களையும் உண்டாய். அப்படி உலகுண்ட வாய், உறியிலிருந்த வெண்ணெயை உண்ட வாயாகும். என்று துளசி மாலை தரித்த, கண்ணனின் விளையாட்டை.
'அருபொருள் இவன் என்றே அமரர்கணம் தொழுதேத்த
உருபசி ஒன்றின்றியே உலகு அடைய உண்டனையே
உண்டவாய் களவினால் உறிவெண்ணெய் உண்டவாய்
வண்துழாய் மாலையானே' (ஆய்ச்சியர் குரவை) என்று இளங்கோவடிகள் அழகுபடக் காட்டினார்
இச்செய்தியைப் பெரியாழ்வார்,
'வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம் '
'மண்ணும் மலையும் கடலும் உலகேழும்
உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளை' என்று போற்றுகின்றார்.
பொய்கையாழ்வாரும்
‘மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய்யென்பர்’ என்று பாடுகின்றார்.
இப்படிப்பட்ட அருஞ்செயல்கள் புரிந்த, மாயவனான கண்ணனைக் கண்டு களிக்காத கண்கள் கண்களாகுமோ? அப்படிப் பார்த்த கண்கள்தான் கண்கள் என
'கரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியிடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும், செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே?(ஆய்ச்சியர் குரவை) என்று ஆழ்வார்களையும் விஞ்சி கண்ணனை இளங்கோவடிகள் போற்றுகின்றார்.
மகாபாரத யுத்தகளத்தில் அபிமன்யுவை கொன்றவனைப் பொழுது சாய்வதற்குள் கொல்வதாகச் சபதமேற்ற அர்ச்சுனனுக்காகத் தன்னுடைய சக்கராயுதத்தால் கதிரவனை கண்ணன் மறைத்த செய்தியை
‘கதிர்திகிரியான் மறைத்த கடல்வண்ணன்'(ஆய்ச்சியர் குரவை) என்று இளங்கோவடிகள் போற்றுகின்றார்.
இச்செய்தியைப் பொய்கையாழ்வார்,
‘….வானத்து
இயங்கும் எரிகதிரோன் தன்னை-முயங்கமருள்
தேராழியால் மறைத்த தென்நீ’ என்று தெரியப்படுத்துகின்றார்.
இச்செய்தியை திருமங்கை ஆழ்வார்
‘பகலே ஆழியால் அன்றங்கு ஆழியை மறைத்தான் அரங்கமாநகர் அமர்ந்தானே’
என்று பாடுகின்றார்.
கண்ணனே திருமால் என்று
‘ஆய்வளைச் சீர்க்கு அடிபெயர்த்திட்டு; அசோதையர் தொழுதேத்தத்
தாதெரு மன்றத்து ஆடும் குரவையோ தகவுடைத்தே
எல்லா நாம் புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும்'(ஆய்ச்சிர் குரவை) என்று இளங்கோவடிகள் புகழ்கின்றார்.
திருமாலின் இராமவதாரத்தையும் காட்ட
‘ தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வன் பயந்தோன்'(ஊர்காண் காதை)
என்று, தந்தையின் ஏவலால் இராமன் சீதையுடன் கானகம் சென்றதையும், சீதையை பிரிந்ததையும், வேதத்தை அருளிய பிரமனைப் படைத்தத் திருமாலே, இராமன் என்றும் இளங்கோவடிகள் காட்டுகின்றார்.
'மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான்போந்து
சோ அரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே?' (ஆய்ச்சியர் குரவை)
தம்பியுடன் கானம் சென்று இலங்கையில் இராவணனை அழித்த திருமாலின் அவதாரமாகிய இராமனின் புகழைக் கேட்காத காதுகள் என்ன காதுகளோ? எனப் இளங்கோவடிகள் போற்றுகின்றார்.
இளங்கோவடிகள் திருமாலின் அவதாரங்களாகிய கண்ணனையும், இராமனையும் பலராமனையும் வாமனரையும் காட்டினார்.
இவ்வளவு அவதாரப்பெருமைகளைக் கொண்ட திருமாலை, நாராயணா எனப் போற்றி வணங்காத நாவென்ன நாவே என ஆழ்வார்களையும் விஞ்சிப் போற்றுகின்றார்.
'மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்து ஆரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே
நாராயணா என்னா நா என்ன நாவே' (ஆய்ச்சியர் குரவை)
இக்கருத்துப்படியே திருமழிசையாழ்வாரும்
‘மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே யாதலால் இன்று.’ என்று வருத்தத்துடன் பேசுகின்றார்.
ஆக, பெரும் பண்டைய காப்பியமான சிலப்பதிகாரத்தில் பண்டைய பக்தி நெறியை நமக்குக் காட்டுதலை நாம் போற்றுதல் வேண்டும்.
மேலும், இராமபிரானின் தம்பியாகிய இளையபெருமாள் பெயரையே பெற்றிருக்கும் இளங்கோவின் அடிகளையும் வாழ்த்துவோமாக.
இராமமூர்த்தி இராமாநுஜதாசன்
திருநின்றவூர் 602024
கைபேசி: 9444410450
2 Replies to “சிலப்பதிகாரத்தில் திருமால் – இராமமூர்த்தி இராமாநுஜதாசன்”