சுடுகின்ற நெருப்பா? சுகம் தரும் நிலவா?

சுடுகின்ற நெருப்பா ? சுகம் தரும் நிலவா ?
எது தான் நீ எனச் சொல் மகளே!

கடும் குளிர் பனியா ? காய்கின்ற வெயிலா?
எது தான் நீ எனச் சொல் மகளே!

சுற்றும் புவியின் சுழற்சி மையம்
நீதான் என்பதைச் சொல் மகளே!

வெற்றிடம் நோக்கி விரையும் காற்றும்
உன் போல் பெண் எனச் சொல் மகளே!

நிற்பவை நடப்பவை பறப்பவை எல்லாம்
உந்தன் நிழல் எனச் சொல் மகளே!

பற்றிப் படரும் கொடி செடி மரங்களும்
உன் பரம்பரை என்றே சொல் மகளே!

ஒற்றை நிலவின் அழகிய சிதறல்கள்
உன் வடிவம் என்றே சொல் மகளே!

இற்றை நாளில் உன் விழியினில் வீரம்
இருப்பதை உலகிற்கு சொல் மகளே!

குற்றம் இல்லா சூரிய கதிரின்
குணமே நீயெனச் சொல் மகளே!

கற்றவர் பாடிடும் கவிதையின் கருவாய்
இருப்பதும் நீ எனச் சொல் மகளே!

சீற்றம் கொள்வதும் தீயவை கண்டு
சிவப்பதும் நீ எனச் சொல் மகளே!

மாற்றம் காண்பதும் மனம் மகிழ
வாழ்வதும் மகளே நீ எனச் சொல் தினமே!

போற்றும் நாள் இது மார்ச் எட்டு
மகளிர் தினத்தில் வாழ்கவென
உனை வாழ்த்தும் உலகினை
இரு கரம் கூப்பி வணங்கிடு மகளே!
உலகம் வணங்கிட நிலைத்திடு மகளே!!

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942