இயற்கையின் கொடை சுண்டைக்காய்

சுண்டைக்காய் கசப்பு தன்மையுடைய அதிக மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ள இயற்கையின் கொடை.

சுண்டையின் காய், இலை, வேர் ஆகிய‌ பாகங்கள் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இது பச்சையாகவும், வற்றலாக்கியும் சமைத்து உண்ணப்படுகிறது.

இது பேயத்தி, அமரக்காய், கடுகி என்றும் அழைக்கப்படுகிறது.

இது வீட்டுத் தோட்டங்களிலும், ஈரமான நிலங்களிலும் தானாகவே வருகிறது.

சுண்டையில் காட்டுச்சுண்டை, நாட்டுச்சுண்டை என இரு வகைகள் உள்ளன. காட்டுச்சுண்டை அதிகளவு கசப்பாகவும், நாட்டுச்சுண்டை லேசான கசப்புடனும் காணப்படுகின்றன.

இது சோலேனேசியே என்ற தாவரகுடும்பத்தைச் சார்ந்தது. கத்தரிக்காய், தக்காளி, மிளகாய், உருளைக்கிழங்கு ஆகியோர் இதன் உறவினர் ஆவர். இதனுடைய அறிவியல் பெயர் சோலானம் டார்வூம் என்பதாகும்.

 

சுண்டைக்காயின் அமைப்பு மற்றும் வளரியல்பு

சுண்டைக்காய் புதர்ச்செடி வகைத் தாவரத்திலிருந்து கிடைக்கிறது. இச்செடியானது 2-3 மீ உயரம் வரை வளரும். இச்செடியின் தண்டானது அடிப்பகுதியில் ஒன்றாகவும் மேலே பல கிளைகளுடனும் காணப்படும்.

இளமையான தண்டுகள் பச்சை நிறத்திலும், சற்று முதிர்ந்த நிலையில் பழுப்பு நிறத்திலும் இருக்கும். தண்டில் முட்களும், மென்மையான ரோமம் போன்ற சுணைகளும் காணப்படுகின்றன.

இத்தாவரம் நீள்வட்ட வடிவில் அகலமான இலைகளைக் கொண்டுள்ளது. இலைகளின் அடியிலும் முட்களும், சுனைகளும் காணப்படுகின்றன.

 

சுண்டைக்காய் செடி
சுண்டைக்காய் செடி

 

இரண்டு இலைகளுக்கு இடையில் பூக்கள் கொத்துக்களாகத் தோன்றுகின்றன. பூக்கள் வெள்ளை நிறத்தில் நட்சத்திர வடிவில் இருக்கும்.

 

சுண்டைக்காய் பூ
சுண்டைக்காய் பூ

 

இத்தாவரத்தின் வெள்ளை நிறப்பூக்களிலிருந்து 1-2 செமீ விட்டமுள்ள பச்சை நிற உருண்டையான காய்கள் தோன்றுகின்றன. இதனுள் 1-2 மிமீ அளவுடைய தட்டையான விதைகள் காணப்படுகின்றன.

இக்காயானது தனிப்பட்ட மணம் மற்றும் கசப்பு சுவையினைக் கொண்டுள்ளது.

இத்தாவரம் வெப்பமண்டல மற்றும் துணை வெப்ப மண்டலங்களில் செழித்து வளரும் இயல்பினை உடையது. இத்தாவரம் வளர ஈரப்பதமான வளமான நிலம் தேவை.

சிறிது வளர்ந்த நிலையில் இத்தாவரம் அதிக வறட்சியையும் தாங்கும் தன்மையைக் கொண்டுள்ளது.

இது விதை மற்றும் வேர் மூலம் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குப் பரவுகிறது. இத்தாவரம் 1-1.5 மீ உயரம் வரை வளர்ந்தவுடன் பூக்கத் தொடங்கும். ஈராண்டுகளில் 3 மீட்டர் உயரம் வளர்ந்தவுடன் இறந்து விடுகிறது.

 

சுண்டைக்காயின் வரலாறு

சுண்டையின் தாயகம் மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க பகுதிகள் ஆகும். இங்கிருந்தே உலகின் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளுக்கு இக்காய் பரவியது.

இக்காய் தற்போது இந்தியா, சீனா, பிரேசில், மெக்ஸிகோ, தாய்லாந்து, இந்தோனேசியா, ஜமைக்கா, பாப்பு நியூகினியா உள்ளிட்ட உலக நாடுகளில் காணப்படுகின்றது.

இன்றைக்கு தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவில் இக்காய் முறையாகப் பயிர் செய்யப்படுகிறது.

 

சுண்டைக்காயில் உள்ள சத்துக்கள்

சுண்டைக்காயில் விட்டமின் ஏ,சி, பி தொகுப்புகள் காணப்படுகின்றன. மேலும் இதில் தாதுஉப்புக்களான இரும்புச்சத்து, கால்சியம் உள்ளன. மேலும் இது புரதம், நார்ச்சத்து ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

 

சுண்டைக்காயின் மருத்துவப்பண்புகள்

புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு பெற

சுண்டைக்காயானது பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்பினைக் கொண்டுள்ளது. மேலும் புற்றுநோய் ஏற்படக் காரணமான முறையற்ற புற்றுச்செல்களின் வளர்ச்சியினை இக்காய் தடைசெய்கிறது.

இக்காயின் சாறானது நுரையீரல் புற்றுநோயினைத் தடுக்கும் பண்பினைப் பெற்றுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இக்காயினை உட்கொண்டு புற்றுநோயிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.

 

இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்த

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது அது நீரழிவு நோயினை ஏற்படுத்தி விடுகிறது.

சுண்டையின் இலையினை காயவைத்து பொடியாக்கி உண்டாலும், சுண்டைக்காயினை உண்டாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

எனவே இக்காயினை அடிக்கடி உணவில் சேர்த்து சர்க்கரை நோயாளிகள் நல்ல பலனைப் பெறலாம்.

 

செரிமானமின்மை மற்றும் வயிற்றுப்போக்கிற்கு

சுண்டைக்காயினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது.

மேலும் செரிமானமின்மை, வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட செரிமானப் பிரச்சினைகளுக்கு இக்காய் சரியான தீர்வாகவும் உள்ளது.

இக்காயானது வயிற்றில் உண்டாகும் அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்தி குடல்புண் (அல்சர்) ஏற்டாமல் நம்மைப் பாதுகாக்கிறது.

 

இதய நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்க

சுண்டைக்காயில் சோபோனின்ஸ், ஃபிளவனாய்டுகள், டார்வோசைடுகள், ஆல்காய்டுகள், கிளைக்கோசைட்டுகள், டானின்கள், குளோரோஜெனோம் போன்ற ஆன்டிஆக்ஸிஜென்டுகள் காணப்படுகின்றன.

இவை இதய நோய்கள், பக்கவாதம், புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.

உலர்ந்த சுண்டைக்காயினை பொடியாக்கி உண்ணும்போது உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.

சீரான இரத்த அழுத்தத்தினால் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. எனவே பச்சையாகவோ, உலர வைத்தோ சுண்டைக்காயினை உண்ணும்போது நமக்கு இதயநோய்கள் ஏற்படுவதில்லை.

 

கீல்வாதம் ஏற்படாமல் தடுக்க

சுண்டையானது உடலில் உள்ள யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது. இதனால் கீல்வாதத்தினால் உண்டாகும் வலி குணப்படுத்தப்படுகிறது. மேலும் கீல்;வாதம் உண்டாகக் காரணமானவற்றையும் தடைசெய்கிறது.

அத்துடன் சுண்டைக்காயின் இலையானது இயற்கை வலிநிவாரணியான சோஸோலினோலி என்ற ஆன்டிஆக்ஸிஜென்டைக் கொண்டுள்ளது.

இது வாதத்தினால் ஏற்படும் முதுகுவலி, வீக்கம் மற்றும் வலியினைக் குறைக்கிறது. எனவே சுண்டைக்காயினை அடிக்கடி உணவில் சேர்த்து கீல்வாதம் ஏற்படாமல் தடுக்கலாம்.

 

சளி, காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினைக்கு

சுண்டைக்காயின் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தடுப்புப் பண்புகள் சளி மற்றும் சாதாரண காய்ச்சலுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.

சளி மற்றும் சாதாரண காய்ச்சலால் பாதிப்படைந்தவர்கள் சுண்டைக்காய் சூப்பினை உண்டு நிவாரணம் பெறலாம்.

சுண்டைக்காயினை உலர வைத்து பொடியாக்கி உட்கொள்ள நாள்பட்ட சளியானது வெளியேற்றப்படுகிறது. மேலும் இக்காய் ஆஸ்துமா, இருமல், நுரையீரல் தொற்று ஆகியவற்றையும் சரிசெய்கிறது.

 

அனீமியா ஏற்படாமல் தடுக்க

சுண்டைக்காயானது அதிகளவு இரும்புச்சத்தினைக் கொண்டுள்ளது. இக்காயினை உண்ணும்போது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் அனீமியா ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

எனவே இக்காயினை சூப்பாக்கி அடிக்கடி உண்டு இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.

 

குடற்புழுக்கள் ஏற்படாமல் தடுக்க

சுண்டைக்காயானது அதன் கசப்பு சுவையின் காரணமாக குடலில் புழுக்கள் வளருவதைத் தடைசெய்கிறது. சுண்டை வற்றலை பொடியாக்கி குழம்பில் சேர்த்து குடற்புழுக்கள் வராமல் தடுக்கலாம்.

 

சுண்டைக்காயினை வாங்கும் முறை

சுண்டைக்காயினை வாங்கும்போது ஒரே அளவினை உடையதாகவும், சீரான நிறத்தினை உடையதாகவும் வெட்டுக் காயங்கள் ஏதும் இன்றி இருக்குமாறு வாங்க வேண்டும்.

மேற்பரப்பில் வெட்டுக்காயங்கள் உடைய சுருங்கியவற்றை தவிர்த்து விடவும்.

சுண்டைக்காயானது பொரியலாகவும், குழம்பாகவும், வற்றலாகவும் பயன்படுத்தப்படுகிறது. சூப்புகள், சாலட்டுகள் தயாரிப்பிலும் இக்காய் பயன்படுத்தப்படுகிறது.

 

சுண்டைக்காய் வற்றல்
சுண்டைக்காய் வற்றல்

 

சத்துக்கள் நிறைந்த சுண்டைக்காயினை உணவில் அடிக்கடி சேர்த்து நலமான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.