சுதந்திரம் இங்கே கிடக்கிறது – அது
சுற்றி நடப்பதைப் பார்த்து சிரிக்கிறது
விதவித மாகவே மங்கை அழகினை
விளம்பரம் தன்னில் வடித்திட வென்றே (சுதந்திரம்)
பளபள வென்றே பகட்டினைக் காட்டி
பைகளில் போதை பொருளினை வைத்து
தளதள வென்றே மேனியைத் தாக்கி
தகர்த்திடும் புகையிலை விற்றிட (சுதந்திரம்)
மதமும் சாதியும் கட்சிகள் வைத்து
மனிதரை பிரித்து வன்முறை வளர்த்து
பதமாய் அரசியல் நடத்தும் பலரை
விரட்டிட இயலா நிலையில் இங்கே (சுதந்திரம்)
உழைப்பவர் கெதிராய் உலவிடும் லாட்டரி
உதிரம் தன்னில் ஏறிய நஞ்சாய்
பிழைத்திடும் மனிதரை பிடித்தே வதைக்க
பேசிட இயலா நிலையில் இங்கே (சுதந்திரம்)
இந்திய நாட்டின் மானம் காத்திட
இயலா நிலையில் இளைஞர் இருந்திட
மந்தை ஆட்டினைப் போன்றே இவர்களை
மயக்கிடும் சினிமா இருந்திடும் நிலையில் (சுதந்திரம்)
சின்னத் திரையாம் டி.வியும் இங்கே
சிந்தனை இல்லா மக்களை வளர்க்க
தன்முனைப் பில்லா தலைமுறை தழைப்பதை
தடுத்திட இயலா நிலையில் தானே
சுதந்திரம் இங்கே கிடக்கிறது – அது
சுற்றி நடப்பதைப் பார்த்து சிரிக்கிறது
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)