செயற்கை இலை – அறிவியல் குறுங்கதை

அன்று சனிக்கிழமை என்பதால் மதியத்தோடே பள்ளிக்கூடம் நிறைவடைந்தது. நீண்ட மணியோசை ஒலிக்க, மாணவர்கள் அனைவரும் வார விடுமுறை என்பதால் உற்சாகத்துடன் கலைந்து சென்றனர்.

வகுப்பிலிருந்து நிதானமாக நடந்து வந்து கொண்டருந்தார் கணிதநேசன். அப்போதுதான் நாளை உறவினரது புதுமனைப் புகுவிழா நிகழ்ச்சி இருப்பது அவரது நினைவிற்கு வந்தது.

அவர்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கென, தக்க பரிசுப்பொருளை இன்றே வாங்க‌ வேண்டும், கடைக்கு வேதிவாசனையும் அழைத்துச் சென்றால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார்.

ஆனால் இது பற்றி வேதிவாசனிடம் அவர் எதுவும் தெரிவித்திருக்கவில்லை. அன்று காலையில் சொல்லலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் காலையிலிருந்து வகுப்புகள் இருந்ததால் வேதிவாசனிடம் சொல்ல மறந்து போனார், கணிதநேசன்.

‘சரி, இப்போதாவது நினைவிற்கு வந்ததே’ என்று எண்ணிக் கொண்டு கைகடிகாரத்தை பார்க்க, வகுப்பு முடிந்து கிட்டதட்ட பத்து நிமிடங்களை நெருங்கி கொண்டிருந்தது.

விறுவிறுவென நடந்து அவர்களது அறைக்கு வந்தார். நல்லவேளையாக வேதிவாசன் வீட்டிற்கு புறப்படாமல், அவரது இருக்கையில் அமர்ந்திருந்தார்.

உள்ளே நுழைந்த கணிதநேசன், “ஐயா, மதியம் ஏதாவது வேலை இருக்கா?” என கேட்டார். “ஒன்னும் இல்லைங்க, ஏன்?” என பதிலுரைத்தார் வேதிவாசன்.

“பரிசுப்பொருள் வாங்க கடைக்கு போறேன் நீங்களும் வரணும்” என்றார் கணிதநேசன்.  “ம்ம்ம்…கண்டிப்பா வரணுமா?” என வேதிவாசன் கேட்க, “ஆமா கண்டிப்பா வரணும்” என உரிமையுடன் பணித்தார் கணிநேசன்.

“சரிங்க, போவோம்” என வேதிவாசன் சொல்ல, இருவரும் புறப்பட்டு ஒரு பெரிய கடைக்கு வந்தனர்.

பரிசு மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் எல்லாம் மூன்றாவது மாடியில் இருப்பதாக கீழ்தள‌த்தில் இருந்த தகவல் பலகை காட்டியது. படி மூலமாக மூன்றாவது மாடியை இருவரும் சென்றடைந்தனர்.

பற்பல பொருட்கள் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. வீட்டு அலங்காரப் பொருட்கள், படங்கள், பொம்மைகள், தோரணங்கள், விளையாட்டுப் பொருட்கள் என ஏராள‌மான பொருட்கள் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்தன.

“ஐயா,என்ன மாதிரியான பொருளை வாங்கணும்?” என கேட்டார் வேதிவாசன்.

“புதுவீட்டுக்கு போறாங்க, ஒரு நல்ல அழகான பொருளா வாங்கணும், நீங்களே சொல்லுங்களேன், என்ன வாங்கலாம்?” என கணிதநேசன் கேட்டார்.

“சரி, இங்க இருக்கிற பொருட்களை பார்த்துகிட்டே போவோம். அப்புறம் முடிவு செய்வோம்” என வேதிவாசன் கூற, இருவரும் அங்கிருந்து பொருட்களை பார்த்தவண்ணம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தனர்.

அப்போது கணிதநேசனின் கண்ணில்பட்டது அங்கிருந்த ‘பூச்செடி’. சிறிய தொட்டியில் இருந்த அச்செடியின் மலரும், இலைகளும் அவரை வெகுவாகக் கவர்ந்தன.

“வேதி! அங்க பாருங்க. ஒரு பூச்செடி தொட்டியில் இருக்கு! இங்க செடிகள்கூட விற்கராங்களா?” என கேட்டுக் கொண்டே அந்த செடியின் அருகில் சென்றார் கணிதநேசன்.

வேதிவாசனும் அவருடன் செல்ல, கணிதநேசன் அந்த இலைகளை தொட்டு பார்த்தார். அப்போதுதான் தெரிந்தது. அது உண்மையான செடி அல்ல!என்று. அது செயற்கை செடிதான். இருந்தாலும் பார்பதற்கு அசல் தாவரம் போலவே இருந்தது.

ஏமாற்ற மனநிலையில், “இயற்கை செடின்னு நினைச்சிட்டேன், ஆன இது செயற்கை! வேதி” என்றார் கணிதநேசன். வேதிவாசனும் தன் தலை அசைவில் அதனை ஆமோதித்தார்.

ஒளிர்ச்சேர்க்கை செய்யும் செயற்கை இலை

“என்னதான் பார்பதற்கு இயற்கை இலை மாதிரி இருந்தாலும், இதால ஒளிச்சேர்கை (ஒளி முன்னிலையில் நீரும், கரியமிலவாயும் சேர்ந்து கார்போஹைட்ரேடை உருவாக்குதல்) வினை செய்ய முடியாதே! என்ன பண்றது?” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் கணிதநேசன்.

வேதிவாசனோ, “நீங்க சொல்றது சரிதான்! ஆனா கூடிய சீக்கிரமே ஒளிச்சேர்கைவினையில் ஈடுபடும் செயற்கை இலையும் விற்பனைக்கு வந்திடும்! கவலையை விடுங்க” என புதுத் தகவலை கூறினார்.

“என்ன சொல்றீங்க? அப்ப செயற்கை இலையும், இயற்கை இலை மாதிரி ஒளிச்சேர்கை வினையில ஈடுபடுமா?” என ஆச்சரியத்துடன் கேட்டார் கணிதநேசன்.

“ஆமாம் கணி. சமீபத்துல ஒரு செயற்கை இலையை வடிவமைச்சிருக்காங்க. அந்த இலைக்குள்ள ஒளியை உறிஞ்சும் பொருளும், ஒளிச்சேர்கை வினையை நிகழ்த்தும் வினையூக்கியும் இருக்கு.

ஆனா, இங்க கார்போஹைட்ரேட் உருவாவதில்லை, அதற்கு பதிலாக கரியமில வாயு கார்பன் மோனாக்சைடா மாறி பின்னர் எரிபொருளாக மாற்றமடையுது” என்று விளக்கினார் வேதிவாசன்.

கணிதநேசன் “ஆமாம் வேதி, இப்பதான் நினைவுக்கு வருது. நான் எங்கேயோ இதை படிச்சிருக்கேன். ஆனா, அந்த செயற்கை இலையை ஆய்வகத்தில் மட்டும்தான் பயன்படுத்த முடியும்ன்னு படிச்சதா ஞாபகம்” என்றார்.

“ஆமாம் ஆமாம், பொதுவா செயற்கை இலையை ஆய்வகத்துல (கலனில் இருக்கும் கரியமில வாயுவை அழுத்தத்துடன் பயன்படுத்தலாம்.) மட்டும் பயன்படுத்துற‌ மாதிரித்தான் இருந்தது.

ஆன சமீபத்தில கண்டுபிடிச்சிருக்கிற செயற்கை இலையை சுற்றுபுறத்திலேயே பயன்படுத்த முடியுமாம். அதற்கு அந்த செயற்கை இலையை சுற்றி குவார்டனரி அம்மோனியம் ரெசீனால் ஆன சவ்வு அமைப்பை உண்டு பண்ணியிருக்காங்க.

அத்தோடு சவ்விற்கும் அதனுள் இருக்கும் இலை அமைப்பிற்கும் இடையே நீரையும் நிரப்பி இருக்காங்க. இதனால வளிமண்டலத்தில இருக்கும் கரியமில வாயுவை இந்த செயற்கை இலை சுலபமா எடுத்துக்குதாம்” என்றார் வேதிவாசன்.

“மன்னிக்கணும் வேதி. இலையை சுற்றி இருக்கும் ரெசின் அமைப்பால் வளிமண்டலத்தில இருக்கும் கரியமில வாயு எப்படி இலைக்கு உள்ளே போகுது?. அத்தோடு நீரை ஏன் இலைக்குள்ள வச்சிருக்காங்க? விளக்க முடியுமா?” என கணிதநேசன் கேட்டார்.

அதற்கு வேதிவாசன் “சொல்றேன், சூரிய ஒளிபடும்போது, இலை அமைப்புக்குள்ள இருக்கும் நீர் வெப்பமடைந்து ஆவியாகி அந்த (ரெசினால் ஆன) சவ்வின் வழியே வெளிவரும்.

இந்நிலையில், அந்த சவ்வு வளிமண்டலத்துல இருக்கும் கரியமில வாயுவை மட்டும் உறிஞ்சிக்குமாம். உள்ளிழுக்கப்பட்ட கரியமில வாயு அங்கிருக்கும் வினையூக்கியால எரிபொருளாக‌ மாற்றம் அடையுதாம். மேலும் ஆக்ஸிஜன்கூட இந்த செயற்கை இலை உண்டு பண்ணுதாம்.

“சிறப்பு வேதி. நல்ல கண்டுபிடிப்புதான். சொன்ன உங்களுக்கும் நன்றி” என்றார் கணிதநேசன்.

அதற்குள், “கணி, நேரம் ஆகுதுன்னு நினைக்கிறேன். பரிசுக்கானப் பொருளை பார்த்து வாங்கிடுவோமா?” என்றார் வேதிவாசன்.

“ஆமாம் வேதி”, என்று கூறிய கணிதநேசன், பரிசுப்பொருளை தேர்ந்தெடுத்து வாங்குவதற்காக வேதிவாசனுடன் அங்கிருந்து நகர்ந்தார்.

முனைவர்.ஆர்.சுரேஷ்
சென்னை
அலைபேசி: 9941091461

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.