செயற்கை மழை என்பது மேகங்களின் மீது வெளிப்புறத் துகள்களைத் தூவி மழையை பொழிய வைப்பது ஆகும். இச்செயல்பாடானது மேகவிதைப்பு என்றழைக்கப்படுகிறது.
உலர் பனிக்கட்டி எனப்படும் திண்ம கார்பன்-டை-ஆக்ஸைடு, வெள்ளி அயோடைடு, சாதரண உப்பான சோடியம் குளோரைடு, திரவ புரப்பேன் போன்றவை வெளிப்புறத் துகள்களாக மேகங்களின் மீது தூவப்படுகின்றன.
வெளிப்புறத் துகள்களை தூவுவதற்கு வானூர்திகள், ராக்கெட்டுகள் ஆகியன பயன்படுத்தப்படுகின்றன.
செயற்கை மழையை பெய்விக்கும் முறையானது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இயற்கை மழையானது பெய்யாது இருக்கும்போது செயற்கை மழை ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.
செயற்கை மழை முறையில் சில சமயங்களில் மழை வேண்டிய இடத்தை விட்டுவிட்டு வேறு இடங்களில் பெய்வதும் உண்டு. இம்மழைப் பொழிவானது சில நேரங்களில் அதிக வெள்ளப் பெருக்கை குறைந்த நேரத்தில் உருவாக்கிடுவதும் உண்டு.
செயற்கை மழையின் அளவானது இயற்கை மழையின் அளவினைவிட சற்று பெரிதாக இருக்கும். உலக நாடுகளில் சீனா அதிகளவு செயற்கை மழையை பெய்ய வைத்திருக்கிறது.
செயற்கை மழையின் வரலாறு
செயற்கை மழையை உருவாக்குவதில் ஸ்ஷேபர், பெர்னார்டு, வென்னிகாட் ஆகியோர் செயற் மழை உருவாக்கத்திற்கான அடிப்படை காரணிகளை உருவாக்கினர்.
காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பால் 1947 முதல் 1960 வரையிலும் செயற்கை மழைக்கான முயற்சிகள் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டன.
1960-ல் ஸ்னோய்மவுண்ட்டில் நடத்தப்பட்ட செயற்கை மழை சோதனையில் கணிசமான மழை பெய்ததாக புள்ளியியல் விவரங்கள் தெரிவிக்கின்றன.
செயற்கை மழைக்கான அடிப்படை காரணிகளில் பல உறுதியான மாற்றங்களை அமெரிக்க விஞ்ஞானி சிம்சன் செய்தார். நவீன மாறுதல்களை சீன நிபுணர் சாங் சியாங் குழுவினர் செய்தனர்.
செயற்கை மழை உருவாகும் விதம்
செயற்கை மழை உருவாக்கத்தில் மூன்று நிலைகள் உள்ளன. அவை
1.காற்றழுத்தத்தை உருவாக்குதல்
2.மழை மேகங்களை திரட்டுதல்
3.மழை மேகங்களை குளிரச் செய்தல்
காற்றழுத்தத்தை உருவாக்குதல்
எந்த இடத்தில் மழையை உண்டாக்க விரும்புகிறோமோ அந்த இடத்தில் முதலில் காற்றழுத்தத்தை உருவாக்க வேண்டும்.
காற்றழுத்தத்தை ஏற்படுத்த முதலில் கால்சியம் ஆக்ஸைடு, கால்சியம் கார்பைட், யூரியாவும் அம்மோனியம் நைட்ரேட்டும் கலந்த கலவை, உப்பும் யூரியாவும் கலந்த கலவை போன்றவற்றை மேகங்களின் மீது கனரக துப்பாக்கிகள், பீரங்கிகள் மூலமாகவும், வானூர்த்திகள் மூலமாகவும் தூவப்படுகின்றன.
இந்த வேதிப்பொருட்கள் வானிலையில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுகின்றன. இதனால் அவ்விடத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்படுகிறது. காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழைமேகங்கள் உருவாகுகின்றன.
மழைமேகங்களை திரட்டுதல்
இந்நிலையில் மழைமேகங்கள் ஒன்றுகூட்டி திரட்டப்படுகின்றன. அதாவது யூரியா, சமையல் உப்பான சோடியம் குளோரைடு, அம்மோனியம் நைட்ரேட், உலர்பனி ஆகியவற்றைத் தூவி மழைமேகங்களின் கனமானது அதிகரிக்கப்படுகிறது.
சில நேரங்களில் மழைமேகங்களை திரட்ட கால்சியம் குளோரைடும் பயன்படுத்தப்படுவது உண்டு.
மழைமேகங்களைக் குளிரச் செய்தல்
ஒன்றுதிரட்டப்பட்ட மேகங்களின்மீது வெள்ளி அயோடைடு, உலர் பனிக்கட்டி ஆகியவை தூவப்பட்டு மேகங்கள் குளிர்விக்கப்படுகின்றன. குளிர்ந்த மேகங்களில் இருந்து நீர்துளியானது மழையாகப் பெய்கிறது.
சிலநேரங்களில் மழைமேகம் கருத்திருந்தும் மழையானது பெய்வதில்லை. மேகமானது மிகவும் குளிர்ந்திருப்பதே காரணம்.
மேகத்தின் வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரிக்கும் குறையும்போது நீரானது பனிக்கட்டியாக மாறாமல் திரவ நிலையிலேயே இருக்கும். இதன்மீது வெள்ளி அயோடைடு அல்லது உலர்பனிக்கட்டியை தூவும்போது நீரானது பனிகட்டியாக மாறி அதிக அடர்த்தியின் காரணமாக உடைந்து வானிலையில் ஏற்படும் வெப்ப மாற்றத்தினால் பனிகட்டியானது நீராகி மழையாக பெய்கிறது
இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நிலைகளிலும் உத்திகளை வடிவமைப்பது, செயல்படுத்துவது, கண்காணிப்பது மற்றும் திறனாய்வு செய்வது போன்றவை அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக மேகங்களின் வெப்பநிலையானது பூஜ்ஜியம் டிகிரி இருந்தால் அவை வெப்ப மேகங்கள் என்றும், பூஜ்ஜியம் டிகிரிக்கு குறைவாக இருந்தால் அவை குளிர்ந்த மேகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
வெப்ப மேகங்களை குளிர்விக்கும்போது நீர்திவலைகளின் அடர்த்தி அதிகரித்து மேகங்களின் அடியிலிருந்து மழையானது பெய்கிறது. குளிர் மேகங்களை குளிர்விக்கும்போது பனிக்கட்டியின் அடர்த்தி அதிகரித்து அவை உடையும்போது வானிலையில் ஏற்படும் வெப்ப மாற்றத்தினால் பனிகட்டியானது நீராகி மழையாக பெய்கிறது.
செயற்கை மழையின் விளைவுகள்
செயற்கை மழைக்காக பயன்படுத்தப்படும் வெள்ளி அயோடைடு பாலூட்டிளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யும்.
வெள்ளி அயோடைடின் அளவானது அதிகரிக்கும்போது தோலின் நிறம் மாற்றம், மறதி போன்றவற்றை உண்டாக்கும்.
செயற்கை மழையால் பனிக்கட்டி ஏரிகளில் உள்ள தாவரங்கள் பூப்பதில் பிரச்சினைகள் ஏற்படுவதாக சுற்றுசூழல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
பாதுகாக்கப்பட்ட இனங்களுக்காக ஆஸ்திரேலியாவில் செயற்கை மழையானது நிராகரிக்கப்பட்டுள்ளது.
செயற்கை மழையினை ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெய்ய வைக்கும்போது அது மற்ற இடத்தில் ஏற்படும் இயற்கை மழை பொழிவினை பாதிக்கிறது.
செயற்கை மழைக்காக முயற்சிக்கும்போது சில நேரங்களில் மழை பெய்வதில்லை. மற்ற சில நேரங்களில் அதிக அளவு மழையானது குறைந்த அளவு நேரத்தில் பெய்து வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்துகிறது.
செயற்கை மழைக்காக அதிக பொருட்செலவு ஆவதும் குறிப்பிடத்தக்கது.
அடிக்கடி செயற்கை மழையை பெய்ய அதிகளவு வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவதால் சுற்றுசூழல் பாதிப்பினைச் சந்திக்கலாம்.
இந்தியாவில் தமிழ்நாட்டில் 1983-ல் வறட்சியின் காரணமாக செயற்கை மழை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது. 2003, 2004 ஆண்டுகளில் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர மாநிலங்களில் செயற்கை மழை முயற்சிகள் எடுக்கப்பட்டன.
-வ.முனீஸ்வரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!