சொர்க்கமே என்றாலும்! – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

வாய்க்கால் மதகில் ஒரு பெரியவர் உட்கார்ந்து இருந்தார். கையில் சுருட்டு புகைந்து கொண்டு இருந்தது. அருகில் ஒரு தொரட்டு குச்சி இருந்தது.

அவரை சுற்றி இருந்த வயல்வெளிகளில் சீமைக் கருவேலங்காய்களை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. ஆடுகளையே உற்று பார்த்துக் கொண்டு தன் மனக்காயங்களை புகை விட்டு ஆற்றிக் கொண்டிருந்தார் தாத்தா.

சாயங்காலம் நாலரை மணி. பள்ளிக்கூடம் விட்டு குழந்தைகள் எல்லாம் மண் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

சுதீஷ் கையில் புத்தகப் பையுடன் வேகமாக ஓடி வந்து தாத்தாவின் அருகே நின்றான்.

சுய உணர்வுக்கு வந்த தாத்தா சுருட்டை தூர வீசி விட்டு, சுதீஷை தூக்கி மடியில் உட்கார வைத்தார்.

“தாத்தா என்ன பண்ணிக்கிட்டு இருக்க? இந்த ஆடுகளையே பார்த்துட்டு இருக்கயே ! ஏன் ஆடுகள் சரியா மேயலையா?” என்று கேட்டான் சுதீஷ்.

“இந்த வயக்காட்டுல மேயிறதுக்கு என்ன இருக்குது? பாவம் அதுங்க இந்த கருவக்காய போட்டு மெண்டுகிட்டு இருக்குதுங்க. எப்படி இருந்த ஊரு! இப்படி ஆயிடுச்சே.”

“ஏன் என்ன ஆச்சு தாத்தா?”

தாத்தா பேச ஆரம்பித்தார்.

“இப்போ ஆடு மாடு மேய கூட இடமில்லாமல் போச்சு. இருபது, முப்பது வருஷத்துக்கு முன்னால இதே ஊர்ல கொறஞ்சது வீட்டுக்கு ஏழு எட்டு ஆடு மாடுங்க இருக்கும். வீட்டுக்கு ஒருத்தர் ரெண்டு பேரு ஆடு மாடு மேய்க்க வந்திருவோம்.

எப்படியும் ஒரு ஏழெட்டு பசங்க மாடு மேய்க்க வந்துருவாங்க. காலையில ஆடு மாடெல்லாம் ஓட்டிக்கிட்டு வந்து ஆத்தங்கரையில விட்டா, அது பாட்டுக்கு மேஞ்சுக் கிட்டே பாலத்தடி பக்கம் வந்திடும்.

மாடுக மேஞ்சிக் கிட்டே போகப் போக நாங்களும் ஆத்துப் பூசார மரம், நருவுலி மரம், ஆலமரம், தேக்கு மரம்னு ஒவ்வொரு மரத்தடியா மாறி மாறி போய்கிட்டு இருப்போம். போறதுன்னா சும்மால்லை.

மாட்ட ஒரு பக்கம் விட்டுட்டு நாங்க ஒரு பக்கம் கிட்டிப் புல்லு, பம்பர கட்ட, நாடு ஒழிஞ்சாங்கண்டுனு அந்த அந்த பருவத்திற்கு தகுந்த மாதிரி நாங்க விளையாடிட்டு போயிட்டு இருப்போம்.

அப்போ ஊர்ல ஒன்னு ரெண்டு கால்வாதான் இருக்கும். அதுல நாலஞ்சடி மண்ணெடுத்து கல்லறுப்பாங்க. ஆத்துல தண்ணி வர்ற காலத்துல இந்த குழி நெம்பி குளம் மாதிரி இருக்கும்.

ஒன்னு ரெண்டுதான் கால்வா கொல்லை. மீதி உள்ள ஆத்துப்படுவ பூரா ஏதாவது
பயிர்ச் செலவு பண்ணிட்டு இருப்பாங்க. ஆத்துல ஊத்து தோண்டி தண்ணி இரைச்சி சவாரிகட்ட கிழங்கு ஒருத்த, மொளகா ஒருத்த போட்டு இருப்பாங்க.

ஒரு கொல்லையில வெண்டி, கத்தரி வெள்ளரிக்காய்னு ஏதாவது போட்டிருப்பாங்க. கொல்லையை எல்லாம் சுத்தி மூங்கில் வேலி போட்டு வேலில அவுத்தி, கிளுவ முருங்க, கண்ணால முருங்க, பூவரசம் போத்து ஊனி கட்டி வச்சிருப்பாங்க. உள்ளே போறதுக்கு மட்டும் பூட்ட தொறக்க ஒரு படல் போட்டு இருப்பாங்க.

யாரும் இல்லைனா நாங்க தெரியாம உள்ள போயி கிழங்க புடிங்கியாந்து, முள்ளு பத்தையை கொளுத்தி விட்டு சுட்டுத் தின்போம். கிழங்கு இல்லாத சமயத்துல யாரு கொல்லையில வெள்ளரிக்காய் இருக்கோ அது.

அப்புறம் தேங்காய் கிடைச்சா அதோட உச்சிக் குடும்பிய பிச்சு அதோட மூணு கண்ணுல ஒண்ணுல ஓட்டையை போட்டு தண்ணிய குடிச்சிட்டு அந்த ஓட்டைக்குள்ள சர்க்கரை, பொட்டுக்கடலை, அவுல் எல்லாம் போட்டு ஒரு மூங்கில் குச்சி வச்சு ஓட்டையை அடைச்சிட்டு முள்ளு பத்தையில போட்டு கொளுத்தி சுடுகா போட்டு விடுவோம்.

கொட்டஞ்சில்லாம் எரிஞ்சி உள்ளே இருக்கிற தேங்காய் சக்கர, கடலை, அவுல் எல்லாம் வெந்து போயி அதை தின்னம்னா அவ்ளோ ருசியா இருக்கும்.

அது முடிஞ்சு அடுத்தது பனம்பழம். பனம்பழம் வேணாமுனாலும் அந்த வாசனை எங்களை விடாது. உடனே அதை பொறுக்கியாந்து முள்ளு பத்தையை கொளுத்தி விட்டு சுட்டு தின்னுட்டு கால்வா குழியில போய் குதிச்சு ஒரே குதியாலம் போடுவோம்.

மாடெல்லாம் ரோட்ட தாண்டி, வாய்க்காலை தாண்டி, வயலுக்கு போனதுகூட தெரியாம நாங்க குதியாலம் போடுவோம்.

யாராவது பெரியவங்க வந்து “மாட எல்லாம் வயல்ல உட்டுட்டு இங்க வந்து குதியாலமா போடுறீங்க? குதியாலம்ன்னு” கேட்டுக்கிட்டே ஒரு நல்ல சிம்பு குச்சியை ஒடிச்சிட்டு வந்து முதுகுலையே ஆளுக்கு ரெண்டு வைப்பாங்க. எல்லோரும் கரையேறி ஆளுக்கு ஒரு பக்கமா ஓடிடுவோம்.”

“ஹா ஹா அப்புறம் தாத்தா”

“ஆத்துப் படுவ பூரா விவசாயம் நடந்துச்சு.அந்த விவசாயத்துல ஒரு பகுதியா ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்புன்னு எல்லாமே செழிப்பாதான் இருந்துச்சு. அவ்ளோ ஆடு மாடுகளும் மேயறதுக்கு இடமும் இருந்துச்சு.

இப்போ ஊருக்கு ஒரு மாடு ரெண்டு மாடு தான் இருக்குது. அதுவும் சீமமாடுதான். சில வீட்ல அதுவும் இல்லாம இருக்குது. அப்படி இருந்தும் ஆடு மாடு மேயறதுக்கு இடமும் இல்லை.

இருக்கிற இடத்திலையும் மேயறதுக்கு ஒண்ணுமே இல்லை. விவசாயம் பண்ணுன நம்ம ஆளுவோ எல்லாம் நம்ம பட்ட கஷ்டம் நம்ப புள்ளைங்க படக்கூடாதுன்னு யோசிச்சு பிள்ளைகளை எல்லாம் படிக்க வச்சு வேலைக்கு போங்கடானுட்டாங்க.

படிச்ச புள்ளைங்க எல்லாம் விவசாயத்தை விட்டுட்டு மம்பட்டிய தூக்கி தூர போட்டுட்டாங்க.

விவசாயம் பண்ணின இடத்திலெல்லாம் சீம கருவ மண்டி கிடக்குது. இந்த காட்டு கருவ மரம் இருக்குதே இது நம்ம நாட்டு மரமே இல்லை. இந்தக் கருவ மரங்கள் எல்லாம் நிலத்தடி நீரை எல்லாம் உறிஞ்சி குடிச்சுபுடுதுங்க.

கருவ மண்டுன இடத்தில வேற மரமோ புல்லோ பூண்டோ எதுவுமே முளைக்காது.

விவசாயம் பண்ணின நம்ம ஆளுவோ வேலை தேடி போனதும் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் கிராமத்தை எல்லாம் கூறு போட ஆரம்பிச்சிட்டாங்க. அது மட்டுமா பருவம் தவறி பெய்கிற மழையினால விவசாயமும் பண்ண முடியல.

ஊரில் இருக்கிற குடிகளும் மூட்டை முடிச்சை கட்டிடுவாங்க போல இருக்குது. இதே நிலைமை நீடிச்சா நாளைக்கு நீங்க எல்லாம் வெளிநாட்டுக்காரன் கிட்ட கையேந்தி தான் நிக்கணும் போல இருக்குது.”

“தாத்தா நீ ஒன்னும் கவலைப்படாத தாத்தா. இப்போ நிலைமை ரொம்பவே தலைகீழ மாறிக்கிட்டு இருக்குது. நம்ப நாட்டு அரசாங்கம் விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுத்து விவசாயக் கல்லூரிகள் எல்லாம் ஆரம்பிச்சு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வராங்க. விவசாயமும் பெருகும். நம்ப நாடும் வளம் பெறும் தாத்தா”

“சரி சரி வாடா பேராண்டி. மழை வர்ற மாதிரி இருக்குது. ஆட்டையெல்லாம் ஓட்டு. உன்னோட ஆத்தா வேற தேடிட்டு இருப்பா.” என்று தாத்தா கூற இருவரும் ஆட்டை ஓட்டிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தனர்.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.