டர்னிப் பற்றி தெரிந்து கொள்வோம்

டர்னிப் பிரபலமான வேர்பகுதியிலிருந்து கிடைக்கும் கிழங்கு வகை காயாகும். இக்காய் மனிதர்களுக்கான உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும் உலகளவில் பிரபலமானது.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இக்காய் உணவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது பிராசிகாசியா என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. முட்டைக்கோஸ், காலே, பிரவுஸ் ஆகியோர் இதன் உறவினர்கள் ஆவர்.

டர்னிப்பின் தாவரவியல் பெயர் ப்ராசிகா ரப்பா என்பதாகும். இது மிதவெப்ப மண்டலத்தில் நன்கு செழித்து வளரும் வளரியல்பினை உடையது. இதன் தாயகம் வடக்கு ஐரோப்பா எனக் கருதப்படுகிறது.

இளமையான இனிப்பான டர்னிப்புகள் மனிதர்களுக்கு உணவாகவும், விளைந்த டர்னிப்புகள் கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

டர்னிப்பின் கிழங்கும், இலைகளும் அதிக சத்துக்களைக் கொண்டுள்ளன. ஆசியா, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் டர்னிப்பின் இலைகள் உண்ணப்படுகின்றன.

கிரேக்க மற்றும் ரோமானிய நாகரிகங்களில் இக்காய் பயன்பாட்டில் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

டர்னிப் ஈராண்டுகள் வாழும் தாவர வகையைச் சார்ந்தது. முதல் ஆண்டில் ஸ்டார்சினை தனது வேர்ப் பகுதியில் சேகரித்து வைத்துக் கொள்கிறது.

இரண்டாவது ஆண்டில் மஞ்சள் நிற உயரமான பூக்களைத் தோற்றுவிக்கிறது. பின் அதிலிருந்து பட்டாணியைப் போன்ற காயினைக் காய்த்து விதைகளை உற்பத்தி செய்கிறது. விதைகள் உற்பத்திக்குப் பின் இச்செடியானது மடிந்து விடுகிறது.

 

டர்னிப் பூ
டர்னிப் பூ

 

டர்னிப்செடியானது வளரும்போது ஏழு மாதத்திற்கு மேல் குளிர்காலம் வந்தால் செடியானது முழுவதுமாக பிடுங்கப்பட்டு இலைகள் வாடாமல் பாதுகாக்கப்படுகிறது.

பின் வசந்த காலத்தில் மீண்டும் நடப்பட்டு விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

டர்னிப்பின் மேல்தோலானது அடிப்புறத்தில் வெள்ளைநிறமாகவும், மேற்புறத்தில் வைலட் நிறமாகவும் காணப்படுகிறது. சூரியஒளிபடும் பகுதியானது வைலட் நிறத்தில் காணப்படுகிறது.

டர்னிப்பானது இனிப்பாக உருளைக்கிழங்கின் சுவையினை ஒத்து உள்ளது. மேலும் இக்காய் உருளைக்கிழங்கினைப் போன்ற சத்துக்களைக் கொண்டும், உருளைக்கிழங்கின் எரிசக்தியைப்போன்று மூன்றில் ஒருபங்கு எரிசக்தினையும் கொண்டுள்ளது.

 

டர்னிப்பில் உள்ள சத்துக்கள்

டர்னிப்பில் விட்டமின்கள் சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்) ஆகியவை அதிகளவில் காணப்படுகின்றன.

விட்டமின் இ மற்றும் கே ஆகியவற்றையும் இக்காய் கொண்டுள்ளது. மேலும் இதில் கால்சியம், பொட்டாசியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்கள் காணப்படுகின்றன.

குறைந்த அளவு எரிசக்தி, கார்போஹைட்ரேட், புரோடீன், அதிகளவு நார்சத்து ஆகியவை இக்காயில் காணப்படுகின்றன. மேலும் இதில் பைட்டோநியூட்ரியன்களான ஆல்பா கரோடீன், பீட்டா கரோடீன், லுடீன் ஸீஸாத்தைன் ஆகியவை உள்ளன.

 

டர்னிப்பின் மருத்துவப் பண்புகள்

இதய நலத்திற்கு

டர்னிப்பில் நமது உடல் சரிவர இயங்கத் தேவையான நார்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.

பொட்டாசியமானது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய இரத்த நாளங்களை சரிவர செயல்படச் செய்கிறது. இந்நிகழ்வு ஆத்தோரோக்ளெரோசிஸ் வளர்ச்சியைத் தடைசெய்கிறது. அதேபோல் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது.

இக்காயில் உள்ள நார்சத்தானது இதயத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை கழிவாக வெளியேற்றுகிறது. எனவே டர்னிப்பினை உண்டு உடல்நலத்தைப் பேணலாம்.

 

நல்ல செரிமானத்திற்கு

செரிமானம் நன்கு நடைபெற நார்ச்சத்து மிகவும் அவசியம். நார்ச்சத்தானது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, தசைப்பிடிப்பு மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

மேலும் நார்ச்சத்து தீவிரமான இரைப்பை பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் உள்ளது. நார்சத்தானது உடலானது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் துணைபுரிகிறது. எனவே அதிக நார்ச்சத்தினைக் கொண்டுள்ள டர்னிப்பினை உண்டு நல்ல செரிமானத்தைப் பெறலாம்.

 

ஆரோக்கியமான இரத்த ஓட்டத்திற்கு

டர்னிப்பில் உள்ள அதிக இரும்புச்சத்தானது இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து அனீமியாவைத் தடுக்கிறது.

இரத்த சிவப்பு அணுக்கள் உடல் உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதோடு உடல் உறுப்புக்கள் நன்கு இயங்கவும், உறுப்புகளை பழுதுபார்க்கவும் பயன்படுகின்றன.

எனவே இரும்புச்சத்தினை அதிகம் கொண்டுள்ள டர்னிப்பினை உண்டு இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கைப் பெருக்கி ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தைப் பெறலாம்.

 

நோய் தடுப்பாற்றலைப் பெற

டர்னிப்பில் விட்டமின் சி-யானது அதிகளவு காணப்படுகிறது. விட்டமின் சி-யானது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியினை பெருகச் செய்கிறது.

இந்த வெள்ளை அணுக்கள் உடலுக்கு நோய் தடுப்பாற்றலை வழங்குகின்றன. மேலும் சாதாரண சளி, இருமலிருந்து நாள்பட்ட நோய்களான புற்றுநோய், இதயநோய் ஆகியவற்றையும் தடுக்க நோய் தடுப்பாற்றால் அவசியம். எனவே டர்னிப்பினை உண்டு நோய் தடுப்பாற்றலைப் பெறலாம்.

 

எலும்புகளின் நலத்திற்கு

டர்னிப் அதிகளவு கால்சியம் மற்றும் மாங்கனீசைக் கொண்டுள்ளது. இவை உடலில் உள்ள எலும்புகளுக்கு வலிமை அளிப்பதோடு அவை வளர்வதற்கும் உதவுகின்றன.

கால்சியமானது எலும்பு வளர்ச்சிக்கு அவசியமான தாதுஉப்பாகும். எலும்புகள் பலமாக இருந்தால்தான் வயதான காலத்தில் ஏற்படும் வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோஸிஸ் நோயினைத் தடுக்க முடியும். எனவே டர்னிப்பினை உண்டு எலும்புகளின் நலத்தினைப் பேணலாம்.

 

புற்றுநோயினைத் தடுக்க

டர்னிப்பில் விட்டமின் சி, இ, மாங்கனீசு, பீட்டா கரோடீன் போன்ற ஆன்டிஆக்ஸிஜென்டுகள் காணப்படுகின்றன. இவை செல் உருவாக்கத்தின்போது ஏற்படும் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டிலிருந்து உடலினை பாதுகாத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

ஆன்டிஆக்ஸிஜென்டுகள் அதிகம் உள்ள டர்னிப் போன்ற உணவுகளை உண்ணும்போது புற்றுநோய் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

 

எதிர்ப்பு அழற்சி பண்புகள்

கசப்பான டர்னிப் கீரையில் அழற்சி நோய்களைத் தடுக்கும் விட்டமின் கே மற்றும் ஒமேகா-3 அமிலம் ஆகியவை காணப்படுகின்றன.

ஒமேகா-3 அமிலம் உடலின் அழற்சி நோயைத் தடுப்பதோடு கொலஸ்ட்ரால் அளவினையும் சரிசெய்து உடலினை நோயிலிருந்து பாதுகாக்கிறது. எனவே டர்னிப்பின் இலைகளை உண்டு கீல்வாதம், மூட்டு வலி ஆகியவற்றிற்கு தீர்வு பெறலாம்.

 

சீரான வளர்ச்சிதை மாற்றத்திற்கு

விட்டமின் பி தொகுப்புகள் உடலின் நொதிகள் மற்றும் ஹார்மோன்களின் சுரப்பு மற்றும் செயல்பாட்டிற்கு மிகவும் அவசியமானது. டர்னிப் காயானது விட்டமின் பி தொகுப்புக்களை அதிகம் கொண்டுள்ளது.

எனவே இதனை உண்டு சீரான வளர்சிதை மாற்றத்தோடு உறுப்புகளின் செயல்பாடு மற்றும் ஹார்மோன்களின் சுரப்பினையும் சீராக்கலாம்.

 

டர்னிப்பினைப் பற்றிய எச்சரிக்கை

டர்னிப்பில் தைராய்டு சுரப்பின் செயல்பாட்டினைத் தடுக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. எனவே தைராய்டு குறைபாடுள்ளவர்கள் இக்காயினை தவிர்ப்பது நலம்.

டர்னிப் கீரை மற்றும் கிழங்கில் குறிப்பிட்ட அளவு ஆக்ஸாலிக் அமிலம் உள்ளது. எனவே சிறுநீரகம் மற்றும் சிறுநீர்பாதையில் கற்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. எனவே சிறுநீரக கற்கள் பிரச்சினையினால் அவதிப்படுவோர் டர்னிப்பினைத் தவிர்ப்பது நலம்.

 

டர்னிப்பினை வாங்கும் முறை

டர்னிப் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய காய் ஆகும். எனினும் அக்டோபர் முதல் மார்ச் வரை அதிகளவு கிடைக்கிறது.

டர்னிப் கிழங்கினை வாங்கும்போது புதிதாகவும், விறைப்பாகவும், அளவில் சிறியதாகவும், கையில் தூக்கும்போது கனமானதாகவும் இருக்குமாறு வாங்க வேண்டும்.

அளவில் பெரிய, புள்ளிகளுடன் காயம்பட்ட கிழங்குகளைத் தவிர்க்கவும். பைகளில் இக்காயினை வைத்து குளிர்பதனப் பெட்டியில் சில வாரங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

டர்னிப்பினை பயன்படுத்தும்போது நன்கு கழுவி மேல்புற தோலினை நீக்கி பயன்படுத்தப்படுகிறது.

டர்னிப்பினை அப்படியேவோ சமைத்தோ உண்ணலாம். ஊறுகாய்கள், சாலட்டுகள் தயார் செய்ய இக்காய் பயன்படுகிறது.

நலம் பயக்கும் டர்னிப்பினை உணவில் சேர்த்து உடல் நலம் காப்போம்.

-வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.