தமிழ்நாட்டின் காலநிலை

தமிழ்நாட்டின் காலநிலை என்பது வெப்ப மண்டல வகையைச் சார்ந்தது. ஆண்டுக்கு இருமுறைகள் சூரியனின் செங்குத்தான ஒளிக்கதிர்கள் தமிழ்நாட்டில் விழும்.

தமிழ்நாட்டின் காலநிலை மித ஈரப்பதமானது முதல் வறண்டதாக உள்ளது. தமிழ்நாட்டில் மழைப்பொழிவு பெரும்பாலும் பருவக்காற்றை நம்பியே உள்ளது. பருவக்காற்று பொய்க்கும்போது வறட்சி  ஏற்படுகிறது.

வானிலை

ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வளிமண்டலத்தில் காணப்படும் சூழல் வானிலை என்று அழைக்கப்படுகிறது.

காலநிலை

ஒரு பெரிய பரப்பிற்கான நீண்ட கால சராசரி வானிலை அல்லது இயல்பான வானிலைக்கு காலநிலை என்று பெயர். பொதுவாக சராசரி வானிலை என்பது சுமார் 30 வருடங்களுக்கு ஆனதாகும்.

வெப்பநிலை, அழுத்தநிலை, காற்று, ஈரப்பதம், மேகங்கள் மற்றும் மழைப்பொழிவு போன்றவை முக்கிய காலநிலைக் கூறுகளாகும்.

தமிழ்நாட்டின் காலநிலையைப் பாதிக்கக்கூடிய காரணிகள் இரண்டு ஆகும். அவை 1. சூரியனின் கதிர்கள் பூமியில் படும் கோணம். 2. மழையைத் தருவிக்கும் பருவக் காற்றுகளினால் உண்டாகும் நேரடிக் தாக்கம்.

தமிழ்நாடு காலநிலை வெப்பமண்டலத்தைச் சார்ந்தபோதும் அதன் உள்நாட்டு வானிலை, சூழல் காரணமாக வெப்பநிலை, ஈரப்பதம், மேகங்களின் அமைப்பு மற்றும் காற்று வீசும் திசை ஆகியவற்றால் இதனை வெப்ப மண்டல பிரதேசங்களிலிருந்து பெரிதும் வேறுபடுத்துகின்றன.

தமிழ்நாட்டின் பருவங்கள்

கோடைகாலம்

கோடைகாலம்
கோடைகாலம்

தமிழ்நாட்டில் வெப்பமானது பிப்ரவரி இரண்டாவது வாரத்திலிருந்து ஒரே சீராக உயரத் தொடங்குகிறது. மார்ச் முதல் கோடைகாலம் ஆரம்பமாகிறது.

ஏப்ரல், மே மாதங்களில் வெப்பநிலை அதிக அளவு இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மே மாதம் ஆண்டின் வெப்பமிகு மாதமாகும்.

ஏப்ரல் மே மாதங்களில் வெப்பக் காற்று 8-16 கிமீ/மணி வேகத்தில் வீசுகிறது. தமிழ்நாட்டின் கோடைகாலத்தில் வெப்பம் அதிக பட்சமாக உள்நாட்டுப்பகுயில் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகிறது.

கோடை காலத்தின் அதிக வெப்பமான காலம் அக்னி நட்சத்திரம் அல்லது கத்தரி வெயில் என்று அழைப்படுகிறது. இந்நிகழ்வு மே மாதம் ஏற்படும். தமிழ்நாட்டில் மே மாதத்தில் காற்றின் ஈரப்பதம் 68 சதவீதமாக உள்ளது.

மழைக்காலம்

மழைக்காலம்
மழைக்காலம்

தமிழ்நாட்டின் ஜூன் இரண்டாவது வாரம் முதல் வெப்பம் படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் மழைப்பொழிவு மூன்று விதங்களாகப் பெறப்படுகிறது.

அவை தென்மேற்குப் பருவக்காற்று மழைப்பொழிவு, வடகிழக்குப் பருவக்காற்று மழைப்பொழிவு, சூறாவளிக் காற்று மழைப்பொழிவு ஆகும்.

தென்மேற்கு பருவக்காற்று மழைப்பொழிவு

இப்பருவக்காற்று காலம் ஜீன் முதல் செப்டம்பர் வரை ஆகும். நீலகிரி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம், கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்கள் இம்மழைப் பொழிவால் பயனடைகின்றன.

தென்மேற்குப் பருவக்காற்று மழை மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதியில் முதலில் தொடங்குவதால் அங்கு சராசரியாக 150 செமீ மழையைப் பொழிகின்றது.

இப்பருவக்காற்று தென்மேற்கு திசையில் வீசுவதன் காரணமாக தமிழ்நாட்டின் உட்பகுதிகள் இப்பருவ மழைக்கு மறைவுப் பிரதேசமாகிறது.

இதனால் இப்பருவ மழையின் போது பொதுவாக மழையின் அளவு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி செல்ல செல்ல குறைகிறது.

அதிகபட்சமாக 70 சதவீதம் மழை நீலகிரி மாவட்டத்திலும் அதனைத் தொடர்ந்து சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் அதிக மழையைப் பெறுகின்றன. இப்பருவக்காற்றால் அதிக மழையைப் பெறும் மாவட்டம் கன்னியாகுமரி ஆகும்.

வடகிழக்குப் பருவக்காற்று மழைப்பொழிவு

தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குக் பருவ மழைப்பொழிவு காணப்படுகின்றது. இப்பருவ மழையால் தமிழ்நாட்டின் கடலோர மற்றம் உள்நாட்டு சமவெளிப் பகுதிகள் அதிக மழைப் பொழிவைப் பெறுகின்றன.

இப்பருவ காலத்தில் வடகிழக்கு பருவ மழையும், சூறாவளி மழையும் இணைந்தே மழைப்பொழிவைத் தருகின்றன. இப்பருவ மழையின் போது கிழக்கிலிருந்து மேற்காக மழைப்பொழிவின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.

இப்பருவ மழையால் கிழக்கு மாவட்டங்கள் அதிக மழைப்பொழிவையும், மத்திய மேற்கு மாவட்டங்கள் குறைவான மழைப்பொழிவையும் பெறுகின்றன.

கடலோர மாவட்டங்களில் கன்னியாகுமரியைத் தவிர மற்ற கடற்கரை மாவட்டங்களான சென்னை, கடலூர், திருவள்ளுர், காஞ்சிபுரம், நாகபட்டினம், திருவாரூர், திருநெல்வேலி மாவட்டங்கள் 150 செமீ முதல் 200 செமீ வரை மழைப்பொழிவையும்,

திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் 100 முதல் 150செமீ மழைப்பொழிவினையும் இப்பருவக்காற்று மூலம் பெறுகின்றன.

சூறாவளி மழைப்பொழிவு

தமிழ்நாட்டிற்கு நவம்பர் மாதம் சூறாவளி மழைப்பொழிவு காலமாகும். வங்கக்கடலின் தென்பகுதியில் ஏற்படுகின்ற காற்று அழுத்த வேறுபாட்டினால் தாழ்வு அழுத்தப்பகுதி உண்டாகி, மேலும் தீவிரமடைந்து சூறாவளியாக மாறுகிறது.

வடகிழக்குப் பருவமழையும், சூறாவளி மழையும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு சமமான மழைப் பொழிவினைத் தருகின்றன.

தமிழ்நாடு 22 சதவீத மழைப் பொழிவினை தென்மேற்கு பருவக்காற்றாலும், 57 சதவீத மழைப் பொழிவினை வடகிழக்குப் பருவக்காற்றாலும், 21 சதவீத மழைப்பொழிவினை சூறாவளி மழைப் பொழிவினாலும் பெறுகிறது.

தமிழ்நாட்டில் ஆண்டின் சராசரி மழையளவு 945 மிமீ ஆகும். கன்னியாகுமரி மாவட்டம் மூன்று பருவகாலங்களிலும் மழைப்பொழிவினைப் பெறுகின்றது. ஆண்டின் மொத்த மழை அளவில் குறைந்த அளவு மழையை கோயம்புத்தூர் மாவட்டம் பெறுகின்றது.

ஆண்டின் மழையளவினைப் பொறுத்து தமிழ்நாட்டின் மாவட்டங்களை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம்.

மிகக்குறைவான மழைப் பொழிவு பெறும் மாவட்டம் (800 மிமீக்கு கீழ்) – கோயமுத்தூர்

குறைவான மழைப் பொழிவு பெறும் மாவட்டங்கள் (800-1000 மிமீ வரை) – நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ஈரோடு, தருமபுரி, மதுரை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி.

மிதமான மழைப் பொழிவு பெறும் மாவட்டங்கள் (1000-1200 மிமீ வரை) – புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தஞ்சாவூர், சேலம், இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, வேலூர்.

அதிக மழைப் பொழிவு பெறும் மாவட்டங்கள் (1200-1400 மிமீ வரை) – திருநெல்வேலி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி

மிகஅதிக மழைப் பொழிவு பெறும் மாவட்டங்கள் (1400 மிமீ மேல்) – காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், திருவள்ளுர், திருவாரூர், கடலூர், நாகபட்டினம், நீலகிரி.

குளிர்காலம்

குளிர்காலம்
குளிர்காலம்

ஜூன் இரண்டாவது வாரத்திலிருந்து வெப்பம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கி வடகிழக்கு பருவக்காற்றுக் காலம் முடிந்தும் பிப்ரவரி வரை நீடிக்கிறது. ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் குளிர் மிகுந்த மாதமாகும். குளிர் காலத்தில் மலைப்பகுதிகளில் வெப்பம் மிகக்குறைந்து குளிராகக் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தில் காற்றின் ஈரப்பதம் 82 சதவீதமாக உள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.