தமிழ்நாட்டின் டாப் 10 அருவிகள்

தமிழ்நாட்டின் டாப் 10 அருவிகள் எவை என்று பார்ப்போம்.

அருவிகள் என்றவுடன் ஓ என்ற பேரிரைச்சலுடன் ஆர்ப்பரித்து விழும் நீரும், உற்சாக அருவிக் குளியலால் மனம் மற்றும் உடல் பெறும் புத்துணர்ச்சியும் நினைவுக்கு வரும்.

பரபரப்புடன் கிளம்பி அரைகுறையாக உண்டு ஆடிஓடி வேலை செய்து அலுத்து வீடுதிரும்பும் அன்றாட நிகழ்வுகளால் ஏற்படும் மன மற்றும் உடல் சோர்விற்கு அருவிக் குளியல் அருமையான மருந்தாகும்.

அப்படிப்பட்ட அருமையான குளியலை மேற்கொள்ள தமிழ்நாட்டின் டாப் 10 அருவிகள் பற்றிப் பார்ப்போம்.

 

ஆகாய கங்கை அருவி

ஆகாய கங்கை அருவி
ஆகாய கங்கை அருவி

இவ்வருவி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிழத்குத் தொடர்ச்சி மலையின் கொல்லிமலைப் பகுதியில் உள்ளது. அய்யாறு என்ற ஆறே ஆகாய கங்கை அருவியாக விழுகிறது.

இவ்வருவி பார்ப்பதற்கு ஆகாயத்தில் இருந்து கங்கையானது அருவியாகக் கொட்டுவது போல் இருக்கிறது. 300 அடி உயரத்தில் இருந்து விழும் இவ்வருவி காண்போரைத் திகைக்கச் செய்கிறது.

இவ்வருவிக்கு அருகில் அரப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இவ்விடம் மலைகளால் சூழப்பட்டுள்ள பள்ளத்தாக்குப் பகுதியாகும். இந்த அருவிக்குச் செல்ல தமிழக சுற்றலாத்துறை படிக்கட்டுகளை அமைத்துள்ளது.

இவ்வருவி அமைந்துள்ள காட்டுப்பகுதியில் கோரக்கர் மற்றும் கலாங்கி நாதர் சித்தர்களின் குகைகள் காணப்படுகின்றன.

இவ்விடம் குளித்து மனம் மற்றும் உடல் புத்துணர்ச்சிப் பெறுவதற்கும் சுற்றுலா மேற்கொள்ள படகுவீடும், பூங்காவும் உள்ள சிறந்த இடமாகும்.

இவ்விடத்திற்குச் செல்ல நவம்பர் முதல் ஜனவரி வரை உள்ள காலம் ஏற்றதாகும்.

 

கும்பக்கரை அருவி

கும்பக்கரை அருவி
கும்பக்கரை அருவி

இவ்விடம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கொடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் பாம்பாறானது மலையில் பயணித்து மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவியாகக் கொட்டுகிறது.

மலையேற்றத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இவ்விடம் சரியான தேர்வாகும். ஆண்டு முழுவதும் இவ்விடத்தில் நீர் கொட்டுகிறது.

அருவிப்பகுதிகளைத் தவிர தண்ணீர் செல்லும் தடங்களிலுள்ள வழுக்குப்பாறை, யானை கஜம், பாம்பு கஜம், குதிரை கஜம் போன்ற பகுதிகளிலும் மக்கள் நீராடுகின்றனர்.

இத்தண்ணீர் தடப்பகுதிகளில் சில இடங்களில் குளிப்பது ஆபத்தானது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

மழைகாலங்களில் தண்ணீர் அதிகம் விழுவதால் இவ்விடத்தில் குளிக்க அனுமதியில்லை. வழுக்கும் இடங்களும், ஆழமான பகுதிகளையும் கொண்டுள்ளதால் இவ்விடத்தில் குளிக்கும்போது கவனமுடன் செயல்படுவது அவசியம்.

இவ்விடத்திற்குச் செல்ல அக்டோபர் முதல் மார்ச் வரை உள்ள காலம் ஏற்றதாகும்.

 

குரங்கு அருவி

குரங்கு அருவி
குரங்கு அருவி

இவ்விடம் கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலைப் பகுதியில் பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் வழியில் ஆழியார் அணையின் அருகே உள்ளது.

இவ்வருவி 60 அடி உயரத்தில் இருந்து விழுகிறது. இவ்வருவிக்கு மேலே வால்பாறை, டாப்ஹில்ஸ், கீழே ஆழியார் அணை ஆகிய சுற்றுலாத்தலங்கள் உள்ளன.

இவ்விடம் மலையேற்றத்திற்குச் சிறந்த இடமாகும். மலைகாலங்களில் இவ்விடத்தில் குளிக்க தடைவிதிக்கப்படுகிறது.

இவ்விடத்தைப் பார்வையிட ரூ15 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுவர்.

குரங்குகள் அதிகம் உள்ள பகுதியாதலின் கவனமாகச் செல்ல வேண்டும். இவ்விடத்தை அடைய போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.

இவ்விடத்திற்குச் செல்ல அக்டோபர் மற்றும் மார்ச் ஏற்றதாகும்.

 

கேத்தரின் அருவி

கேத்தரின் அருவி
கேத்தரின் அருவி

இவ்விடம் நீலகிரி மாவட்டத்தில் குன்னூரின் அருகே உள்ளது. கோத்தகிரி –மேட்டுப்பாளையம் சாலையில் அரவேணுவில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் உள்ளது.

நீலகிரி மலைப்பகுதியின் இரண்டாவது மிகப் பெரிய நீர்வீழ்ச்சியாகும். பசுமையான தேயிலைத் தோட்டங்களுக்கிடையே 250 அடி உயரத்தில் அழகிய முகடுகளின் வழியே வழிந்து பாறைகளை நனைத்து பார்வையாளர்களின் மனதையும் நனைக்கிறது. புகைப்படம் எடுக்க சிறந்த இடமாகும்.

இது நல்ல மலையேற்றத் தலமாவும் விளங்குகிறது. குன்னூரின் டால்பின் நோஸ் பார்வையிடத்திலிருந்து இவ்வருவியை காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும். கோத்தகிரியிலிருநது தனியார் வாகனங்கள் மூலம் இவ்விடத்தை அடையலாம்.

இவ்விடத்திற்குச் செல்ல அக்டோபர் முதல் மே வரை உள்ள காலம் ஏற்றதாகும்.

 

ஒக்கேனக்கல் அருவி

ஒக்கேனக்கல் அருவி
ஒக்கேனக்கல் அருவி

இவ்வருவி தர்மபுரி அருகே காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இவ்வருவி இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படுகிறது. இது பல அருவிகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.

அருவிகளில் தண்ணீர் அதிகமாக விழுவது கண்கொள்ளாக் காட்சியாகும். இவ்விடத்தில் காணப்படும் கார்பனேட் பாறைகள் உலகில் மிகப்பழமையானவையாக் கருதப்படுகின்றன.

கோடைகாலத்தில் ஆற்றில் வேகம் குறையும்போது இந்தப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களில் பரிசல்களில் பயணம் செய்வது அற்புதமானது.

அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியாதலால் கவனம் தேவை. காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.

இவ்விடத்திற்குச் செல்ல அக்டோபர் முதல் மார்ச் வரை உள்ள காலம் ஏற்றதாகும்.

 

சுருளி அருவி

சுருளி அருவி
சுருளி அருவி

இவ்விடம் தேனி மாவட்டத்தில் கம்பத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மேகமலையிலிருந்து உற்பத்தியாகி 40 அடி உயரத்திலிருந்து அருவியாகக் கொட்டுகிறது.

இவ்விடத்தில் சுருளிஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கிறது. இவ்வருவியின் அருகே குளியல் அறை, உடை மாற்றும் அறை மற்றும் குடிதண்ணீர் ஆகியவை கிடைக்கின்றன. கம்பத்திலிருந்து பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்டு மாதத்தில் தமிழ்நாடு சுற்றலாத்துறையின் சார்பில் இங்கு நடத்தப்படும் சாரல் திருவிழாவிற்கு மக்கள் அதிகமாக வருகை தருகின்றனர்.

இங்கு சுருளி வேலப்பர் கோயில், கோடி லிங்கக் கோயில் போன்ற வழிபாட்டுத்தலங்கள் உள்ளன.

இறந்தவர்களுக்கான இறுதிக்கடன்களில் ஒன்றான புண்ணியதானம் என்னும் நிகழ்வு இங்கு நடத்தப்படுகிறது.

இவ்விடத்திற்குச் செல்ல ஜூன் முதல் அக்டோபர் வரை உள்ள காலம் ஏற்றதாகும்.

 

குற்றாலம் அருவி

குற்றாலம் அருவி
குற்றாலம் அருவி

இவ்விடம் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களில் முக்கியமானது. இத திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசிக்கு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.

இவ்விடம் தென்னிந்தியாவின் ஸ்பா என்றழைக்கப்படுகிறது.

இங்கு மொத்தம் ஒன்பது அருவிகள் உள்ளன. அவை 1.பேரரருவி 2.சிற்றருவி 3.செண்பகாதேவி அருவி 4.தேனருவி 5.பாலருவி 6.புலிஅருவி 7.பழைய குற்றால அருவி 8.ஐந்தருவி 9.பழத்தோட்ட அருவி ஆகியவை ஆகும்.

தெற்கு மலை எஸ்டேட், படகுவீடு, குழந்தைகள் பூங்கா, மீன் பண்ணை ஆகியவை இவ்விடத்திற்கு அருகே அமைந்துள்ள சுற்றலாத் தலங்களாகும்.

அக்டோபர் நவம்பர் மாதங்களில் மழைப் பொழிவு அதிகமாக இருப்பதால் இவ்வருவிகளில் நீர் வரத்து மிகுதியாக இருக்கும்.

இவ்விடத்திற்குச் செல்ல ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலம் ஏற்றதாகும். இப்பருவம் குற்றால சீசன் என்றழைக்கப்படுகிறது.

 

கிளியூர் அருவி

 கிளியூர் அருவி

கிளியூர் அருவி

இவ்விடம் சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்த சேர்வராயன் மலையிலிள்ள ஒரு அருவியாகும்.

ஏற்காடு ஏரி நிரம்பி வழியும்போது 300 அடி உயரத்தில் இருந்து கிள்ளியூர் பள்ளத்தாக்கில் அருவியாக விழுகிறது.

படகுச் சவாரி செய்யும் இடமாகவும், நீந்தும் இடமாகவும் இது சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கிறது. மலையேற்றம் செய்யவும் சிறந்த இடமாக இது உள்ளது.

கோடைகாலத்தில் நீர் வரத்து கம்மியாக இருந்த போதிலும் அடிவாரத்தில் இருந்து பார்க்கும்போது மிகவும் ரம்மியாக இருக்கும்.

இவ்விடத்திற்குச் செல்ல அக்டோபருக்குப்பின் உள்ள காலம் ஏற்றதாகும்.

 

குட்லாம்பட்டி அருவி

குட்லாடம்பட்டி அருவி
குட்லாடம்பட்டி அருவி

இவ்விடம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த குட்டலாம்பட்டி கிராமத்தில் சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. வருடத்தில் ஐந்து முதல் எட்டு மாதங்களுக்கு இவ்வருவியில் தண்ணீர் வரத்து இருக்கும்.

சிறுமலையில் மலைபெய்யும் காலங்களில் இவ்வருவியில் தண்ணீர் கொட்டும். 89 அடி உயரத்தில் இருந்து விழும் இவ்வருவி பாதுகாக்கப்பட்ட காடுகள் பகுதியில் அமைந்தள்ளது.

இவ்விடம் அமைதியான சூழலில் தெள்ளத் தெளிவான நீரினைக் கொண்டு மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மதுரையிலிருந்து பேருந்துகள் இவ்விடத்திற்கு இயக்கப்படுகின்றன.

இம்மலையடிவாரத்தில் அமைந்தள்ள ரமணகிரி ஆசிரமம் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கிறது. இவ்விடத்தில் தியானப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இவ்விடத்திற்குச் செல்ல செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை உள்ள காலம் ஏற்றதாகும்.

 

திருப்பறப்பு அருவி

திருப்பறப்பு அருவி
திருப்பறப்பு அருவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்விடம் குமரிக்குற்றாலம் என்றழைக்கப்படுகிறது. இவ்விடம் நாகர்கோவிலிருந்து 42 கிமீ தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 55 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

கன்னியாகுமரியிலிருந்து பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களின் மூலம் இவ்விடத்தை அடையலாம். 50 அடி உயரத்திலிருந்து விழும் இவ்வருவி தமிழ்நாட்டில் பாதுகாப்பாக குளிக்கக்கூடிய அருவிகளில் ஒன்று.

படகுச்சவாரி இவ்விடத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வருவியின் சுற்றுச்சூழல் நடைபயண‌ம் மேற்கொள்ளவும், புகைப்படம் எடுக்கவும் சிறந்ததாக உள்ளது.

இங்குள்ள திருப்பறப்பு மகாதேவர் ஆலயம் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது.

இவ்விடத்திற்குச் செல்ல அக்டோபர் முதல் மார்ச் வரை உள்ள காலம் ஏற்றதாகும்.

தமிழ்நாட்டின் டாப் 10 அருவிகள் அனைத்தையும் கண்டு மகிழ்வோம்.

வ.முனீஸ்வரன்

 

3 Replies to “தமிழ்நாட்டின் டாப் 10 அருவிகள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.