உழவுக்குப் பின் உருண்டோடிக் கொண்டிருந்த
உலகம் மெல்ல ஏதேதோ
தின்று கொண்டிருக்க
தீர்ந்து கொண்டிருக்கிறது அவை…
நாகரீக அணிவகுப்புகளுக்கு
வழிவிட வேண்டி விரட்டிய
பாரம்பரிய பாதசாரிகளுக்கு
மாற்று வழியும் மறுத்தபடி
மாட்டி விடப்பட்டிருக்கிறது பதாகைகள்…
மெய்க்காப்பாளர்களின் பொய் விழிகளிலிருந்தும்
புறப்பட்டு வந்து பொத்தலிட்டுப் போகிறது
விசுவாச எஜமானின்
விலா எலும்புகளில் குண்டு…
படிமிதித்து யாசித்து முடி தரித்து
முழக்கமிட்டு விரிக்கும் கம்பளம் சிவப்பாக்க
குருதி கறக்கப்படுகிறது
குடிமக்களின் மடிகளில்…
நந்தனை விழுங்கியது ஏதுக்கென்றால்
ரகசியமெனச்
சொல்லிவிட்டுப் போகிறது
சிதம்பரத்துத் தீ…
திரியின் உறவுகளில் வியாபிக்கும் ஒளிகளில்
அடையாளப்படுத்திக் கொள்ளும் தீபங்களை
விழுங்கிவிட எண்ணுகையில்
ஊடுருவி உறைகிறது இருள்…
உனக்கென நானும் எனக்கென நீயுமெனும்
பரஸ்பரத்தில் பாழ்படலாம் உறவு
என்னை தின்று தீர்க்கும்
திமிர் கொண்ட உன்னால்!
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250