தேர்தல் பணி ஒரு சவாலான பணி. சில அடிப்படைப் பிரச்சினைகளைக் கவனித்துக் கொண்டால் தேர்தல் பணியை எளிதாக்கலாம். கட்டுரை அவற்றை விளக்குகிறது.
அன்பார்ந்த இனிது மின்னிதழ் வாசகர்களுக்கு வணக்கம்.
தேர்தலை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பது மக்களாட்சி முறையில் மிக முக்கியமான பொறுப்பு. நமது அரசு ஊழியர்கள் மிகச் சிறப்பாகத் தேர்தலை நடத்தி வருகின்றார்கள். அவர்களுக்கு மக்களின் சார்பாக வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கட்டுரையில் ஓர் ஆசிரியராகவும், வாசகனாகவும், என் கருத்துக்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகளோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
06-04-2021, செவ்வாய்க்கிழமை தமிழ்நாட்டிற்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் 05.04.2021 திங்களன்று மதியம் 12 மணிக்குள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதி வாக்கு பதிவு நடைபெறும் இடத்துக்கு சென்று விட்டால் நலமாக இருக்கும்.
முதலில் சென்றதும் தேர்தல் நடக்கவிருக்கும் கட்டிடத்தைச் சுற்றிப் பார்க்கவும். அது தங்களுக்கு ஒதுக்கப்பட்டது தானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். (இதற்காக மண்டல அலுவலரை தொடர்பு கொள்ளவும்)
கழிப்பறை, குளியலறை, மின்விசிறி, மின்சாரம் போன்றவை சரியாக உள்ளதா? என்பதை பாருங்கள்.
அங்கே உள்ள (VAO) கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தலையாரி அல்லது பஞ்சாயத்துக் கிளார்க், கிராமப் பணியாளரைத் தொடர்பு கொண்டு தங்களின் அடிப்படைத் தேவைகளை முதலில் பூர்த்தி செய்து கொள்ளவும்.
மண்டல அலுவலர் தேர்தல் நடத்த தேவையான பொருட்களோடு வருவார். அவர் வரும்பொழுது வாக்குச் சாவடியின் தலைமைத் தேர்தல் அதிகாரி (Proceeding Officer), வாக்குப்பதிவு அதிகாரி 1 (Polling Officer 1), வாக்குப்பதிவு அதிகாரி 2 (Polling Officer 2), வாக்குப்பதிவு அதிகாரி 3 (Polling Officer 3) என மொத்தம் நான்கு நபர்கள் இருந்து பொருட்களைச் சரிபார்த்து வாங்க வேண்டும்.
குறிப்பாக பேலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட், VVT Pack போன்றவை நமது வாக்குச்சாவடிக்கு உரியவை தானா என்பதை வாக்குச்சாவடி எண், பெயர் போன்றவற்றை அதில் எழுதியுள்ளார்களா? என்பதைச் சரிபார்த்து வாங்க வேண்டும்.
பேட்டரி சரியான நிலையில் உள்ளதா? என்பதை அவர்கள் முன்னிலையிலேயே தயவு செய்து சரி செய்யவும். (அவ்வாறு செய்வதால் கையோடு காரியம் முடியும். தவறுகள் நடந்தால் உடனே திருத்தி விடலாம்).
அதன் பின்னர் 17-A, 17-C, 49-M, 49-A, பச்சை கவர்கள், பிற ஆவணக் கவர்கள் கிரீன் பேப்பர் சீல், அவுட்டர் பேப்பர் சீல், ஆரோகிராஸ் மார்க், மெட்டல் சீல், பிற சீல்கள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, மை, பிளாஸ்டிக் டப்பா, மையை மணல் அள்ளி வைக்கும் பிளாஸ்டிக் டப்பா, வாக்குச்சாவடி (Voting Compartment) அமைப்பதற்கான அட்டை மற்றும் ஆணிகள் போன்றவற்றைச் சரி பார்த்து வாங்கவும்.
மிக முக்கியமான ஆவணங்கள்:
17 – A – ரிஜிஸ்டர்
புரோசிடிங் ஆபீசர் டைரி
விசிட்டர்ஸ் நோட்
மெட்டல் சீல்
கிரீன் பேப்பர் சீல்
டென்டர் பேலட் பேப்பர்
மார்க்கிடு காப்பி (17-A)
போன்றவற்றை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
05.04.2021 திங்கட்கிழமை இரவுக்குள் அனைவரும் அமர்ந்து அனைத்து பாரங்களையும் பூர்த்தி செய்துவிட வேண்டும்.
மறுநாள் காலை 06.04.2021 செவ்வாய்க்கிழமை காலை 5-30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு ஆரம்பிக்க வேண்டும்.
எனவே தேர்தல் நடத்துபவர்கள் அதிகாலை 5-00 மணிக்கே தயாராகிவிட வேண்டும். மாதிரி வாக்குப் பதிவு (Mock Poll) நடத்துவதற்கு முன்பு Control unit, VVAPAT, Ballot Unit சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரி பார்க்கவும்.
மாதிரி வாக்குப்பதிவு நடத்திய காகிதம் VVPAT-ல் விழும். அதை எடுத்து Mocked Poll சீலை பின்னால் வைத்து கறுப்புநிறக் கவரில் உள்ளே வைத்து பிளாஸ்டிக் டப்பாவுக்குள் வைத்து, அதன் உறைமேல் தேர்தல் நடத்தும் அதிகாரி கையொப்பமிட்டு முகவர் முன்னிலையில் மூடி வைத்திட வேண்டும்.
மாதிரி வாக்குப்பதிவு நடத்தி முடிந்தவுடன் மறந்து விடாமல் Close, Result, Clear பட்டன்களை அழுத்தி முடிக்கவும்.
வாக்குப்பதிவு ஆரம்பிக்கும் முன் வாக்குப்பதிவு இயந்திரத்தை மீண்டும் சரிபார்க்கவும். தேர்தல் ஆணையம் தனி செயலி (Mobile App) தருவார்கள். அதை நம் செல்போனில் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.
17 – A ரிஜிஸ்டரில் உள்ள பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையும், ஓட்டிங் மிசினில் உள்ள ஓட்டுகளின் எண்ணிக்கையும் சரியாக இருக்க வேண்டும்.
இதை தலைமைத் தேர்தல் அதிகாரி வாக்குச்சாவடி அதிகாரி 2, வாக்குச் சாவடி அதிகாரி 3 ஆகியோரிடம் கேட்டுக் கண்காணிக்க வேண்டும்.
தேர்தல் முடிந்தவுடன் மறந்து விடாமல் Close பட்டனை அழுத்தி பின்புறம் ஆப் செய்துதான் மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
கொரோனா காலம் என்பதால் கூடுதல் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும்.
நமது மாவட்ட நிர்வாகமும், மருத்துவத்துறையும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இந்தத் தேர்தலை நடத்துவதற்கு பல மாதங்களாக வருவாய்த்துறையும், மருத்துவத்துறையும் பம்பரமாகச் சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். காவல்துறையின் சேவையும் அற்புதம்.
நாம் அவர்களுக்குத் துணையாக இருந்து தேர்தலை சிறப்பாகவும் நேர்மையாகவும் நடத்த முழு ஆதரவு தர வேண்டும்.
மக்கள் பணியே மகேசன் பணி. நன்றி!
முனைவர் சொ.சிதம்பரநாதன்
பொருளாதாரத் துறைத்தலைவர்
இராசபாளையம் ராஜுக்கள் கல்லூரி
இராசபாளையம்
கைபேசி: 9486027221