அன்றைய
அந்தியின் வனப்பிற்கு
வெண்பற்களின்
சிரிப்பு
காணிக்கையானது!
பனி படர்ந்த
தீராப் பொழுதுகளில்
தென்றலுக்குக்
குவிந்தன வாழ்த்துக்கள்!
சிறு ஊடுருவல்களில்
பார்வைகள் தடுமாற
ஏதேதோ நர்த்தனங்கள்
நிகழ்ந்தன!
ஒன்றிணைத்துக் கொண்ட
ஒன்றிரண்டு என
எண்ணவியலாத
இனிமைச் சாரல்கள்
நனைத்துக் கொண்டிருந்தன!
அடர்ந்து திரிந்த
அனர்த்தங்கள் யாவும்
தலைக்கேறி குளிர்வித்ததாய்
ஞாபகக் கிணற்றில்
சுழல்!
வெண் சிறகுகளை
வீசியபடி பறந்த
மனப்பறவையின்
கனவுகளில்
மீட்டியது வீணை!
பெரும் ஊற்றுக்கள்
பொங்கியெழுதலில்
வெற்றிக்கணங்கள்
ஆடின
நிற்கா ஊஞ்சலில்!
பூச்சொரிந்த
பெரும்
உச்சி தருணங்களில்
உதிர்ந்து போகாது
பூத்துக் குலுங்கின
சிறு நந்தவனங்கள்!
அத்தகு வியக்கத்தக்க
பொழுதுகள்
நிலையில்லாமையில்
நிலை கொண்டு
தொலைந்து போயின!
பிறிதொரு கணத்தில்
புதிது புதிதாய்
வெவ்வேறு பொழுதுகள்!
எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com