மஞ்சள் மகிமை – ஜானகி எஸ்.ராஜ்

சமையலில் நாம் பயன்படுத்தும் மஞ்சள் பொடி வாசனைக்காகவும், சாம்பாரின் நிறத்திற்காகவும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

உண்ணும் உணவு ஜீரணமாக இந்த மஞ்சள் பொடி துணை புரிகிறது. அது மட்டுமா? மஞ்சளின் மகிமையை அறிந்தால் ‘மஞ்சளுக்கு இவ்வளவு சக்தியா?’ என வியந்து போவீர்கள்!

1.மஞ்சள் பொடியை நெய்யுடன் கலந்து உட்கொண்டால் இருமல் குணமாகும்.

2.காயம் ஏற்பட்டு ரத்தம் பீறிடும் போது காயத்தில் மஞ்சள் பொடியை வைத்தால் ரத்தம் வழிவது நின்றுவிடும். காயமும் விரைவில் ஆறிவிடும்.

3.முகப்பரு தொல்லையா? கவலையை விடுங்கள். பசும்பால் சேர்த்து மஞ்சள் பொடியையும், சந்தனத்தையும் குழைத்து பருக்களில் தடவுங்கள். முகப்பரு மாயமாய் மறைந்துவிடும்.

4.ஜலதோஷம், இருமலால் தொண்டையில் வலியா? சூடான பசும்பால், கருப்பட்டி அல்லது வெல்லம், மஞ்சள் பொடி ஆகியவைகளை கலந்து வெளிப்புறமாக தொண்டையில் தடவலாம்.

5.குடிக்கும் பாலில் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து அருந்த தொண்டை சம்பந்தப்பட்ட உபாதை மற்றும் ஜலதோஷம் நீங்கும்.

6.மூட்டுக்களில் வீக்கம், காயங்கள், சுளுக்கு போன்றவைகளுக்கு ‘சால்ட் பீட்டர்’ (நைட்ரஜன் உப்பு) என்கிற உப்பையும் மஞ்சள் பொடியையும் குழைத்து சூடாக்கி பாதிப்புள்ள இடத்தில் தடவினால் குணம் தெரியும்.

7.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது எண்ணெயில் மஞ்சள் பொடி சேர்த்து உடல் முழுவதும் தேய்க்க, தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வராது.

8.தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வராமல் தடுக்க மஞ்சள் பொடியையும், தேனையும் கலந்து உட்கொண்டால் பலனை உணரலாம்.

9.சொறி, சிரங்குகளுக்கு மஞ்சள் பொடியையும் எலுமிச்சைச் சாற்றையும் கலந்து தடவ நல்ல பலன் கிடைக்கும்.

10.அரிப்புடன் கூடிய வட்ட வடிவ தடிப்பு, தேமல் இருந்தால் மஞ்சள் பொடியையும், வேப்பம்பழ சதையையும் சேர்த்துக் குழைத்துத் தடவினால் மறைந்து விடும்.

இவைகள் மட்டுமின்றி பெண்கள் உபயோகிக்கும் மங்கலப் பொருளான குங்குமத்தில் மஞ்சள் சேர்க்கப்படுகிறது.

அம்மன் கோவிலில் மஞ்சளும் குங்குமமும் பிரதானமாகக் கருதப்படுகிறது. மங்கல வைபவங்களில் மஞ்சள் பிரதான இடம் வகிக்கிறது.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.